வெற்றிக் கதைகள்

தேனிச்சம்பா.. வருமானத்துல சீனிச்சம்பா..

தேனிச் சம்பாவை 30 வருஷமா விடாமப் பயிர் பண்ணிக்கிட்டிருக்கேன் என்றார் ஈரோடு மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லக்குமாரபாளையம் விவசாயி தங்கமுத்து.
குவியலாகக் கிடந்த மிளகாய்ப் பழங்களை பிரித்தபடியே பேசத் தொடங்கினார் தங்கமுத்து (அலைபேசி : 90475 72404) “குண்டு மிளகாய், குடை மிளகாய், உருண்டை, குட்டச்சம்பா, பெரியச் சம்பான்ன பல இரக மிளகாய் இருக்கு. எங்க மண்ணுக்கும், தண்ணிக்கும் மிதமான சீதோஷணத்துக்கும் தேனிச் சம்பா நல்லபடியாகவே கை கொடுக்குது. இந்தப் பகுதியில் மட்டும் 2,000 ஏக்கருக்கு மேல் தேனிச் சம்பா காய்ச்சிக் கிடக்கு.
“வைகாசிப் பட்டத்துல தான் தேனிச் சம்பா நல்லா வரும். ஒரு ஏக்கர்ல நடவு செய்றதுக்கு, நாலு பாத்தி நாத்து தேவைப்படும். வெளியில வாங்கினா 900 ரூபாய் ஆகும். பழுத்ததும் பறிச்சி வெயில்ல காய வெப்போம். ‘மொறுமொறு’ன்னு காய்ஞ்சதும் ரெண்டா கிள்ளினா விதைங்க ‘பொலபொல’ன்னு விழும். அப்படியே அள்ளி நாத்தாங்கால் பாத்தியில விதைச்சி, குச்சியை வெச்சி குறுக்கு நெடுக்கா கீறி விட்டா போதும். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும். வடிகால் வசதி இருக்கிற இடத்துல பாத்தி அமைக்கணும். விதைக்கறதுக்கு முன்ன பாத்திக்கு பத்து கிலோ அடியுரம் இறைத்து விடுகிறது நல்லது. மூணு நாளுக்கு ஒரு தண்ணி, இடையில் ஒரு கைக் களை மட்டும் போதும், 60 நாள்ல மிளகாய் நாத்து மிடுக்குக் காட்டி நிக்கும்.
கோழி எரு ஒரு டிராக்டர் கொட்டி, ரெண்டு உழவு பிடிச்சி, பத்து ஆட்கள விட்டுப் பார் வாய்க்கால் அமைச்சி, நிறையத் தண்ணி விட்டு, அது கண்டுனதும் ஒன்றரை அடிக்கு, ஒன்றரை அடி இடைவெளியில் செடிகளை நடணும். வைகாசி முதல் வாரத்துல நடவை முடிச்சிடணும். முதல் 75 நாளுக்குள்ள மூணு தடவை களை எடுக்கலாம். 75 நாளிலேயே காய் பறிப்புக்கு வந்துடும். தொடர்ந்து 120 நாளைக்கு காய்ப்பு கங்கணம் கட்டி நிக்கும். தேனிச் சம்பாவோட வயசு மொத்தம் 195 நாள். இதுல 120 நாளுக்கு மகசூல் கிடைக்கும். 20 நாளுக்கு ஒரு தடவைன்னு சுழற்சி முறையில ஆறு தடவை அறுவடை செய்யலாம். 5 முதல் 8 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும்.
பத்தாவது நாள், ரெண்டு மூட்டை டிஏபி உரத்தை அடியுரமா கொடுக்கணும். இருபதிலிருந்து முப்பது நாளுக்குள்ள ரெண்டு மூட்டை யூரியாவை செடிக்குச் செடி வெச்சித் தண்ணி பாய்ச்சணும். அதிலிருந்து இருபது நாள் இடைவெளியில 17:17:17 கலப்பு உரம் ஒரு தடவைக்கு இரண்டு மூட்டை வீதம் முணு முறை கொடுக்கணும்.
இலை முரணை, வெள்ளைப் பேன் இதெல்லாம் செடிகளைத் தாக்கும். இதுக்கு டைமெத்தேயேட் 500 மில்லியை 120 லிட்டர் தண்ணியிலக் கலந்து தெளிச்சாப் போதும் “பறிச்ச மிளகாயை ஒட்டன்சத்திரம் சந்தைக்குத் தான் அனுப்புறோம். இப்போதைக்கு கிலோ 8 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது கிணத்துல மட்டும் போதுமான தண்ணி இருந்தா போதும். தேனிச் சம்பா எங்களுக்கு சீனிச் சம்பாவா இனிக்கிற வெள்ளாமை தான்”  (தொலைபேசி : 04258-243409).
ஒரு ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்ய செலவு – வரவு கணக்கு (தங்கமுத்து)

விவரம் செலவு வரவு
உழவு 600
கோழி எரு 1 லோடு 3,000
இறைப்புக்கூலி 300
பாத்தி 500
விதை மற்றும் நாற்றாங்கால் 1,200
நடவு 400
களை 1,200
உரம் 4,000
பூச்சிமருந்து 1,500
பறிப்புக்கூலி (160 ஆள், ரூ. 80 வீதம்) 12,800
வேன் வாடகை (கிலோவுக்கு 60 பைசா) 4,800
சந்தைக் கமிஷன் 10,000
தண்ணீர்ப் பாய்ச்சுதல் 4,000
மகசூல் 8 டன் ரூ. 10 வீதம் 80,000
மொத்தம் 44,300 80,000
வருமானம் 35,700

“இந்தப் பகுதியில் உவர் தண்ணிதான் கிடைக்கும். அதை வெச்சு புகையிலை, பருத்தி சோளம்ன்னு வெள்ளாமை வெச்சோம். இந்த சமயத்துல தான் தேனீச் சம்பா இங்க அறிமுகமாச்சி. அதனால ஒவ்வொரு விவசாயித் தோட்டத்துலயும் முப்பது செம்மறி ஆடுகளுக்கு குறையாம இருக்கும். வெள்ளாமை முடிஞ்ச பிறகு, நாலஞ்சு மாசம் இந்த ஆடுகளை வெச்சிப் பட்டி போடுறோம். அதனால, ஏகத்துக்கும் சொட்டை இல்லாம ஆட்டு எரு நிலத்துல விழும். அப்புறம் நல்லா உழவு பிடிச்சி, அந்த நிலத்துல மிளகாய் நட்டு வெச்சாப் போதும். செடிகளுக்கு எதிர்ப்புச் சக்தியும் கூடும். யூரியா போடுறத கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக் கிட்டே வர்றேன். பூச்சி மருந்து தெளிக்கிற வேலையெல்லாம் எப்பவுமே கிடையாது. 8 டன் வரைக்கும் மகசூல் எடுக்கிறேன். பருவ நிலை மட்டும் கைவிடாம இருந்தாலே போதுமானது. ராகி, சோளம், புகையிலை தான் அதிகமா விதைப்பாங்க. வீட்டுச் செலவுக்காக புறக்கடையில காய்கறி போடுறப்ப, அதுல மிளகாய் செடியும் இருக்கும். தேனி விவசாயிக்கு கொடுத்த சீதனம் தான் இந்த மிளகாய் அதனாலயே ‘தேனிச் சம்பா’ங்கிற பேரு நிலைத்திருக்கிறது.


கொட்டிக் கொடுக்குது கொடை ஆரஞ்சு

உயரமான இடங்களில் வளர்வதோடு, தம்மை வளர்த்தெடுக்கும் விவசாயிகளையும் பொருளாதார ரீதியில் உயர்த்திக் கொண்டு தான் இருக்கிறது ஆரஞ்சு, தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என்று கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டருக்கும் உயரமான பகுதிகளில் வெள்ளாமை விவசாயிகளுக்கு அமுதசுரபியாகவே இருக்கிறது இந்த ஆரஞ்சு. அந்த வரிசையில், கொடைக்கானலை ஒட்டிக் கொண்டிருக்கும் தாண்டிக்குடி உள்ளிட்டப் பகுதிகளிலும் சக்கைப் போடு போடுகிறது.
தாண்டிக்குடியில் காபி, ஆரஞ்சு, அவகோடா, பலா, இஞ்சி என மலைப்பகுதி வேளாண்மை கொடி கட்டி பறக்கிறது. இங்கு விளையும் ஆரஞ்சுகள் கொடை ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு என அழைக்கப்படுகின்றன. இதனுடைய தோல், லேசாக உரித்ததும் கையோடு வந்துவிடுவதால் லூஸ் ஜாக்கெட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆரஞ்சு பழங்களில் சாறு அதிகம் இருப்பதோடு, இனிப்புச் சுவையும் கூடுதலாக இருப்பதால் விற்பனையில் இவை சக்கைப் போடு போடுகின்றன.
தாண்டிக்குடியின் மொத்த ஆரஞ்சு விளைப்பரப்பில், குறிப்பிடத்தக்க அளவுக்கு தன் வசம் வைத்திருப்பவர், இங்கே ஆரஞ்சு சாகுபடியில் பல ஆண்டகளாக ஈடுபட்டிருக்கும் கதிரேசன் (அலைபேசி : 94863 73767). பொதுவாக மலைப்பகுதிகளில் ரசாயன விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வரும் வித்தையைக் கற்றுக் கொண்டு, இயற்கை வேளாண்மை மூலம் ஆரஞ்சு விளைவிக்க ஆரம்பித்துள்ளார் இந்தக் கதிரேசன்.
“ இருபது ஏக்கர்ல ஆரஞ்சு சாகுபடி செய்றேன். ஊடுபயிரா காபி போட்டிருக்கேன். பல வருஷமா ரசாயன உரத்தைப் போட்டுத்தான் விவசாயம் செஞ்சிகிட்டிருந்தேன். இந்த நிலையில் பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, திண்டுக்கல்லுல போன வருஷம் நடந்த ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். அதுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சிருக்கேன்.

என்கிட்ட நாட்டு ரக மலைமாடுங்க கொஞ்சம் இருக்கு. அதுகளோட சாணம், மூத்திரத்தை வெச்சி ஜீவாமிர்தத்தை நானே தயாரிச்சி, தண்ணியோட சேர்த்துப் பாய்ச்சறேன். இதுக்காக தனியா டிரம்மெல்லாம் வெச்சி, குறிப்பிட்ட அளவு ஜீவாமிர்தம், பாசன நீர்ல கலக்கற மாதிரி சிலக் கருவிகளை நான் அமைச்சிருக்கேன். இப்பப் பயிர்கள்ல ஒரு தெளிவு தெரியுது.  மகசூல் கூடுதலா கிடைக்குது. இதெல்லாம் ஒரு பக்கமிருக்கு.. ரசாயன உரத்தோட செலவு குறைஞ்சி போனது கூடுதல் லாபம்.
என்கிட்ட இப்ப இருக்கிறது எட்டு வருஷ மரங்கள், முழுக்க இயற்கை முறையிலே சாகுபடி செய்றதுக்காகவே தனியா நாலு ஏக்கருல புதுசா ஆரஞ்சு நடப்போறேன். ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாறிட்டாலும், சாம்பல்நோய், பழ ஈ இது ரெண்டையும் சமாளிக்கறதுக்காக இன்னமும் நான் ரசாயன மருந்துகளைத் தான் பயன்படுத்தறேன். என்று சொல்லி இடைவெளி கொடுத்த கதிரேசன், அதைப் பற்றி விவரித்தார்.
“ஆரஞ்சு சாகுபடியை அதிகம் பாதிக்கறது சாம்பல் நோய், பழ ஈ இது ரெண்டும் தான். இதைக் கட்டுப்படுத்த ரசாயன முறையில் கந்தகப் பவுடரை ஒரு ஏக்கருக்கு பத்து கிலோ தூவுவாங்க. அல்லது நனையும் கந்தகத்தை தண்ணியில கலந்து தெளிப்பாங்க. அடுத்தது, பழ ஈ இதுங்களோட தாக்குதல் காரணமா அதிகளவு பழம் சேதமாகும். இதைக்கட்டுப்படுத்த கருவாட்டுப் பொறி வைப்பாங்க. அதாவது, பிளாஸ்டிக் பையில் தண்ணியை ஊத்தி, அதுல டைக்ளோர் வாஷ் மருந்தை பஞ்சுல நனைச்சி உள்ளே போட்டுடுவாங்க. பாக்கெட் மேலே கருவாட்டுத் துண்டைக்கட்டி, பையின் பக்கவாட்டில் நாலைந்து ஓட்டைகளைப் போட்டு, ஒரு ஏக்கர் நிலத்தில் இருபது இடங்களில் கட்டித் தொங்க விட்டுட்டா.. கருவாட்டு வாசனைக்காக அதைத் தேடி ஓடுற ஈயெல்லாம், பாலித்தீன் துளை வழியா பைக்குள்ள புகுந்து, அந்த மருந்தை சுவாசிச்சு இறந்துடும்.
இதைத்தான் நானும் செய்துகிட்டிருந்தேன். ஆனா, ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறின பிறகு ‘சுக்கு அஸ்திரா’ கரைசல் பயன்படுத்தினேன். ஆனா, எதிர்பார்த்த நனையும் கந்தகம், கருவாட்டுப் பொறி இதைத்தான் இப்போதைக்கு பயன்படுத்திக்கிட்டிருக்கேன். சுக்கு அஸ்திராவை நான் தயாரிச்ச விதம் சரியில்லையா.. இல்ல, சாம்பல் நோய், பழ ஈ இது ரெண்டையும் விரட்ட, ஜீரோ யோசனை இருக்கான்னு தெரியல.. அதைப் பத்தி பாலேக்கர்கிட்ட கேட்டுச் சொன்னா, புண்ணிமயமாப் போகும். (பார்க்கப் பெட்டிச் செய்தி)
பூச்சி, நோய்க்குத்தான் இப்போதைக்கு வழி தெரியல.. மத்தபடி ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் மூலமா.. ஆரஞ்சுல நல்ல மகசூல் பார்க்கிறேன். அதேபோல, இந்த சுக்கு அஸ்திரா ஆரஞ்சுக்கு கைக்கொடுக்கலையே தவிர, காபிக்கு நல்லாவே பயன்படுது.  பயிர் ஊக்கமா வளர்றதோட, செடியில காயும் நிறையப் பிடிச்சிருக்கு என்றவர், ஆரஞ்சு சாகுபடி பற்றியப் குறிப்புகளைச் சொன்னார். அவை.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலம் தான் ஆரஞ்சு நடவுக்கு மிகவும் ஏற்ற காலமாகும். இந்தப் பருவத்தில் கிடைக்கும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை, பயிர்கள் வளர உதவியாக இருக்கும். ஒட்டுக் கன்றுகள் மூலமோ அல்லது நாற்றுக்கள் மூலமோ ஆரஞ்சு நடவு செய்யலாம். தடியன் குடிசை என்ற இடத்தில் இருக்கும் தோட்டக்கலை அலுவலகத்திலும் நாற்றுக்கள் கிடைக்கும். அரசுப் பண்ணைகளில் ஒரு நாற்று பத்து ரூபாய் விலையில் ஆரம்பித்து, வெவ்வேறு விலையில் கிடைக்கிறது. நம் தோட்டத்தில் இருக்கும் மரங்களிலேயே அதிக மகசூல் கொடுக்கும் மரங்களிலிருந்து விதைகளை எடுத்து நாற்று தயார் செய்வதன் மூலம், நாற்றுக்களை வெளியில் வாங்கும் செலவை
க் குறைக்கலாம். நாற்றுக்களாக நடவு செய்து மரங்களை வளர்த்தெடுத்தால், நீண்டகாலம் மகசூல் கிடைக்கும். அதே சமயம், ஒட்டுக் கன்றாக நடவு செய்யும் போது குறுகிய காலத்திலேயே மகசூல் முடிந்துவிடும். ஆனால், ஒட்டுக்கன்று முறை மூலம் மகசூல் அதிகமாகக்  கிடைக்கும். ஆரஞ்சு மட்டுமே நடவு செய்து தனித் தோப்பாக பராமரிக்கலாம். ஊடுபயிர் செய்யும் போது கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, காபியை ஊடுபயிர் செய்யும் போது நல்ல வருமானம் கிடைக்கும்.


பிரமாதமான பிரமிடு பந்தல் விவசாயத்தில் பலே யுக்தி

திண்டுக்கல் மாவட்டம், மெட்டூரைச் சேர்ந்த வேலுச்சாமி (அலை பேசி: 97872 59142) அவரைக்காய் சாகுபடி செய்து கொண்டிருக்கும் இவர், அது பிரமிடு பந்தல் ஒரு சென்ட் நிலத்தில் பிரமிடு வடிவப் பந்தலை ஏற்படுத்தி, அதில் அவரை விதைத்து இயற்கை முறையில் பராமரித்து லாபம் பார்ப்பதோடு, அந்தப் பந்தலுக்குள்ளேயே ஆடு, கோழிகளையும் வளர்த்து வருகிறார் வேலுச்சாமி.
கனகாம்பரம், கடலை, மக்காச்சோளம்ன்னு வெள்ளாமை பண்ணினேன். ஆரம்பத்துல ரசாயன உரத்தையும், மருந்தையும் பயன்படுத்தினேன். 2005 ஆம் வருஷத்திலிருந்து இயற்கை முறையில விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன்.
அவரை, திராட்சை, பீர்க்கன், புடலை, பாகல்ன்னு எல்லாவிதமான பந்தல் வெள்ளாமையையும் இந்த பிரமிடு பந்தல் மூலமா செய்யலாம். குறைஞ்ச இடத்துல மூணு மடங்கு வருமானம் கிடைக்கறதோட, உழைப்பும் குறையுது. இந்த முறையில பந்தல் அமைக்க, 5,000 ரூபாய் வரை தான் செலவு. ஒரு தடவை அமைச்சிட்டா குறைஞ்சுது பத்து வருஷத்துக்குப் பிரச்சனை இல்லை. நடைமுறையில ரெண்டு சென்ட் இடத்துல  கிடைக்குற மகசூலை, பிரமிடு பந்தல் முறையில் ஒரு சென்ட் இடத்துலயே எடுக்கலாம் என்ற நம்பிக்கையாகப் பேசியவர், தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களை பாடமாகப் படித்தார்.
பிரமிடு பந்தல் தயாரிப்பது எப்படி ?
குறிப்பிட்ட நிலப்பகுதியைத் தேர்ந்தெடுத்து 21 அடிக்கு 21 அடி அளந்து கொண்டு, ஒவ்வொரு மூலையிலும் கருங்கல் தூண்களை நடவேண்டும்.  ஒவ்வொரு தூணுக்கும் இடையில், இன்னொரு தூண் தேவைப்படும். எட்டுத் தூண்களில் இருந்தும் கம்பிகளைக் கட்டி, 60 டிகிரி கோணத்தில் இரும்புக்குழாயின் உச்சியில் அவற்றைக் கட்டவேண்டும். நன்றாகக் கட்டிவிடவேண்டும் நான்க சமபக்க முக்கோண வடிவத்தில் பிரமிடு பந்தல் தயார்.
ஆவணிப்பட்டம் அமோகம்!
பந்தலின் நான்கு மூலைகளிலும் மூன்று அடி நீளம், அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழியெடுத்து, மக்கிய தொழு உரத்தைப் போட்டு, விதைகளை நடவு செய்யவேண்டும். அவரையைப் பொறுத்தவரை  நடவு செய்தால், இரண்டு மாதத்தில் காய்களை எடுக்கலாம். கொடி வேலையும் குறைவு. அதிகக் காய் பிடிக்கும். மாசியில் நடவு செய்தால், காய் எடுக்க நான்கு மாதங்களாகும். வேலைப்பாடு அதிகம். ஆனால், காய்க்கு விலை அதிகமாகக் கிடைக்கும்.
ஆவணியில் நடவு செய்தால், புரட்டாசியில் பந்தல் முழுக்க கொடி அடைத்துக் கொள்ளும். எழுபதாவது நாளில் காய் பறிப்புக்குத் தயாராகிவிடும். பிரமிடு பந்தல் முறையில் கொடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைப்பதால் நோய்த் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஏதாவது நோய் தாக்கினாலும் மஞ்சள்பொடி, சாம்பல் இந்தப் பந்தல் கோபுரம் போல இருப்பதால், நிழலானது ஒவ்வொரு பக்கமும் மாறி மாறி கிடைக்கும். குடத்தில் கொண்டு சென்று ஊற்றினால் கூட போதும. 70ம் நாளில் காய் பறிப்பு ஆரம்பித்து, ஆறு நாளைக்கு ஒரு தடவை என்று ஆழு மாதங்களுக்கு மகசூல் தொடரும். முதல் பறிப்புக்கு பத்துக் கிலோ கிடைக்கும். அது படிப்படியாக உயர்ந்து ஐந்தாவது பறிப்பின் போது 25 கிலோ வரை கிடைக்கும். மாதத்துக்கு ஐந்து பறிப்பு வீதம் 25 கிலோ அளவில் முதல் மூன்று மாதங்களுக்கு பறிக்கலாம். ஒரு சென்ட் நிலத்தில் ஒரு பட்டத்துக்கு  சராசரியாக 500 கிலோ மகசூல் கிடைக்கும். அவரைக்காய் சில நேரங்களில் கிலோ 25 ரூபாய் வரைக்கூட விலைபோகும். சமயங்களில் பத்து ரூபாய் என்று குறைந்துவிடும். குறைந்தபட்ச தொகையான பத்து ரூபாயை வைத்துக் கணக்கிட்டாலே ஒரு சென்ட் நிலத்தில் 5,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதுவும் இயற்கை முறை விவசாயம் என்பதால் செலவு 500 ரூபாய்க்குள் தான் ஆகும். மற்றபடி எல்லாமே லாபம்தான்.
அடடே ஆடு, கோழி
கொடிகள், பிரமிடு பந்தலை அடைத்தவுடன், பந்தலுக்குள்ளேயே நல்ல நிழல் கிடைக்கும். இதில் ஆடுகளைக் கட்டி வளர்க்கலாம். கொடிகளை கவாத்து செய்துபோடும் இலைகளை ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். ஆடுகளின் கழிவுகளைக் கொடிகளுக்கு உரமாகப் போடலாம். ஒரு சென்ட் இடத்தில் அமைக்கப்படும் பிரமிடு பந்தலுக்குள் இரண்டு ஆடுகள் மற்றும் ஐந்து கோழிகளை வளர்க்கலாம். இதன் மூலம் நமக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும். விதைக்கும் சமயமாகப் பார்த்து, இரண்டு ஆட்டுக்குட்டிகளை 1,500 ரூபாய்க்கு வாங்கிவிட்டால், அறுவடை முடியும் சமயத்தில் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ரூபாய் வரை விலைபோகும். 15 ரூபாய் விலையில், நாட்டுக்கோழிக் குஞ்சுகள் ஐந்து வாங்கி விட்டால், ஆறு மாதத்தில் ஒவ்வொன்றும் ஒன்றரை கிலோ அளவுக்கு வளர்ந்து விடும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்றால் 750 ரூபாய் கிடைக்கும். இந்த ஆறு மாதத்தில் கோழிகள் மூலமாகக் குறைந்தது 50 முட்டைகள் கிடைக்கும். நாட்டுக்கோழி முட்டை 5 ரூபாய் என்று விலைப்போகும். இதன் மூலம் 250 ரூபாய் வருமானம் கிடைக்கும். வீட்டுக்குப் பக்கத்துல சும்மா இருக்கிற ஒரு சென்ட் நிலத்தைச் சரியா பராமரிச்சா வருஷத்துக்கு 7,500 ரூபாய் வரைக்கும் வருமானம் பார்க்கலாம்.
நடைமுறைப் பந்தலை மிஞ்சும் பிரமிடு
நிலத்தை உழுது பார் பிடிச்சி, ஒன்றரை அடி இடைவெளியில விதையை நடணும். வரிசைக்கு வரிசை பத்தடி இடைவெளி தேவை. நாலு நாளைக்கொரு தண்ணீர்க் கட்டினாப் போதும். கொடி முளைச்சதும் ஊற வெச்ச கடலைப் புண்ணாக்கை (10 கிலோ) தண்ணியில கலந்து விடணும். 25 நாள்ல பந்தல் கொடி ஏறினதும் காம்ப்ளக்ஸ் உரம் பத்து கிலோவை தண்ணியில கலந்து விடுவேன். இடையில யூரியா ஒரு பத்து கிலோவை தண்ணியில கலந்து விடுவேன். செடியில செல் விழுந்தா மோனோகுரோட்டோபாஸ் அடிப்பேன்.
ஐப்பசியில ஆரம்பிச்சி தை வரைக்கும், நிறையக் காய் கிடைக்கும். அதுக்குப் பிறகு குறைய ஆரம்பிச்சிடும். ஒரு எடுப்புக்கு 100 கிலோ காய் வரைக்கும் வருது. மொத்தமா சேத்தா சராசரியா 2,000 கிலோ ரூபாய்க்கு போட்டாலும் இருபதாயிரம் கிடைக்கும். குத்தகைப் பங்கு 5 ஆயிரம் ரூபாய் போக, 10 ஆயிரம் ரூபாய் வரும்படி கிடைக்கும். 15 சென்ட் நிலத்தில் சாகுபடி செலவு வரவு

விவரம் செலவு வரவு
உழவு 500
விதை (அரைக்கிலோ) 50
பார் பிடிக்க 300
நடவு 180
இலைக்கிள்ளக்கூலி 660
களை 300
கடலைப்புண்ணாக்கு 210
உரம், மருந்து 500
காய் எடுப்புக்கூலி 1,200
தண்ணீர் கட்டக் கூலி மற்றும் போக்குவரத்துச் செலவு 1,100
நில குத்தகைச் செலவு 5,000
அறுவடை ரூ. 10 வீதம் மொத்தம் 2,000 கிலோ 20,000
மொத்தம் 10,000 20,000
நிகர லாபம் 10,000

ஒரு சென்ட் நிலத்தில் பிரமிடு பந்தல் முறையில் அவரைப் பயிரிட செலவு வரவுக் கணக்கு

விவரம் செலவு வரவு
கல்தூண் (நான்கு) 800
கம்பி 2,000
மையக்குழாய்,வெல்டிங் சேர்த்து 500
பந்தல் அமைக்கக் கூலி 1,700
ஆட்டுக்குட்டிகள் (இரண்டு) 1,500
கோழிக்குஞ்சுகள் (ஐந்து) 75
பராமரிப்பு
அவரை மொத்த அறுவடை ரூ. 10 வீதம் 500 கிலோ 5,000
ஆடு விற்பனை மூலம் 4,000
கோழி விற்பனை மூலம் 750
முட்டை மூலம் 250
மொத்தம் 7,075 10,000
நிகர லாபம் 2,925

இதில் பந்தல் அமைக்கும் செலவு ரூ. 5,000 ஒரு முறை செய்யும் முதலீடுதான். அடுத்த ஆண்டிலிருந்து இந்த 5,000 ரூபாய் வருமானத்தில் சேர்ந்து விடும்.
பட்டமும் அறுவடையும்
கோழி அவரை, பெல்ட் அவரை, பட்டை அவரை என அவரையில் பல வகைகள் உள்ளன. நிலப்பரப்பிலும். மலைப்பகுதிகளிலும் இவைப் பயிரிடப்படுகின்றன. அனைத்து மாதங்களிலும் நடவு செய்யலாம் என்றாலும், ஆவணிப் பட்டம் தான் சிறந்தது. இந்தப்பட்டத்தில் நடும் போது கொடி வேகமாக வளர்ந்து, இரண்டு மாதத்தில் மகசூல் கொடுக்கும். இதுவே மாசிப்பட்டமாக இருந்தால், கொடி வளர்வதற்கு நான்கு மாதங்கள் ஆகும். ஒரு ஏக்கரில் நடவு செய்ய மூன்று கிலோ விதைகள் தேவைப்படும்.
அவரையைப் பொறுத்தவரை பட்டத்துக்கு ஏற்ப அறுவடைக் காலம் மாறும். சித்திரைப்பட்டம் என்றால், 110 நாட்களில் அறுவடை ஆரம்பிக்கும். வைகாசி கடைசி அல்லது ஆனியில் அமையும் பட்டத்துக்கு 100 நாட்கள், ஆடிப்பட்டத்துக்கு 90 நாட்கள், ஆவணி அல்லது புரட்டாசிப் பட்டத்துக்கு 70 நாட்கள், மாசிப் பட்டத்துக்கு 120 நாட்கள் என்று அறுவடை அமையும்.


புல்லுக்காட்டுல கொள்ளை லாபம்

நாகர்கோவிலில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது காளக்குடி, ‘ராம்ஜி கார்டன்’ தான் ராமச்சந்திரனின் புல்தோட்டம். ஆறு ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது இவரது தோட்டம். ஐம்பத்து ஐந்து வயது பெரியவரான ராமச்சந்திரன், பள்ளிப் படிப்பையே தாண்டாதவர். இன்று சுயதொழில் மூலமாக அமோக வருமானம் ஈட்டி, பலரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
எனக்கு நாலு நர்சரி கார்டன் இருக்கு. அதுல செடி வாங்க வர்றவங்க, புல் தரை வளர்க்கணும்னா என்ன பண்ணணும்ன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அப்பத்தான் நாமளே புல்லையும் வளர்த்துப் பார்த்தா என்னனு ஒரு யோசனை வந்துச்சி. அதைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன். பெங்களூர் தான் புல் வளர்ப்புல சிறப்பா இருக்குன்னு கேள்விப்பட்டேன். நேரடியா அங்கப் போனேன். விதைப்புல் வாங்கிட்டு வந்து முதல்ல ஒரு ஏக்கர்ல்ல போட்டுப் பார்
த்தேன். சீக்கிரமே புல் வளர்ப்பு எனக்கு பிடிபட்டுப் போகவே, இன்னிக்கு ஆறு ஏக்கர்ல வளர்க்கற அளவுக்கு நான் வளர்ந்துட்டேன்” என்ற சொல்லிச் சிரித்த ராமச்சந்திரன், தொடர்ந்தார்.

இந்தப்புல்லை மண்ணோடு சேர்த்து சதுரம் சதுரமான வெட்டி எடுத்துத் தேவையான வீடுகளுக்கு கொண்டு போய் பதிச்சிக்கலாம். ஒரு சதுர அடி புல் வளர்க்க ஐந்திலிருந்து ஆறு ரூபாய் வரைக்கும் செலவு பிடிக்கும். தோட்டத்திலேயே வித்தா பத்து ரூபாய்க்கும், வீடுகளுக்குப் போய் பதியவெச்சிக் கொடுத்தா இருபது ரூபாயும் வாங்குறோம். இதுலயே எங்களுக்கு போதிய லாபம் கிடைக்குது. ஒரு ஏக்கர்ல முணு மாசத்துக்கு ஒரு முறை முப்பதாயிரம் ரூபாய் வரை புல் விக்க முடியும்.

இப்போல்லாம் வீடு கட்டுற எல்லாருமே தோட்டம் வெக்க ஆசைப்படுறாங்க. அதனால புல் வளர்ப்பு ஏகத்துக்கும் லாபம் தரும் விவசாயமாத்தான் இருக்கு. ஆனா, தேவையான அளவுக்கு நம்ம பகுதிகள்ல புல் வளர்ப்பு நடக்கல. அது தான் விலை அதிகமா இருக்கக் காரணம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு பலரும் புல் வளர்க்க ஆரம்பிச்சா நல்ல லாபம் பார்க்கலாம் என்று ஆலோசனைகளைச் சொன்னார்.
முத்தின, பழுப்பு நிறமான புல் தான் விதைக்கறதுக்கு சரியானது. அதைத் தேரிமணல் (செம்மண்ணில் ஒரு வகை) நிலத்துல தூவி, அது மேல் தேரிமணலை பரப்பி, இலை தழைகளை உரமாப் போட்டு தண்ணி பாய்ச்சிகிட்டு வந்தா போதும். ஒரு சதுர அடியில தயார் செய்ற விதைப்புல்லை, அஞ்சி சதுர அடியில நடமுடியும். தினமும் மூணு வேளை தண்ணி பாய்ச்சிகிட்டே வந்தா மூணு மாசத்துக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராகிவிடும். இது தான் புல் விவசாயம்.

வீடு கட்டுறது தொடர்ந்து நடக்கறதால புல் வளர்ப்புக்கு எல்லாக் காலத்துலயும் தனி மவுசு இருக்கு. ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் வெச்சிருக்கிறவங்க கூட துணிஞ்சி புல் வளர்க்கலாம். ஆனா சம்பந்தப்பட்ட ஏரியாவுல எப்படியெல்லாம் விற்பனை வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுல இறங்குறது நல்லது.
நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பாயுமாம் என்பார்கள். ராமச்சந்திரனோ, புல்லுக்கே நீர்ப் பாய்ச்சி நெல்லை விட லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது சந்தேகமில்லாமல் சாதனை தானே !
தொடர்புக்கு
தொலைபேசி
04652-265030
அலைபேசி
93675-11413


மலைக்க வைக்கும் மலைத் தோட்ட விவசாயம்

ஒரு ஏக்கர் நிலமும், தண்ணீர் வசதியும் இருந்தால், நடவு செய்த நான்காவது மாதத்திலிருந்து வாரம்தோறும் வருமானம் பார்க்கலாம். நோய்  தாக்குதல் அதிகம் இருக்காது என்பதோடு, மலைத்தோட்டப் பயிர்களில் அதிகப் பராமரிப்பு தேவைப்படாத ஒன்றாக இருப்பதாலும் முக்கியப் பயிராக விளங்குகிறது செளசெள.
திண்டுக்கல்லை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றி மலைப் பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. சிறுமலையிலிருக்கும் பழையூரைச் சேர்ந்த அய்யப்பன் (தொலைபேசி : 0451 2558381) செளசெள விவசாயத்தில் தன்னுடைய அனுபவத்தை எடுத்து வைக்கிறார்.
செளசெள காயைப் பொறுத்தவரை ஒவ்வொரு  மலைப்பகுதிகளிலும் ஒவ்வொரு பருவத்திலும் நடுவார்கள். சிறுமலையில அக்டோபர் மாதம் நடவு செய்தால் ஜனவரியில் காய் வரும். சமவெளிப் பகுதியைப் போல இங்கே உழவு செய்ய முடியாது. நிலத்தில் இருக்கும் புதர்களை நீக்கிவிட்டு 15 அடிக்கு 15 அடி இடைவெளியில இரண்டடி ஆழ, அகலத்தில் குழி எடுத்து.. பத்து நாளைக்கு ஆறப்போடவேண்டும். ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 200 குழி வரும். குழி எடுப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே விதைக்கான காய்களை கொடியிலிருந்து எடுத்து.. பதியம் போட்டு வைக்கவேண்டும்.  முற்றியக் காய்களைப் பறித்து, மேடான இடத்தில் பாத்தி அமைத்து மண்ணைப் போட்டு மூடிவிட்டால் இது தான் பதியம். நான்காவது நாள் முளை விட்டுவிடும். பத்து நாட்களுக்குள் வசதிக்கு ஏற்றாற்போல அவற்றை எடுத்து நடவு செய்யலாம். காயை உரிய நேரத்தில் அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டு விட்டால் சில தினங்களில் தானாக முளைப்புத் தோன்றும். அவற்றை அப்படியே எடுத்தும் நடவு செய்யலாம். குழிக்கு நான்கு காய்கள் வீதம் நடவேண்டியிருக்கும். ஆனால், பதியம் போடும் போது மூன்று காய்களை நடவு செய்தாலே போதும். அத்துடன் முளைப்புத் திறனும் அதிகமாக இருக்கும்.
தோண்டி வைத்தக் குழி நன்கு ஆறிய பின் ஐந்து கிலோ வீதம் எருவைப்போட்டு, பிறகு விதைக்காயை போட்டு மூடி, தண்ணீர் விடவேண்டும். மூன்று நாட்களுக்கொரு தடவை தண்ணீர் அவசியம். நடவு செய்த ஐந்தாவது நாளில் முளைவிடும். பத்து நாளில் கொடி தரையில் படர ஆரம்பிக்கும். குச்சிகளை ஊன்றி கொடியை அதில் ஏற்றி விடவேண்டும். அதன் பிறகு பந்தலை போட்டு வைத்தால், கிட்டத்தட்ட எழுபத்தைந்தாவது நாளில் பந்தலைத் தொட்டுவிடும். (ஒரு தடவை பந்தல் போட்டால், ஐந்து வருடங்களுக்குத் தொடர்ந்து சாகுபடி செய்யலாம்.
கொடி தழையத் தொடங்கியதும் அதன் தூரை (அடிப்பாகம்) சுற்றி நான்கு அடிக்கு சதுர பாத்தி எடுக்கவேண்டும். பந்தல் முழுக்க கொடி படரும் காலம் வரை இரண்டு களை எடுக்கவேண்டும்.  நடவு செய்த 45 நாட்களுக்குப் பிறகு மாதம் ஒரு தடவை வீதம் மூன்று மாதங்களுக்கு 200 கிராம் வீதம் யூரியாவை குழிகளில் வைக்கவேண்டும். நான்காவது மாதத்தின் தொடக்கத்தில் அரைக் கிலோ கலப்பு உரம் வைக்கவேண்டும். அதைத் தொடர்ந்து 21 நாளைக்கு ஒரு தடவை 200 கிராம் யூரியா கொடுக்கவேண்டும். பந்தலில் கொடி அடர்த்தியாக படர்ந்தபிறகு, 45 நாட்களுக்கு ஒரு தடவை பழுத்த இலைகளைக் கிள்ளி எடுப்பது முக்கியம். ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட முப்பது ஆட்கள் வரை தேவைப்படும். சில சமயம் செளசெள ஈ வந்து உட்காரும். இதற்கு நுவாக்ரான், பெவஸ்டின் இரண்டு மருந்தையும் அடிக்கலாம். பிஞ்சுகள் வெம்பிக் கொட்டிவிடும். இதைத்தடுக்க உரக்கடையில் கிடைக்கும் நுண்ணூட்டச்சத்துக்களை வாங்கிப் போடவேண்டும்.

நடவு செய்த 100வது நாளில் பூக்கத் தொடங்கி, 120வது நாளில் காய் அறுவடைக்கு வந்துவிடும். அன்று தொடங்கி எட்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறைக் காய் பறிக்கலாம். மொத்தம் ஒரு சாகுபடி பறிப்புத் தொடங்கிய முதல் நாலு மாதங்களைவிட, அடுத்த நான்கு மாதங்களில் விளைச்சல் கொஞ்சம்  குறையும் .
ஒரு பறிப்புக்கு ஒரு ஏக்கரிலிருந்து சராசரியாக 40 சிப்பம் (முப்பது கிலோ மூட்டை) வரைக்கும் எடுக்கலாம். சிப்பம் குறைந்தபட்சம் 80 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 350 ரூபாய் வரை போகும். சராசரி விலை ரூ. 175 கிலோக் கணக்கில் சொன்னால் 4 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகும். மொத்த மகசூல் 27 டன்.  செலவெல்லாம் போக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை ஒரு ஏக்கரிலிருந்து லாபம் பார்க்க முடியும்.

பண்ணைக்காடு விவசாயி விவேகானந்தன் (அலைபேசி: 94862 08018) இதைப்பற்றிச் சொல்லும் போது, எனக்கு பதினேழு ஏக்கர்ல விவசாயம். காபிதான் வெள்ளாமை. அதுக்கு ஊடுபயிரா ஆரஞ்சு, மிளகு, வாழை, சீத்தா, கொய்யான்னு பலதையும் போட்டிருக்கேன். மூணு ஏக்கர்ல தனியா செளசெள இருக்கு. சிறுமலையில இருந்து தான் எங்களுக்கு விதைக்காய் வருது. அங்க புரட்டாசி மாசம் நடுவாங்க. நாங்க பங்குனியில நடுவோம்.  சிறுமலையில விடக் காய் அளவ கொஞ்சம் பெருசா இருக்கு. இதனால எடைக் கூடுதலா இருக்கும். லாபமும் அதிகமா கிடைக்குது. இங்க விளையறதெல்லாம் திருநெல்வேலிக்குத்தான் போகுது.

நாங்க எடைக்கணக்கு போட்டுத்தான் விற்பனை செய்வோம். நாலாவது மாசத்திலிருந்து வாரத்துக்கு ஒரு அறுப்பு. சராசரியாக அறுப்புக்கு ஒண்ணரை டன்னுக்கு கொறையாம மகசூல் கிடைக்கும். மொத்தமா பார்த்தா, 40 டன்னுக்குக் கொறையாது. கிலோ சராசரியாக ஆறு ரூபாய்க்கு போகும். 40 டன்னுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் வரைக்கும் கிடைக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s