வெற்றிக் கதைகள்-11(விவசாயம்)

 

பாடு இல்லாமல் பலன் கொடுக்கும்  பாக்கு…
செயற்கையில் ரூ.4,200 இயற்கையில் ரூ.7,500
ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள மண் வளம், நீர்வளம், தட்பவெப்ப நிலை… ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில்தான் அந்தந்தப் பகுதிகளில் விவசாயம் அமையும். இதில், ஊடுபயிர்களும் விதிவிலகல்ல. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கேற்ற பயிர்களில் ஒன்று பாக்கு. இம்மாவட்டத்தில் பலரும், தனிப்பயிராகவும். தென்னைக்கு இடையில் ஊடுபயிராகவும் பாக்கு சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்… வில்சன் ராஜப்பன்.
நாகர்கோவில் –சுருளங்கோடு சாலையில் பதினெட்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, அருமநல்லூர் கிராமம். திரும்பிய பக்கமெல்லாம் கவால் வீரர்கள் போல வரிசை கட்டி நிற்கின்றன தென்னை மரங்கள். இங்குதான், வில்சன் ராஜப்பனின் பாக்குத் தோட்டம்.
எங்க குடும்பத்திற்கு பூர்வீகத் தொழில் விவசாயம்தான். முக்கால் ஏக்கரில் பாக்கும், அதற்கு ஊடுபயிராக ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கிறேன். இது போக நிறைய தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்தும் வாழை விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். பாக்குக்கு  அதிக தண்ணீர் தேவை என்பதால் வாய்க்கால் பாசனம்தான்.
இவ்வளவு நாள் ரசாயன விவசாயம்தான் செய்து கொண்டிருந்தேன். கொஞ்ச நாளாகத்தான் இயற்கை விவசாயத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் முழுசாக இயற்கைக்கு மாறவில்லை. ஆனால், ரசாயனத்தைப் படிப்படியாக குறைத்து கொண்டிருக்கிறேன் என்றார்.
60 நாள் நாற்று
மணல் கலந்த அனைத்து மண் வகையும்…. பாக்கு சாகுபடிக்கு ஏற்றவை. ஜாவா, நாடன் ஆகிய இரண்டு ரகங்கள்தான் பெரும்பாலும் இங்கே நடவு செய்யப்படுகின்றன. ஜாவா ரகம் 20 ஆண்டுகளும், நாடன் 50 ஆண்டுகளும் பலன் கொடுக்கின்றன. தரமான நாற்றுகளை உற்பத்தி செய்துதான் நடவு செய்ய வேண்டும். சித்திரை மாதம் தான் நடவுக்கு ஏற்ற மாதம். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நாற்றுத் தயாரிப்பில் இறங்க வேண்டும். நாற்றங்காலுக்காக, பத்து அடி நீளம், பத்து அடி அகலத்தில் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். பழுத்து அழுகாத நிலையில் உள்ள  500 தரமான பாக்குகளை மண்ணில் லேசாகப் புதைத்திருக்குமாறு செங்குத்தாக நட்டுவைத்து, காய்ந்தத் தென்னை ஓலைகளால் மூடி, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். கிட்டத்தட்ட 60 நாட்களில் முளைத்து வரும் செடி, காகத்தின் அலகு போல் இருக்கும். இதை, ‘காக்கா மூக்குப் பருவம்’ என்பார்கள். கிட்டத்தட்ட 450 செடிகளுக்குக் குறையாமல் இப்படி முளைத்து வரும். இதுதான் நடவுக்கேற்ற பருவம்.
4-ம் ஆண்டு முதல் மகசூல்!
நடவு செய்யப்பட வேண்டிய நிலத்தில் எட்டு அடி இடைவெளியில், ஒரு கன அடி அளவுக்குக் குழிபறித்து, மையத்தில் நாற்றை வைத்து மண்ணால் மூடி, ஒரு கையளவு தொழுவுரத்தை இட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஈரம் காயாத அளவுக்குப் பாசனம் செய்ய வேண்டும்.
நடவு செய்த நாளிலிருந்து ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து ஒவ்வொரு செடிக்கும் கையளவு தொழுவுரம் இட்டு வரவேண்டும்.  இரண்டு வயது ஆன பிறகு மாதத்திற்கு மூன்று கிலோ அளவிற்கு தொழுவுரம் இட வேண்டும். ஓரளவு செடி வளர்ந்த பிறகு, வாழை போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். வளர்ச்சிக்குத் தகுந்த அளவு ஒவ்வோர் ஆண்டும் தேவையான அளவு ரசாயன உரங்களைக் கொடுத்து வர வேண்டும். ஊடுபயிராக இருக்கும் பட்சத்தில் பிரதான பயிருக்கு இடும் உரமே போதுமானதாக இருக்கும். ( இவர், வாழைக்கு ரசாயன உரம் இடுகிறார். பாக்குக்கு தனியாக உரமிடுவதில்லை) 4-ம் வருட தொடக்கத்தில் பாக்கு காய்க்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் நோய்கள், பூச்சிகள் தாக்குவதில்லை.
75 சென்டில் 5 ஆயிரம்
சிலர் வாரம் ஒரு முறை பறிப்பார்கள். நான் மாதத்திற்கு  ஒரு முறை பாக்கு பறிக்கிறேன். முக்கால் ஏக்கரிலும் (75 சென்ட் நிலம்) சேர்த்து, ஒவ்வொரு பறிப்பிற்கும், நான்கு மூட்டை ( 70 கிலோ) அளவிற்கு மகசூல் கிடைக்கிறது. ஒரு கிலோ 15 ரூபாயிலிருந்து 18 ரூபாய் வரைக்கும் விலை போகிறது.  15 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே, ஒரு மாதத்திற்கு 280 கிலோ விற்பனை மூலமாக… 4ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
ஊடுபயிராக 150 ரஸ்தாளி வாழைகள் இருக்கிறது. இதில் ஒரு தார் 150 ரூபாய் வரைக்கும் விலை போகும். இதில் கிடைக்கும் வருமானம்.. பாக்கு, வாழை இரண்டிற்குமான சாகுபடி செலவிற்கு சரியாக இருக்கும். பாக்கில் கிடைக்கும் வருமானம் முழுக்கவே லாபம்தான் என்றார்.
இயற்கையிலேயே பெறலாம் கூடுதல் மகசூல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலானோர் ரசாயன முறையில் பாக்கு சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில், இயற்கை முறையில் பாக்கு சாகுபடி செய்து வருகிறார் வேம்பனூர் கிராமத்தைச் சோ்ந்த சிறுமணி.
தென்னைக்கு ஊடுபயிராகவும், 25 சென்ட் நிலத்தில் தனிப்பயிராகவும் பாக்கு சாகுபடி செய்து வரும் சிறுமணி, இயற்கை முறையில் பாக்கு சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி சொன்ன விஷயங்கள்.
ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி அகலத்தில் குழி எடுத்து அதில் 2 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ மண்புழு உரம், நிலத்தின் மேல் மண் ஆகியவற்றைப் போட்டு பாக்கை நடவு செய்து, முளைத்து வரும் வரை ஈரம் காயாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்து ஒரு மாதம்கழித்து, ஒவ்வொரு செடியின் அடியிலும், தலா ஒரு கையளவு வேப்பம் பிண்ணாக்கு, சாம்பல், தொழுவுரம் ஆகியவற்றைக் கலந்து வைக்க வேண்டும். தேவைப்பட்டால், அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். 4-ம் மாதம் ஒவ்வொரு மரத்திற்கும் இரண்டு கையளவு சுண்ணாம்பு பொடி போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
25 சென்டில் 3 ஆயிரம்
7-ம் மாத இறுதியில், ஒவ்வொரு மரத்தின் அடியிலும் வேப்பிலையைப் பரப்பி, அதில் இரு கையளவு தொழுவுரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 9-ம் மாதம் இலைக் கழிவுகளைப் பரப்பி இரு கையளவு தொழுவுரம் இட வேண்டும். அதற்குப் பிறகு, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்திற்கும், 5 கிலோ தொழுவுரம் இட வேண்டும். அவ்வப்போது. வேப்பம் பிண்ணாக்கு இட்டு வந்தால், பூச்சிகள் தாக்குவதில்லை. குருத்துப் பூச்சிகள் தாக்கினால், இரண்டு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி புகையிலை கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும் (அரை கிலோ புகையிலையை நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டு, அது ஒரு லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டினால், புகையிலைக் கரைசல் தயார்). பாக்கை நடவு செய்த நான்காவது வருடத்திலிருந்து பறிக்க ஆரம்பிக்கலாம்.
என்னுடைய 25 சென்ட் தோட்டத்தில் வாரத்திற்கு ஒரு பறிப்பு இருக்கும். ஒவ்வொரு பறிப்புக்கும் 1,500 பாக்குக்கு குறையாமல் மகசூல் கிடைக்கும். பாக்கு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 50 காசு விலை கிடைக்கும். இப்படி கிடைத்தாலே… வாரம் 750 ரூபாய் வருமானம் வந்துவிடும். அந்த அளவிற்க கணக்கு பார்த்தாலே … மாதம் 3,000 ரூபாய் வருமானம் வந்துவிடும். பறிப்புக் கூலி, இயற்கை உரச்செலவு போக 2,500 ரூபாய் வரைக்கும் கையில் நிற்கும் என்றார்.
செயற்கையை மிஞ்சும் இயற்கை!
வில்சன் ராஜப்பன், செயற்கை மற்றும் இயற்கை வழிமுறைகளைக் கலந்து 75 சென்ட் நிலத்தில் பயிரிட்டிருக்கும் பாக்கு மூலமாக மாதம் 4,200 ரூபாய் லாபம் எடுக்கிறார். சிறுமணியோ… இயற்கை வழி விவசாயம் மூலமாக மட்டுமே 25 சென்ட் நிலத்திலிருந்து 2,500 ரூபாய் லாபம் பார்க்கிறார். இதையே 75 சென்ட் பாக்குக்கு கணக்கிட்டால் … 7,500 ரூபாய் வந்துவிடும். ஆக, செயற்கையை மிஞ்சுகிறது இயற்கை!
தொடர்புக்கு
வில்சன் ராஜப்பன்
செல்போன் : 94863 – 25832
சிறுமணி, செல்போன் : 94425 – 30483
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.02.13 http://www.vikatan.com


10.02.2013

“ஒரு சிறு விதைதான்… மிகப்பெரிய விருட்சமாக வளர்கிறது… இயற்கை விவசாயம் என்கிற விதையை, விவசாயிகளின்  மனங்களில்  பசுமை விகடன் பரவலாகத் தூவியதால்தான்… இன்றைக்கு பல விவசாயிகள் செலவுகளைக் குறைத்து, நஷ்டத்தைத் தவிர்த்து நல்ல வருமானத்தோடு வாழ்கிறார்கள். அதற்கு நானே ஓர் உதாரணம்” – இது, தஞ்சாவூர் மாவட்டம், மூத்தாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் வாக்குமூலம். பட்டுக்கோட்டை, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும் வழக்கறிஞர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டே விவசாயத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருபவர்!
இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன்!
இது வண்டலும் மணலும் கலந்த பூமி. எங்க குடும்பத்திற்குச் சொந்தமான இந்த பதினெட்டரை ஏக்கர் தென்னந்தோப்பில் 25 அடி இடைவெளியில் நடப்பட்ட 1,250 தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே 25 வயதுக்கு மேலான மரங்கள். ரசாயன விவசாயம் செய்து கொண்டிருந்த போது, காண்டாமிருக வண்டு, கூன் வண்டு தாக்குதலால் மரத்தில் சாறு வடிந்து, வருடத்திற்கு 15 மரங்களுக்கு மேல் பாதிக்கும். அதை கட்டுப்படுத்த வேர்ப் பகுதியில் மோனோகுரோட்டோபாஸ் கட்டுவோம். ஆனால், எந்தப் பலனும் இருக்காது. இதுபோக, சூப்பர் – பாஸ்பேட், யூரியா பொட்டாஷ் ஜிப்சம் என்று வருடத்திற்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து கொண்டிருந்தோம். பணம்தான் விரயமாச்சு பலன் கிடைக்கலை.
விரக்தியாக இருந்த நேரத்தில்தான் பசுமை விகடன் அறிமுகமானது. அதில் வரக்கூடிய கட்டுரைகளைத் தொடர்ந்து படித்ததனால், இயற்கை விவசாயத்தின் மேல் நம்பிக்கை வந்தது. இதுமட்டுமில்லாமல், நம்ம விவசாயிகளே, விஞ்ஞானிகளாக மாறி, புதுசு புதுசாக அறிமுகப்படுத்தும் தொழில்நுட்பங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியதோடு, ஒரு உத்வேகத்தையும் உருவாக்கிவிட்டது.
பசுமை விகடனை பாடப் புத்தகமாகவும், நம்மாழ்வாரை வகுப்பாசிரியராகவும் நினைத்து கொண்டு… இயற்கை விவசாயத்தில் துணிச்சலுடன் இறங்கினேன். இரண்டு வருஷமாக ரசாயன உரங்களை முழுமையாக தவிர்த்துவிட்டு, மாட்டு எரு மட்டுமே கொடுத்தேன். வண்டு தாக்குதல் படிப்படியாக குறைந்து, இப்ப முழுமையாக சரியாகிவிட்டது என்றார்.
செலவை கூட்டிய ரசாயனம்!
தென்னைக்கு நிலம் முழுக்க தண்ணீர் பாய்ச்சுவதுதான் பொதுவான வழக்கம். ஒரு வருடத்திற்கு முன்பு வரைக்கும் நானும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக 12 மணிநேரம் தண்ணீர் பாய்ச்சினால்தான், ஒரு ஏக்கருக்கு முழுசாக பாயும். வாரம் ஒர முறை இது மாதிரி பாய்ச்சியாகணும். பதினெட்டரை ஏக்கருக்கு தண்ணீர் பாய்ச்சுறதுங்கறது சுலபமான வேலை இல்லை. மோட்டார் தேய்மானம், தண்ணீர் விரயம், ஆள் செலவு என்று நிறைய பிரச்னை. இதையெல்லாம் விட நிலம் முழுக்க தண்ணீர் பாய்வதால், மண் இறுகிப் போய், கெட்டியாகி, காற்றோட்டம் தடைபடும். களைகளும் அதிகமாக மண்டும். இதனால் வருடத்திற்க நான்குமுறை உழவு ஓட்டியாகவேண்டும். இதற்கு ஏக்கருக்கு 1,800 ரூபாய் என்று மொத்தம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.
செலவைக் குறைக்கும் வாய்க்கால் பாசனம்!
இதையெல்லாம் தவிர்க்கத்தான், இரண்டு தென்னை வரிசைக்கு நடுவே கிழக்கு – மேற்காகவும், வடக்கு – தெற்காகவும் 3 அடி அகலத்திற்கு வாய்க்கால் அமைத்தேன். கால் அடி ஆழத்திற்கு மண்ணை எடுத்து, அதை பக்கவாட்டில் போட்டதனால், வாய்க்காலுடைய மொத்த உயரம் அரையடியாக அமைந்தது. இங்கே உள்ள வாய்க்கால்கள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில் இருக்கு. எங்கேயாவது ஒரு இடத்தில் திறந்தாலே எல்லா வாய்க்காலிலும் தண்ணீர் பாயும். உணவு  மற்றும் தண்ணீர் சேகரிக்கும் நுனிவேர்கள் இந்த பகுதியில்தான் இருக்கும். தென்னையை பொறுத்தவரை அடித்தூருக்கு தண்ணீர்த் தேவையில்லை…. வேருக்குத்தான் தேவை. தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி வேர்கள் ஓடி வருவதனால், இதனுடைய நீளம் அதிகமாகி, மரம் நல்லா செழிப்பாகும். இதனால் மட்டைகளுடைய நீளமும் அதிகரித்து, மகசூல் கூடுகிறது.
எரு, தென்னை மட்டை என்று அனைத்தையும் வாய்க்காலிலே போட்டு தண்ணீர் பாய்ச்சுவதனால், நன்றாக மக்கி உரமாகிவிடுகிறது. இதனால் மரத்திற்கு மரம் உரம் வைக்கும் ஆள் செலவு மிச்சமாகிறது. வருடத்திற்கு ஒரு முறை குறிப்பாக, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்… 500 ஆடுகளை வைத்து ஏக்கருக்கு இரண்டு நாள் கணக்கில் கிடை போடுவோம். இதைத் தவிர வேற எந்த பராமரிப்பும் செய்வதில்லை. இப்ப எந்த  பிரச்னையுமில்லாமல் மரங்கள் அருமையாக காய்த்துக்கொண்டிருக்கிறது.
12 ஆயிரம் காய்கள் அதிகம்!
ரசாயன விவசாயம் செய்தபோது வருடத்திற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் காய்கள்தான் கிடைக்கும். இயற்கைக்கு மாறிய பிறகு, கூடுதலாக 12 ஆயிரம் காய்கள் கிடைத்திருக்கிறது. காய்களும் நன்கு திரட்சியாக இருக்கிறது என்றார்.
தொடர்புக்கு
ராஜேந்திரன்,  செல்போன் : 94435 – 49056
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.02.13 http://www.vikatan.com


 

ஒரு பயிரை மட்டும் நம்பி இருக்காமல், பல பயிர்களை சாகுபடி செய்தால் தான் விவசாயத்தில் வெற்றி பெற முடியும். பல ஆண்டுகளாக விவசாய வல்லுநர்கள் பலரும் கூறி வரும் வித்தை இது, இப்படி வெற்றி பெற்றுக் கொண்டிருப்பவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாலும் ஒருவர்.
சாத்தான்குளத்திலிருந்து இருந்து உடன்குடி செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் வருகிறது, நரையன் குடியிருப்பு. அதன் அருகிலுள்ள கருவேலம்பாடு கிராமத்தில்தான் ஜெயபாலின் பண்ணை இருக்கிறது. ரம்மியமான சூழலில், செடிமுருங்கை, தென்னை, வாழை, மா, எலுமிச்சை, கொய்யா, நெல்லி, சப்போட்டா – என மகசூலை வாரி குவிக்கும் மரங்கள் சூழ அத்தனை அழகாகக் காட்சியளிக்கிறது, பத்து ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் அந்தப் பண்ணை.
பாடம் சொன்ன பசுமை விகடன்
நான், என் மனைவி இரண்டு பேருமே ஆசிரியர்தான். நான் இப்போது ரிட்டையர்டு ஆயிட்டேன். பூர்வீக தொழிலே விவசாயம்தான். முப்பது வருடத்திற்கு முன் இந்தத் தோட்டத்தை வாங்கிப் போட்டேன். இந்த பத்து ஏக்கர் போக, தனியாக இருபது ஏக்கரில் மரப் பயிர்களை சாகுபடி செய்கிறேன். ஆரம்பத்தில் விவசாயத்தில் சொல்லிக்கும் மாதிரி வருமானம் இல்லை. ஆனாலும், விவசாயத்திற்கு மேல் இருந்த ஈர்ப்பால் அதை விடுவதற்கு மனசும் வரவில்லை.
செடிமுருங்கையில் ஆண்டிற்கு ரூ.3 லட்சம்
பத்து ஏக்கரில் 1,000 செடிகள் முருங்கை, 450 தென்னை, 300 வாழை, 6 மாமரம், 10 நெல்லி, 5 எலுமிச்சை, 7 கொய்யா, 20 சப்போட்டா நிற்கிறது. அரை ஏக்கரில் தென்னைக்கு ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி செய்கிறேன். மூன்று வருடத்திற்கு முன் ‘பசுமை விகடன்’ கொடுத்த தைரியத்தில்தான் இயற்கைப் பக்கம் திரும்பினேன். விவசாயத்தில் எந்த சந்தேகம் வந்தாலும், உடனே பசுமை விகடனை எடுத்துப் பார்த்துக் கொள்வேன். கடந்த வருடம் செடி முருங்கையில் 60 டன் வரைக்கும் மகசூல் கிடைத்தது. வேலையாட்கள் கூலி, முருங்கை பராமரிப்புச் செலவுகள் எல்லாவற்றையும் தென்னை, வாழையில் இருந்து கிடைக்கும் வருமானத்திலேயே ஈடுகட்டிவிடலாம். செடி முருங்கையில் கிடைக்கும் வருமானம் முழுக்க லாபம்தான், வருடத்திற்கு மூன்று லட்ச ரூபாய்க்கு குறைாயமல் லாபம் கிடைக்கிறது.
தென்னைக்குக் குறைவான பராமரிப்புத்தான்!
மூன்று வயதில் இருந்து 30 வயது வரைக்கும் மொத்தம் 450 தென்னை மரங்கள் நிற்கிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொழுவுரம் கொடுப்பேன். கூன்வண்டு தாக்காமல் இருப்பதற்காக  புகையிலைச் சாறு, வசம்புத் தைலம் இரண்டையும் கலந்து தெளிப்பேன். அவ்வளவுதான் பராமரிப்பு. 40 நாளைக்கு ஒரு முறை காய் பறிப்பேன். ஒவ்வொரு பறிப்பிலும் 3 ஆயிரம் காய் வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.
வாட்டி எடுத்த வறட்சி… தாக்குப் பிடித்த இயற்கை!
வாழையில், செவ்வாழை, கோழிக்கோடு, கற்பூரவல்லி, நாட்டு ரகம் என்று கலந்து வைத்திருக்கிறேன். என் நண்பர் ஒருத்தரிடமிருந்து விதைக்கிழங்கை வாங்கிக் கொண்டேன். சுண்ணாம்புக்  கரைசலில் விதைக்கிழங்கை முக்கித்தான் நடவு செய்வேன். நடவுக்குழிக்குள் ஒரு கையளவு வேப்பம் பிண்ணாக்கையும் போட்டுவிடுவதால் ஆரோக்கியமாக வாழை வளருகிறது. ஆறடி இடைவெளி கொடுத்துதான் வாழை நட்டிருக்கிறேன். மின்சாரப் பிரச்னையால் வாழைக்கு சரிவர தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. ஆனாலும், ஓரளவு மகசூல் வந்திருக்கிறதென்றால் அதற்கு இயற்கை விவசாயம்தான் காரணம் என்றார்.
ஆரோக்கியத்தைக் கூட்டும் நிலக்கடலை!
என் தோட்டம் முழுக்க செம்மண் பூமிதான். அதனால்தான் நாட்டு ரக நிலக்கடலை போட்டிருக்கிறேன். மெஷின் மூலமாகத்தான் கடலையை நடவு செய்வேன். மண்புழு உரம், அசோஸ்பைரில்லம் இரண்டும்தான் ஊட்டத்திற்கு. தேவைப்பட்டால்…. பூச்சிவிரட்டிகளை தெளிப்பேன். அறுவடை செய்து காய வைத்தால், அரை ஏக்கரில் 10 மூட்டை (37 கிலோ மூட்டை) வரைக்கும் கடலை கிடைக்கும். நான் நிலக்கடலையை வெளியில் விற்பதில்லை. சொந்த பசங்களுக்கு கொடுப்பதற்கே சரியாக இருக்கும் என்றார்.
இப்படித்தான் சாகுபடி செய்ய வேண்டும் செடிமுருங்கையை!
ஜெயபால் சொல்லும் செடிமுருங்கை சாகுபடி
டிசம்பர், ஜனவரி மாதங்கள் செடிமுருங்கை நடவுக்கு ஏற்றவை. நான்கு அடி நீளமுள்ள விதைக்குச்சியை, அரை அடி வரை மண்ணில் புதையுமாறு பதியம் போட வேண்டும். இவற்றில், எட்டு நாட்களுக்குப் பிறகு நன்றாகத் தழைத்து வரும் விதைக்குச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடவு செய்ய வேண்டும். 2 கன அடி அளவிற்குத் குழிபறித்து, ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கை இட்டு தேர்ந்தெடுத்த விதைக்குச்சிகளை குழியின் நடுப்பகுதியில் வைத்து, மண்ணால்  மூட வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்  பாய்ச்சினால் போதுமானது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால் அதிக மகசூல் கிடைக்கும். ஒரு முறை நடவு செய்தால்… 5 வருடங்கள் வரை மகசூல் கிடைக்கும். ஒரு முறை நடவு செய்தால்.. 5 வருடங்கள் வரை பலன் கிடைக்கும். மரங்களின் வேர்ப்பகுதியில் பூச்சி, புழுத் தாக்குதல் இருந்தால்.. அந்த மரங்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.
நடவு செய்த இரண்டாவது மாதத்தில், ஒவ்வொரு மரத்தின் இரண்டு பக்கங்களிலும், முக்கால் அடி ஆழத்திற்குக் குழிபறித்து, ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ மட்கிய கோழி எருவை வைக்க வேண்டும். நான்காவது மாதத்தில் இதேபோல் குழிபறித்து, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மாட்டுச் சாணம், அரை கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கலவையை இட வேண்டும். பூச்சிகளைக்  கட்டுப்படுத்த பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பூண்டுக் கரைசல், வசம்புத் தைலம் தெளிக்க வேண்டும். செடிமுருங்கையில் சில பூச்சிகளின் தாக்குதல் காரணமாக, இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி, பிசின் பிடிக்கும். இதை வசம்புத் தைலம் கட்டுப்படுத்திவிடும்.
நான்காவது மாத இறுதியில் செடிமுருங்கையில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். முதல் பூ பூத்தவுடன் உதிர்ந்துவிடும். அடுத்த பூ நன்றாக பிடிப்பதற்காக, அரை கிலோ பெருங்காயம், சிறிது காதி சோப் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டிய கரைசலை, மரத்தின் மேல் பகுதியில் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர்  தண்ணீரில், இருபது மில்லி பெருங்காயக் கரைசல் வீதம்  கலந்தால்… இரண்டு மரங்களுக்கு அடிக்க முடியும். இதைக் கணக்கிட்டு தேவைக்கு ஏற்ப தயாரித்துக் கொள்ள வேண்டும். ஐந்தாவது மாதத்தில் மரங்கள் காய்ப்பிற்கு வரும். மாதம் இரண்டு அறுவடை வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து அறுவடை செய்யலாம். 1,000 செடிமுருங்கை  இருந்தால், ஒரு பறிப்பிற்க்கு 5 டன் வரை முருங்கைக்காய்கள் கிடைக்கும். டிசம்பர் மாதத்தில், இலையெல்லாம் உதிர்ந்து மொட்டையாகிவிடும். அந்த நேரத்தில் மரத்தின் அடிப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு, மற்ற பகுதிகளை முற்றிலுமாக வெட்டி… தோட்டத்தில் ஆங்காங்கே 5 அடி ஆழம், 5 அடி அகலத்தில் குழிபறித்து, அதனுள் போட்டு மூடிவிட வேண்டும். இவை மட்கி  உரமாகி, அடுத்த போகத்தில் நல்ல மகசூலைக் கொடுக்க உதவியாக இருக்கும் என்றார்.
வசம்புத் தைலம்!
அரை கிலோ  வசம்பு, அரை கிலோ வெள்ளைப் புகையிலை ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தனித்தனியாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு, இரண்டையும் ஆட்டுக்கல்லில் (கிரைண்டர்) போட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். இந்தச் சாறுடன் ஒரு லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரைச் சேர்த்தால்… வசம்புத் தைலம் தயார். இதை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வசம்புத் தைலம் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.
பூண்டுக் கரைசல்!
வெள்ளைப் பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி தலா ஒரு கிலோ எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயைச் சேர்த்து இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஆட்டுக்கல்லில் (கிரைண்டர்) அரைத்து வடிகட்டி எடுத்தால்… பூண்டுக் கரைசல் தயார். இதை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பூண்டுக் கரைசல் என்ற விகிதத்தில் இதைப் பயன்படுத்தலாம்.
தொடர்புக்கு
ஜெயபால், செல்போன் : 94421 – 61417

25.01.2013

ஓங்கி உயர்ந்த செழிப்பான மலைத்தொடர், அதிலிருந்து கசிந்து வரும் சிற்றோடை, நீர் ததும்பும் இரண்டு குளங்கள், வரிசை கட்டி நிற்கும் புளியமரங்கள், இன்னும் இருக்கிறோம் என்று கட்டியம் கூறும் நாட்டுமாடுகள், அழகிய வீடு, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ள தென்னை வனம், ஊடுபயிராகவும், தனியாகவும் வளர்ந்து கொண்டிருக்கும் தேக்கு, பாக்கு, மலைவேம்பு, உள்ளிட்ட பலவகை மரங்கள், பண்ணையைச் சுற்றிலும் அரணாக சோலார் மின்வேலி..
இப்படி ஒரு பண்ணைக்குரிய அத்தனை அம்சங்களாலும் நிரம்பி வழிகிறது அந்தப் பண்ணை. இது… கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கோட்டூர், மலையாண்டிப்பட்டணம் அருகே அமைந்திருக்கும் சந்தோஷ் பண்ணை!
முற்பகல் பொழுதில் அந்தப் பண்ணைக்குள் நாட்டுமாடுகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்… ‘பண்ணையின் உரியைாளரும் … ஜப்பானிய இயற்கை விவசாய வல்லுநர் மசானபு ஃபுகோகாவிடம் நேரடிப் பயிற்சி பெற்றவருமான இயற்கை விவசாயி மது. ராமகிருஷ்ணன்.
இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இங்கு வந்து ‘ஆக்ஸிஜன்’ வாங்கிட்டு போயிருக்காங்க. ஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனமாக இதை மாற்றிக் கொண்டிருக்கிறேன். யானை, சிறுத்தை, மான், நரி, இப்படி பல விதமான விலங்குகளும்.. மயில், குயில், மணிப்புறா, மாடப்புறா என்று பலவகை பறவைகளும் இங்கு அவ்வப் போது வந்து தங்கிவிட்டு செல்கின்றது என்று பெருமையோடு சொன்னார்.
பூர்விகமே இந்த ஊர்தான். இந்தப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தவறாமல் பெய்யும். நிலக்கடலை, கேழ்வரகு, சோளம் என்று தானிய வெள்ளாமையும், பாசிப்பயறு, கொள்ளு, தட்டை, உளுந்து, துவரை என்ற பயறு வகைகளும் மானாவாரியில் சாகுபடி சக்கை போடு போட்ட ஊரு. ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான நாட்டுமாடுகளை வைத்திருந்தாங்க. எல்லா வீட்டுத் தூண்களிலும் மோர் சிலுப்பும், மற்ற சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும். பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் வந்து, மானாவாரி நிலங்களையெல்லாம் தென்னந்தோப்பாக மாற்றிவிட்டது.
வரவு எட்டணா…. செலவு பத்தணா!
அப்பா, விவசாயத்தைப் பார்த்து கொண்டார். அரசாங்கத்தில் பொறியாளர் வேலையில் இருந்த நான், அதை உதறிவிட்டு, ஊரில் உரக்கடை ஆரம்பித்தேன். தோட்டத்திற்குப் பக்கமே போகாமல், வியாபாரமே முக்கியம் என்று  இருந்துவிட்டேன். அப்பா, இறந்த பிறகு விவசாயம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பண்ணைக்கு வந்ததும், முதல் வேலையாக இத்தனை நாளும் அப்பா எழுதி வைத்திருந்த விவசாய வரவு – செலவு கணக்குகளைக் கையில் எடுத்தேன். அதிர்ந்தேன், இத்தனை வருடமாக விவசாயம் பார்த்தும்.. வரவை விட, செலவுதான் அதிகமாக இருந்தது. அப்ப, இத்தனை வருடமாக அப்பா விவசாய வேலை பார்த்தது எல்லாமே நஷ்டத்திற்குதானா என்று யோசித்தேன்.
இயற்கைக்குத் திருப்பிய ஃபுகோகா!
செலவு கணக்கில்.. ரசாயன இடுபொருள் செலவுகள் தான் அதிகமாக இருந்தது. அது சரியான விவசாய முறையாக எனக்குத் தோன்றவில்லை. உடனே என் உரக் கடைக்கு பூட்டுப் போட்டுவிட்டு, ரசாயன விவசாயத்திற்கான மாற்று வழி தேடத் தொடங்கினேன்.
அந்த சமயத்தில்தான்… நண்பர் மூலமாக மசானபு ஃபுகோகா எழுதின ஒற்றை வைக்கோல் புரட்சி, புத்தகம் கிடைத்தது. முழுசாக படித்ததில் ரசாயனத்திற்கு எதிரான மாற்றுவழியை அந்தப் புத்தகம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. ‘விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் ஒரே வழி.. இயற்கை வேளாண்மைதான் என்று தெரிந்து கொண்டேன். 2002 ஆம் வருடம் டேராடூனில் தங்கியிருந்தது, ‘மசானபு ஃபுகோகா’ நடத்திய இயற்கை வேளாண்மைப் பயிற்சியில் கலந்து கொண்டு வாரம் அவரிடம் நேரடிப் பயிற்சி எடுத்தேன்.
ஊக்கம் கொடுத்த ஊடுபயிர்கள்!
ஊருக்குத் திரும்பியதும், ‘சுலப வேளாண்மைக் குழு’ ஒன்றை ஆரம்பித்தேன். சுயசார்பு (சு) … லாபம் (ல)… பண்ணையம் (ப).. என்ற முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வேலையை அந்தக் குழு செய்தது. என்னுடைய பண்ணையை முழு இயற்கை விவசாயப் பண்ணையாக.. வேளாண் காடுகள் வளர்ப்பு மையமாக மாற்றினேன். தொடர்ந்து… நம்மாழ்வார் போன்றவர்களின் தொடர்பும், ஆலோசனையும் கிடைத்தது.
தென்னை மட்டுமே தனிப்பயிராக இருந்த பண்ணையில்… ஊடுபயிராக, கோக்கோ, பாக்கு, ஜாதிக்காய், கறிப்பலா, சப்போட்டா, கொய்யா, நெல்லி, கிளா போன்ற பயிர்களை நட்டேன். 10 வருடம் ஆன நிலையில்.. எல்லாமே வளா்ந்து பலன் கொடுத்து கொண்டிருக்கிறது.
6 ஏக்கரில் .. 20 வயதுள்ள 100 தேக்குமரங்களையும், ஈட்டி, சவுக்கு, யூகலிப்டஸ், வகையில் தலா 50 மரங்களை வரப்புப் பயிராகவும் வளர்த்து கொண்டு வருகிறேன். 750 பாக்கு மரங்களும் ஊடுபயிராக பலன் தந்து கொண்டிருக்கிறது.
தீவனச் செலவு இல்லை!
19 நாட்டு மாடுகள் வைத்து பராமரித்துக் கொண்டு வருகிறேன். என்னுடைய பண்ணையைச் சுற்றிலும் வனப் பரப்புடன் எல்லை இருப்பதால், தழை-தாம்பு, புல் – பூண்டு என்று மேய்ச்சலுக்குப் பஞ்சமில்லை. காலையில் மாடுகள் அவுத்து விரட்டினால் போதும்… வயிறார மேயும். மத்தியான நேரத்தில் உப்பாறு ஓடையில் தண்ணீரை குடித்துவிட்டு, சாயங்காலம் தொழுவம் வந்துவிடும்.
ஜொலிக்க வைக்கும் ஜீவாமிர்தம்!
இதுதாங்க இந்தப் பண்ணையின் உரத் தொழிற்சாலை. 19 நாட்டு மாடுகளுடைய சாணத்தைப் பயன்படுத்தி ஜீவாமிர்தக் கரைசல் தயாரித்து, பாசனத் தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை 50 ஏக்கருக்கும் பாய்ச்சுகிறேன். இதனால் எந்த பங்கமும் இல்லாமல் மரங்கள் நெடுநெடு என்று வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்கிறது.
இந்தப் பகுதியில் இருக்கும் தென்னைகளில் ஈரியாபைட் தாக்குதல் 40% இருக்கு. ஆனால், என்னுடைய தோப்பில் இதனுடைய தாக்குதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது 5% அளவிற்குதான் இருக்கு. அதனால், மற்ற விவசாயிகளிடம் வாங்கும் விலையைவிட, என்னுடைய தேங்காய்களுக்கு 50 பைசா கூடுதல் விலை கொடுக்கிறார்கள் வியாபாரிகள். இதற்கு காரணமே.. ஜீவாமிர்தம்தான் என்றார். எதிர் காலத்தில் இதை ஆயுள் கூட்டும் ஆரோக்கிய வனம் என்று மாற்றப் போகிறேன். அதற்கான ஆயத்த வேலைகள் துவங்கிவிட்டேன் என்று சொன்னார்.
இந்தப் பண்ணையில் இரண்டு சிறிய குளங்கள் இருக்கு. அதன் கரையில் மர வீடு ஒன்று அமைக்கப் போகிறேன். அதில் சோலார் பேனல், சாண எரிவாயு அடுப்பும் அமைக்கப் போகிறேன். வனத்தை ஒட்டியுள்ள இந்த மர வீட்டில் குடும்பத்துடன் தங்கி புத்துணர்வு பெற நினைப்பவர்கள் தாராளமாக வந்து போகலாம். மர வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஆழம் குறைவான குளத்தில் படகு சவாரியும் செய்யலாம் என்றார்.
தொடர்புக்கு
மது.ராமகிருஷ்ணன், செல்போன் : 94424 – 16543, 98658 – 57134
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.01.13 http://www.vikatan.com


25.01.2013

மலைச்சரிவுகளில் மட்டுமே நல்ல விளைச்சல் தரக்கூடிய அன்னாசிப் பயிரை, தட்ப வெப்பநிலை இயைந்து வரும் சமவெளிப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சாகுபடி செய்வது வழக்கம். ஆனால், ஆற்றுப்படுகை கிராமங்களில் ஒட்டுமொத்தமாக நெல் சாகுபடி செய்வது போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்கவே அன்னாசியை சாகுபடி செய்து வருகிறார்கள்!
தலைமுறைகளைக் கடந்த அன்னாசி சாகுபடி!
தக்கலையிலிருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையில் மலவிளையைத் தாண்டியதும் வருகிறது, கொட்டூர் எனப்படும் மலையடிவார கிராமம். ஊருக்குள் நுழையும் போதே  அன்னாசிப் பழ வாசனை மூக்கைத் துளைக்கிறது. அன்னாசிக்கு ஊடாகத்தான் வீடுகளை எழுப்பி இருக்கிறார்களோ.. என நினைக்கும் வகையில், அன்னாசித் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. கிராமம்! தலைமுறைகளைக் கடந்து அன்னாசி சாகுபடியைக் கொண்டாடி வருகிறார்கள், மக்கள். காரணம் , அது கொடுக்கும் வளமான வருமானம்தான்.
தனி மவுசு!
கொட்டூர் பகுதியைச் சோந்தவரும் அப்பகுதியை உள்ளடக்கிய அயக்கோடு பஞ்சாயத்தின் முன்னாள் தலைவருமான நெப்போ புஷ்பராஜ், பெருமையோடு ஆரம்பித்தார்.
இந்த கிராமத்தில் இருநூறு வீடுகள் இருக்கு. எல்லாருமே அன்னாசிப்  பழ சாகுபடிதான் செய்றாங்க. இந்த மாவட்டத்திலேயே கல்குளம், விளவங்கோடு தாலூகாவில் அன்னாசிப் பழ சாகுபடி அதிகம். அதிலும் குறிப்பாக ‘கொட்டூர் அன்னாசி’ என்றால் சந்தையில் தனி மவுசு. செம்மண்ணும், பாறையும் கலந்த மண்ணில் அன்னாசி அருமையாக வரும். அதற்கேற்ற மாதிரி மண் வாகும், சீதோஷ்ண நிலையும் இயல்பாகவே எங்க ஊருக்கு அமைந்திருக்கு. அதனால்தான், உலகத்திலேயே ருசியான அன்னாசிப் பழம் எங்க ஊரில் உற்பத்தியாகிறது.  எங்கள் ஊருடைய நில அமைப்பு வித்தியாசமானது. அதாவது, ஒரு பக்கம் மலைப் பகுதியும், மறுபக்கம் சமவெளியுமாக இருக்கும். இதில், மலை பகுதியில் ரப்பரும், சமவெளியில் அன்னாசியும் சாகுபடி செய்கிறோம்.
அன்னாசிக்கு அடுத்தபடியாக எங்க ஊரில் ரப்பர் சாகுபடியும் அதிகமாக செய்றாங்க. ரப்பரைப் போட்டாலும் ஊடுபயிராக, அன்னாசியையும் போட்டுருவாங்க. அன்னாசியை ஒரு முறை நட்டாலே போதும். வாழை மாதிரியே வெட்ட வெட்ட வாரிக் கொடுக்கும். அதனால், அன்னாசிதான் எங்க ஊரு மக்களை வாழ வைக்கும் அண்ணாச்சி என்றார்.
எங்க வீடுகளுக்கு விருந்தாளிங்க வந்தார்கள் என்றால்… விருந்தில் கட்டாயம் அன்னாசி இருக்கும். பிருத்திக்காய், பிருத்திப் பழம் என்று பல பேர்களில் அன்னாசியைச் சொல்வாங்க. எங்க பகுதியில் விவசாயிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, இயந்திரங்கள் வாங்கி மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம் என்று சொன்னார் அன்னை தெரசா அன்னாசிப் பழ உற்பத்தியாளர் உழவர் மன்ற தலைவர் ஹென்றி.
முன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அன்னாசியை தோட்டகலைப் பயிரோடு சேர்த்து மானியம் கொடுக்கணும் என்று கேட்டு மனு கொடுத்தோம். அதன்பிறகு, முதல் முறை நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு இருபதாயிரம் ரூபாய் மானியமும், அடுத்த வருடம் அதில் நான்கில் ஒரு பங்கும்  மானியமாக கொடுத்திட்டு இருந்தாங்க. இப்ப மானியத்தை ரத்து பண்ணிட்டாங்க. திரும்பவும் மானியம் கொடுத்தால் எங்க ஊர் மட்டுமில்லாமல் இந்த மாவட்டம் முழுவதுமே அன்னாசி சாகுபடி அதிகரிக்கும் என்றார்.
விவசாயி வியாபாரியாக மாறணும்!
இந்தப் பகுதியில் விளையும் அன்னாசியை சந்தைப்படுத்தும் நேசமணி, நான் பத்து ஏக்கரில் அன்னாசி சாகுபடி செய்கிறேன். நிறைய பேர் எங்க பகுதியில் சாகுபடி செய்வதால் வருடம் முழுக்க அன்னாசிப் பழம் கிடைக்கும். இந்தப் பகுதிகளில் அறுவடையாகும் அன்னாசியை மொத்தமாக கொள்முதல் செய்து.. நாகர்கோவிலில் இருக்கும் வடசேரி சந்தையிலும், மாவட்டம் முழுக்க இருக்கும் மற்ற சந்தைகளிலும் விற்று கொண்டிருக்கிறேன்.
விவசாயிகள், இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக வியாபாரம் செய்தால்தான் நல்ல வருமானம் கிடைக்கும். அதனால்தான் விவசாயியாக இருந்த நானே வியாபாரியாக மாறிவிட்டேன். சீசன் இல்லாத நேரங்களில் ஒரு கிலோ 80 ரூபாய் வரைக்கும் விலை போகும். மற்ற நேரங்களில் 15 ரூபாய்க்குக் குறையாமல் போகும். சிலபேர் அன்னாசியை மதிப்புக்கூட்டி, ஜாம், ஜீஸ் என்று தயாரித்தும் விற்கறாங்க என்றார்.
இப்படித்தான் சாகுபடி!
அன்னாசி சாகுபடி பற்றிப் பேசிய ஹென்றி, ஒரு ஏக்கரில் அன்னாசி சாகுபடி செய்ய  முதல் வருடம் செடி பராமரிப்பு என்று ஒரு லட்ச ரூபாய்  செலவாகும். வருடம் ஒரு லட்ச ரூபாய்க்கு காய் வெட்டலாம். இதனால் முதல் வருடம் லாபமும் இருக்காது, நஷ்டமும் இருக்காது. அடுத்த வருடத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் செலவாகம். அதனால் வருடத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபமாக கிடைக்கும்.
இந்தப் பகுதியில் ரசாயன முறையில்தான் அன்னாசியை சாகுபடி செய்கிறோம். செடியில் 40 இலை வரும்போது, ஒரு மருந்து கொடுக்க வேண்டும். யூரியா – ஒரு கிராம், எத்திரான் -2 மில்லி. இது இரண்டையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு செடியிலும் குருத்துப் பகுதியில் 20 மில்லி அளவிற்கு ஊற்ற வேண்டும். அதிலிருந்து 35-40 நாளைக்குள் பூ பூக்கும். பூத்ததிலிருந்து 90 நாளில் காயை வெட்டலாம் என்றார்.
இயற்கையிலும் இருக்கிறது வழி!
இயற்கை விவசாய முறையில் அன்னாசி சாகுபடி செய்வது சாத்தியமில்லையா? என்று மார்த்தாண்டம் அருகிலுள்ள காஞ்சிரங்கோடு கிராமத்தைச் சோந்த, முன்னோடி இயற்கை விவசாயி கிரேஸ் ராணியிடம் கேட்டோம்.
கண்டிப்பாக இயற்கை முறையில் அன்னாசி சாகுபடி சாத்தியமே! நானே அதை செய்து கொண்டிருக்கிறேன். நடவிலிருந்து 4-ம் மாதக் கடைசி அல்லது 5-ம் மாதத் தொடக்கத்தில்… ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 100 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து, ஒவ்வொரு செடியின் குருத்துப் பகுதியிலும் 100 மில்லி அளவிற்குத் தெளித்துவிட வேண்டும். இப்படிச் செய்வதால் காய் நன்றாகத் திரண்டு வரும். ரசாயன சாகுபடியைவிட, நான்கைந்து நாட்கள் தாமதாமாக காய் அறுவடைக்கு வந்தாலும், நல்ல சுவையான, ஆரோக்கியமான காய்கள் கிடைக்கும். ரசாயன விவசாயத்தில் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவானால், இயற்கை முறையில் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் தான் செலவாகும் என்று சொன்னார்.
இத்தகவலை உழவர்மன்றத் தலைவர் ஹென்றியின் காதுகளில் சேர்த்தபோது… சீசன் காலத்தில் ரசாயனத்தைத் தெளிக்காமலே காய் வந்துவிடும். ஆனால், சீசன் இல்லாத காலத்திலும் காய் வரவேண்டும் என்றால்தான் ரசாயனம் தெளிக்கிறோம். நீங்க சொன்னபடி இயற்கை முறை விவசாயத்தை என் வயலில் சோதனை அடிப்படையில் செய்து பார்க்கிறேன். செலவு குறைந்து, நல்ல மகசூல் வந்தால்… எங்களுக்கும் சந்தோஷம்தான். சோதனை வெற்றியடைந்தால் ஒட்டுமொத்த விவசாயிகளும் இயற்கைக்கு மாறிவிடுவோம் என்றார்.
தொடர்புக்கு
ஹென்றி, செல்போன் : 94424-06393
நேசமணி, செல்போன் :94424 -75251
ராணி, செல்போன் : 95669-43803
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.01.13 http://www.vikatan.com


10.04.2013

கிறங்க வைக்கும் கீரை சாகுபடி… பட்டையைக் கிளப்பும் ‘பட்டாம்பூச்சி’ பாசனம்!

தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு.. என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டு மென்றால், புதிய தொழில் நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும், மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும் பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தெளிப்புநீர் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.
கொங்கு நாட்டின் நெற்களஞ்சியம் என்று கோபிச்செட்டிபாளையம் பகுதியை சொல்வார்கள். அந்தளவிற்கு வளமான பகுதி. ஆனால், அதே தாலுகாவோட தெற்கு பக்கம் இருக்கும் எங்கள் பகுதி வானம் பார்த்த பூமி. ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் எதுவும் இங்கே இல்லை. முழுக்க முழுக்க கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பித்தான் வெள்ளாமை.
ஆயிரம் அடிக்கும் மேல், போர் போட்டு கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரை வைத்துதான் விவசாயம் செய்கிறோம். போதுமான தண்ணீர் இல்லாததால் கிடைக்கும் தண்ணீரை வைத்து பிஞ்சு வெள்ளாமையாக கீரையை சாகுபடி செய்கிறேன். ஆரம்பத்தில் வாய்க்கால் பாசனம்தான் செய்தேன். வாய்க்காலில் ஓடி, வயலை அடையவதற்குள்ளே போதும் போதும் என்று ஆகிவிடும். அந்த மாதிரி சமயத்தில்தான் ஒரு நாள் உழவர் சந்தையில் ஒரு விவசாயி, சொட்டுநீர்ப் பாசனத்தைப் பற்றி சொன்னார்.
வாய்க்கால் பாசனத்தில் ஒரு ஏக்கர் பயிருக்கு போகும் தண்ணீரை… சொட்டுநீர்ப்பாசனம் மூலமாக மூன்று ஏக்கருக்குப் பாய்ச்சிவிடலாம் என்றார், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் கம்பெனியுடைய முகவரியை வாங்கிகொண்டு, அடுத்த நாளே மகனுடன் அங்கே சென்று விவரம் கேட்டேன்.
என்னுடைய வயல், கிடைக்கும் தண்ணீர், வெள்ளாமை எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு உங்களுக்கு தெளிப்பு நீர்ப் பாசனம்தான் ஏற்றதாக இருக்கும் என்று சொன்னார்கள். அந்தக் கருவியை அமைத்திருக்கும் சில வயல்களையும் கூட்டிக்கொண்டு போய் காட்டினார்கள்.
எங்களுக்கும் அது திருப்தியாக தெரியவும், ஒரு ஏக்கர் கீரை சாகுபடிக்கு ஏற்ற அளவிற்குத் தேவையான கருவிகளை வாங்கிகொண்டு வந்து நாங்களே போட்டுக் கொண்டோம். 15 அடி இடைவெளியில் 4 அடி உயரத்திற்கு மரக்குச்சிகளை நட்டு, அதில் இரண்டரை உயரமுள்ள குழாய்களை அசையாமல் இருக்கும் மாதிரி கட்டிவிட்டோம்.
குழாய் முனையில் பட்டாம்பூச்சி நாசிலைப் பொருத்தினோம். தண்ணீரைப் பீச்சி அடிக்கும் இந்த நாசில் பட்டாம் பூச்சியோட இறக்கை மாதிரியே இருக்கும். அதனால், பட்டாம்பூச்சிப் பாசனம் தான் எங்க பக்கம் சொல்லுவாங்க. இதற்கு அரசு மானியம் கிடையாது. 15 அடி இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் பட்டாம்பூச்சிப் பாசனம் அமைப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றார்.
பூச்சிகளை விரட்டும் தெளிப்பு நீர்!
5 ஹெச்.பி.போர்வெல் மோட்டார் மூலமாகத்தான் பாசனம் செய்து கொண்டிருந்தோம். அதில் ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைந்தபட்சம் 6 மணிநேரம் ஆகும். அந்தளவிற்கு பாசனம் செய்வதற்கு  எங்கள் கிணற்றில் தண்ணீரும் இல்லை.
கரன்ட்டும் அவ்வளவு நேரம் கிடைக்காது. ஆனால், பட்டாம்பூச்சிப் பாசனம் அமைத்தபிறகு, அந்தக் கவலையே இல்லை. செங்கீரை, புதினா, அரைக்கீரை, மணத்தக்காளி, சிறுகீரை என்று ஐந்து வகையான கீரைகளைப் பயிர் செய்கிறோம்.
ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டாக பிரித்து, அதில் தனித்தனியாக சாகுபடி செய்வதால் சுழற்சி முறையில் தினமும் கீரையை அறுவடை செய்கிறோம். இந்தக் கீரையை சிறு கீரையைத் தவிர மற்ற நான்கு கீரைகளும் மறுதழைவு ரக கீரைகள். வெட்ட வெட்ட தழைந்து கொண்டே இருக்கும். அடியுரமாக கோழி எரு, தொழுவுரம் இரண்டையும் போடுகிறோம். மேலுரமாக யூரியா கொடுப்போம். ஆனால், பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதே இல்லை. அதற்கும் காரணம், பட்டாம்பூச்சிப் பாசனம்தான்.
தினமும் ஒரு மணி நேரம் பூவாளித்தூவல் போல் பத்தடி சுற்றளவிற்கு தண்ணீர் பீச்சி அடிப்பதால், இலைகள் எல்லாம் கழுவிட்ட மாதிரியாகிவிடுகிறது.
இலைவழியாக  செடியைத் தாக்கும் பச்சைப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன், முட்டைகள் என்று எல்லாவற்றையும் பீச்சி அடிக்கும் பாசன தண்ணீர் கழுவிடுவதால் செடிகளில் பூச்சிகளே இருப்பதில்லை. அதனால் பளபளவென்று தரமான கீரை கிடைக்கிறது என்றார்.
கட்டு இரண்டு ரூபாய்!
தொடர்ந்து பேசிய சதீஷ்குமார், ”கீரையை திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் கொண்டு போய்  அப்பா விற்றுவிட்டு வந்துவிடுவார். ஆரம்பத்தில் டவுன் பஸ்சில்தான் கீரைக் கட்டுகளைக் கொண்டு போனோம்.
பட்டாம்பூச்சிப் பாசனத்திற்கு மாறிய பிறகு, அதிக மகசூல் கிடைக்கிறது. சுழற்சி முறையில் அறுவடை செய்வதால் தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.
இப்போது சொந்தமாக மூன்று சக்கர டெம்போ வாங்கி, அதில்தான் கொண்டு போகிறார். ஒரு சின்னக்கட்டு இரண்டு ரூபாய் என்ற விற்கிறோம். நேரடியாக விற்பதால் கூடுதலான லாபம்” என்றார்.
தினமும் 2600 ரூபாய்
இந்த தெளிப்பு நீர்ப் பாசனம் மட்டும் இல்லையென்றால், நாங்கள் இந்த மண்ணை விட்டே போயிருப்போம் என்கிறார் பொன்னுசாமியின் மனைவி சிவகாமி.
எங்க நான்கு ஏக்கர் நிலத்தில் மட்டும் 11 போர்வெல் போட்டோம். எல்லாமே 900 அடி ஆழம். ஆனால், எதிலுமே சரியான தண்ணீர் கிடைக்கவில்லை. பத்து லட்சம் ரூபாய் கடனாளியானதுதான் மிச்சம். இருந்தாலும் நம்பிக்கையயை விடாமல் கடைசியாக  தோண்டிய கிணற்றில் ஓரளவு தண்ணீர் வந்தது. அதை வைத்து பெரிதாக  வெள்ளாமை செய்ய முடியாது. கீரை போட்டால் ஜெயிக்கலாம் என்று சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னார். அதன்படியே செய்தோம். ஓரளவிற்கு பிழைப்பு ஓடியது.
அதன்பிறகு தெளிப்புநீருக்கு மாறிய பிறகுதான். மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைக்கிறது. இதில் செலவெல்லாம் போக மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும். இதை வைத்தே பழையக் கடனையும் கட்டிவிட்டோம். நாங்க இந்த அளவிற்கு முன்னேற முக்கியக் காரணமே பட்டாம்பூச்சிப் பாசனம் தான் என்றார்.
தொடர்புக்கு
சதீஷ்குமார், செல்போன் : 98658 – 37804
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.04.13 http://www.vikatan.com


10.04.2013

பசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்… மல்லிகை சாகுபடிக்கு கை கொடுக்கும் ஃபாகர்..


ஊரெல்லாம் செய்யும் மாதிரிதான் நானும் விவசாயம் செய்கிறேன். ஆனால், வருமானம் மட்டும் வர மாட்டேன் என்கிறதே என்று சொல்லிக் கொண்டிருக்காமல்.. இருப்பதை வைத்து வருமானம் பார்க்கும் வழி என்ன? என யோசித்து, புதுமைகளைப் புகுத்தி சாதனை படைக்கும் விவசாயிகளும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில், வழக்கமான விவசாய முறையிலிருந்து கொஞ்சம் மாற்றி சிந்தித்தால்.. மணமான வருமனாம் பார்த்து வருகிறார், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்.
நிலக்கோட்டையிலிருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் பதினோராவது கிலோ மீட்டரில்  இருக்கிறது, சிறுநாயக்கன்பட்டி. இந்தப்பகுதி முழுக்க, பூ சாகுபடிதான் பிரதானம். மல்லிகை, செண்டு மல்லி, அரளி, சம்பங்கி, கனகாம்பரம்… எனப் பலவிதமான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மலர்களின் மணத்தில் காற்றே கிரங்கிப்போய்தான் வீசுகிறது இப்பகுதிகளில். காற்றில் பயணித்து வந்த வாசத்தை ரசித்தபடியே, சுரேஷின் மல்லிகைத் தோட்டத்தை அடைந்தோம். பரந்தவெளி எங்கும் பசுமையாக மல்லிகைச் செடிகள் விரவிக் கிடக்க.. அதற்கு நடுவே, சுரேஷின் தோட்டத்தில் பசுமைக் குடிலுக்குள் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. மல்லிகை மொட்டுகள்! அவற்றைப் பறிக்கும் பணியிலிருந்த சுரேஷ், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
எங்களுக்கான ஏ.டி.எம்.. மல்லிகைதான்!
இங்கு மல்லிகைப் பூவைதான் அதிகமாக சாகுபடி செய்வோம். இதை ஒரு முறை நட்டு வைத்தால் போதும்… 15 வருடத்திற்கு குறையாமல் வருமானம் கொடுத்துக்கொண்டே இருக்கும். அரை ஏக்கர் நிலம் இருப்பவர்கள்கூட மல்லியை நட்டு வைத்துவிட்டு, ஈஸியாக பிழைப்பை ஓட்டிருவாங்க.
மல்லிகைச் செடியை பொறுத்த வரைக்கும் எவ்வளவு பண்டுதம் பார்கிறோமோ அந்தளவுக்கு வருமானம் கியாரண்டி. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எங்கள் பகுதி மக்களுடைய ஏ.டி.எம் இந்த மல்லிகைதான். தினமும் 4 கிலோ பூ வந்தாலும், 200 ரூபாய் கிடைத்துவிடும். சீசன் நேரத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் கையில் புரளும்.
50 ரூபாய்க்குக் குறையாது!
‘ரூபினா ஜெயந்தி விக்டர்’  என்பவர்தான் இந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர். அவர்களுடைய கணவர் விக்டர் சார்லஸ், ஃபிரான்ஸில் இருக்கிறார். அங்கு பெரிய அளிவல் புர் வியாபாரம் செய்கிறார். இந்தத் தோட்டத்தை அவங்க சார்பாக நான்தான் பராமரித்து கொண்டு இருக்கிறேன். விவசாயத்துடன் சேர்த்து, நிலக்கோட்டையில் பூக்கடையும் வைத்திருக்கிறோம். அதை ஸ்ரீதர், நாகேந்திரன் என்று இரண்டு பேர் பார்த்துக்கொள்கிறார்கள். விவசாயிகளுடன் பூக்களை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். மல்லிக்கு எப்பவும் கிராக்கி இருப்பதால், எங்களுக்கு ஏற்றுமதி ஆர்டரும் இருந்துகொண்டே இருக்கும். எப்பவும் ஒரு கிலோ பூவுடைய விலை ரூ.50 கீழ் குறையாது. சீசன் நேரமாக இருந்தால், ஒரு கிலோ… ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிடும்.
சீசன் இல்லாத நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூ வரத்து இருக்காது. அந்த நேரத்தில் என்ன விலை கொடுத்தும் வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பாங்க. ஆனால், பூ இரு்ககாது. இது எங்களை யோசிக்க வைத்தது.
‘விலை கிடைக்கும் போது விளைந்தால்தானே நான்கு காசு பார்க்க முடியும். அப்போது விளையாமல் விலையில்லாத போது விளைந்து என்ன புண்ணியம் என்று யோசித்த போதுதான் பசுமைக் குடில் தொழில்நுட்ம் (பாலி ஹவுஸ்) பற்றி கேள்விப்பட்டோம். உடனே, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், கம்பெனிக்காரங்களிடம் ஆலோசனை செய்தோம். அவர்கள்தான், ‘பசுமைக் குடில் அமைத்தால்… பனிக் காலத்திலும் பூ எடுக்கலாம் என்று தைரியம் சொன்னார்கள். அதனால் ஆயிரம் சதுர மீட்டரில் மட்டும் ஒரு பசுமைக் குடில் அமைத்தோம்.
50% மானியம்! உடனடி வருமானம்!
பொதுவாக, பசமைக் குடில் அமைப்பவர்கள், குடிலை அமைத்த பிறகுதான் நடவிலிருந்து விவசாயத்தை ஆரம்பிப்பாங்க. அப்படி செய்தால் மல்லிகை மகசூலுக்கு வர 6 மாதம் ஆகும். ஆனால், அதுவரைக்கும் மகசூலை இழக்க எங்களுக்கு மனசு இல்லை. அதனால் ஏற்கனவே மகசூலிலிருந்த மல்லிகை செடிகளை மேலேயே பசுமைக் குடிலை அமைத்தோம் என்று  சொன்னார்.
40 சென்ட் நிலத்தில் எட்டு வயதான மல்லிகைச் செடிகளை மேலேதான் இந்த பசுமைக் குடில் நிற்கிறது. ஆயிரம் சதுர மீட்டர் தவிர மற்ற செடிகளை வெட்ட வெளியில் நிற்கிறது. பசுமைக் குடிலுக்குள்ள விவசாயம் செய்ய முடிவுக்கு வந்தவுடனே, இயற்கை முறை விவசாயத்தில் தான் மல்லிகையை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். இந்தக் குடிலை அமைக்க ஏழரை லட்ச ரூபாய் செலவானது. தோட்டக்கலைத் துறையிலிருந்து 50% மானியம் கொடுத்தார்கள்.
செடிகளைச் செழிக்க வைக்கும் நுண்ணீர் பாசனம்!
இந்தக குடிலுக்குள் சொட்டுநீர்ப் பாசனம், ஃபாகர் (நுண்ணீர் பாசனம்) இரண்டும் இருக்கு. அதே நேரத்தில் வாய்க்கால் வழியாகவும் பாசனம் செய்யும் வசதி இருக்கிறது. பெரும்பாலும், தண்ணீர் இருக்கும் போது வாய்க்கால் பாசனம் தான் செய்கிறோம். மழைக்கலத்தில் சொட்டு நீரும், வெயில் காலத்தில் ஃபாகரும் போட்டுக் கொள்வோம். இந்த ஃபாகர் போடுவதால் செடிகள் மேல் தூறல் மாதிரி தண்ணீர் விழுவதால் செடிகள் செழும்பா இருக்கு. வெளியில் என்ன மழை, வெயில், பனி அடித்தாலும், பத்து நிமிடம் ஃபாகர் போட்டால் போதும், குடிலுக்குள் மல்லிகைக்குத் தேவையான குறிப்பிட்ட அளவு தட்பவெப்பநிலை வந்துவிடும். அதனால், செடிகள் கொள்ளாத அளவிற்கு மொட்டுகள் வெடிக்கிறது.
குடிலுக்கு வெளியில் நிற்கிற செடிக்கும் இந்தச் செடிக்கும் ஒரே வயதுதான். இரண்டிற்கும் ஒரே பராமரிப்புதான் செய்கிறோம். ஆனால், அந்தச் செடிக்கும் குடிலுக்குள் இருக்கும் செடிக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே பாருங்கள் என்ற சுரேஷ், குடிலுக்குள் தளதளவெனவும், வெளியில் சுணங்கியும் இருந்த செடிகளை நம்மிடம் காட்டினார்.
தொழில்நுட்பத்தின் பலன் கண்கூடாகத் தெரிந்தது. நமது வியப்பைப் பெருமையுடன் ரசித்த சுரேஷ், பசுமைக் குடிலுக்குள் இயற்கை முறையில் மல்லிகையை சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
நாற்று நடவுதான் சிறந்தது!

பொதுவாக மல்லிகை அனைத்து மண்ணிலும் வளரும் என்றாலும், செம்மண் நிலங்களில் சிறப்பான மகசூலைக் கொடுக்கும். மல்லிகையை நாற்றுகளாகத்தான் நடவேண்டும். இந்த நாற்றுகள்  ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம் பகுதியில் கிடைக்கின்றன. (ஒரு நாற்று

இரண்டு ரூபாய்). புதிதாக நடவு செய்பவர்கள், நிலத்தை நன்றாக உழவு செய்து புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, 5 அடிக்கு 5 அடி சதுரப் பாத்தி எடுத்து, தண்ணீர் பாய்ச்சி.. பாத்தி ஈரமானதும் நான்கு மூலையிலும் கையால் சின்னக் குழி எடுத்து, மல்லிகை நாற்றை நடவு செய்ய வேண்டும்.
இப்படி நடவு செய்தால் ஒரு ஏக்கர் நிலத்தில் 1,750 நாற்றுகள் முதல் 2 ஆயிரம் நாற்றுகள் வரை நடலாம். சொட்டுநீாப் பாசனம் செய்பவர்கள், ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு பக்கமும் முக்கால் அடி தூரம் உள்ள மண்ணை அள்ளி, கரை போல் அமைத்துக் கொண்டு, அதில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ளலாம்.
ஊட்டம் கொடுக்கும் ஜீவாமிர்தம்!
பசுமைக் குடிலுக்குள் மல்லிகை சாகுபடி செய்ய நினைப்பவர்கள், தேவையான அளவில் பசுமைக் குடிலை அமைத்துக் கொண்டு, அதனுள் ஐந்தடி இடைவெளியில் மேற்சொன்னபடி செடிகளை நட்டு சொட்டுநீர், நுண்ணீர் பாசன வசதிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே மல்லிகை சாகுபடி செய்வர்கள், செடிகளுக்கு மேலேயே பசுமைக் குடிலை அமைத்துக் கொள்ளலாம்.
மல்லிகையை நடவு செய்த பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் தேவைக்கேற்ப ஜீவாமிர்தத்தை கலந்துவிட வேண்டும். 3 –ம் மாதம் செடிகளுக்கு 100 கிராம் ஆர்கானிக் உரத்தையும் வைக்க வேண்டும். வாய்க்கால் பாசனம் செய்பவர்கள், 6 மாதம் வரை காய்கறிப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். 6-ம் மாதத்தில் அரும்புவிடத் தொடங்கி, அடுத்த 20-25 நாட்களில் பூ வரும். அரும்பு கட்டத் தொடங்கும் போது செடிகள் நன்றாக நனையும் வகையில் ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும்.
வருமுன் காப்பது சிறந்தது!
ஒரு முறை அரும்பு எடுக்கத்தொடங்கிய பிறகு, தினமும் புதுப்புத மொட்டுகள் தோன்றிக் கொண்டே இருக்கும். செடியின் அனைத்துப் பகுதிகளிலும் மொட்டுகள் தோன்றியதும் மகசூல் ஓய்ந்துவிடும். இப்படி ஒரு சுற்று மொட்டுகள் தோன்றி ஓய்வதை ஒரு ‘கன்னி’ என்பார்கள். ஒரு கன்னி முடிந்தவுடன் செடிகளை. கவாத்து செய்து, ஒவ்வொரு செடிக்கும் 100 கிராம் ஆர்கானிக் உரத்தையும், 250 கிராம் மண்புழு உரத்தையும் வைக்க வேண்டும். அப்போதுதான் புதுப்புதுக் கிளைகள் தோன்றி, அதிக மொட்டுகள் தோன்றும். கவாத்து செய்த 25-ம் நாள் அரும்பு வெளியே வரும். அடுத்த 20 நாட்களில் பூ எடுக்கலாம் (திறந்தவெளி சாகுபடியில் கவாத்துக்குப் பிறகு, பூ எடுக்க 3 மாதங்கள் ஆகும்)
இப்படி ஒவ்வொரு கன்னி முடிந்தவுடனும் கவாத்து, உரம் என்று தொடர்ந்து பராமரித்து வர வேண்டும். பசுமைக் குடிலுக்குள் சாகடி செய்யும் போது, பாச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. ஒரே தட்பவெப்பநிலை பராமரிக்கப்படுவதால் நோய்களும் தாக்குவதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு முறை கவாத்து செய்த பிறகும் மூலிகைப் பூச்சி விரட்டியைத் தெளித்து வந்தால், வருமுன் காத்துக் கொள்ளலாம்.
பனிக் காலத்தில் பூ!
திறந்தவெளியைவிட. குடிலுக்குள் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. ஒவ்வொரு கன்னி முடிந்த பிறகும், பசுமைக் குடிலுக்குள் திறந்தவெளியில் வருவதைவிட சீக்கிரமாகவே அடுத்த அரும்பு வர ஆரம்பித்துவிடும். காம்பு நல்ல அடர் பச்சை நிறத்தில் திடமாக இருக்கும். வெளியில் பறிக்கும் மொட்டுகள் சீக்கிரம் மலர்ந்துவிடும். ஆனால், குடிலில் பறிக்கும் மொட்டுகள், 4 மணி நேரம் கழித்துதான் மலரும். இதில் முக்கியமான விஷயம்.. திறந்தவெளியில் சாகுபடி செய்யும் போது, பனிக் காலத்தில் (நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள்) செடிகளில் பூ இருக்காது. அந்த மூன்று மாதமும் பூ எடுக்கலாம். இந்த முறை பனிக் காலத்தில் ஊரில் எங்கேயும் பூ கிடைக்கவில்லை. இதே 40 சென்டில்  திறந்த வெளியில்  இருக்கும் செடிகளிலும் பூ இல்லை. ஆனால், பசுமைக் குடிலுக்குள் எனக்கு பூ கிடைத்தது.
ஆண்டிற்கு 5 லட்சம்!
இந்த ஆயிரம் சதுர மீட்டர் இடத்தில் இருக்கும் 200 செடிகளிலிருந்து தினமும் 10 -20 கிலோ வரைக்கும் பூ கிடைக்கிறது. பனிக் காலத்தில் தினமும் 8-10 கிலோ பூ கிடைத்தது. அந்த சமயத்தில் ஒரு கிலோ பூ, ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்றது. சராசரியாக மாதம் 200 கிலோ, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 2 லட்ச ரூபாய் வருமானம். அந்த மூன்று மாதத்திலேயே 5 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் பார்த்துவிடலாம்.
மற்ற நேரங்களில் மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். ஆக மொத்தம் ஆயிரம் சதுர மீட்டர் பசுமைக் குடிலுக்குள் மல்லிகை சாகுபடி செய்யும் போது வருடத்திற்கு 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைக்கும். இதல், செலவு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 5 லட்ச ரூபாய்  நிச்சயமாக லாபமாக கிடைக்கும். வழக்கமாக ஒரு ஏக்கர் நிலத்தில் மல்லிகை சாகுபடி  செய்தால்… செலவு போக மாதம் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரைக்கும் லாபமாக கிடைக்கும். இதுவே ஆயிரம் சதுரமீட்டரில் பசுமைக் குடிலை அமைத்தால், மாதம் 40 ஆயிரத்திற்கு குறையாமல் லாபம் எடுக்கலாம்.
எங்க பூ, இயற்கை முறையில் விளைவதால் சந்தையில் எப்பவும் கிராக்கி இருந்து கொண்டே இருக்கிறது என்றார்.
தொடர்புக்கு, சுரேஷ்
செல்போன்: 95851 47936
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.04.13 http://www.vikatan.com

Leave a comment