முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-26

மரணத் தருவாயில்…

இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

“நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. “நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.”

இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். “லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.

நபி (ஸல்) அப்போது “இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்…

அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை… (ஸஹீஹுல் புகாரி)

கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

கவலையில் நபித்தோழர்கள்

நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி “நபி (ஸல்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லை” என அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)

ஃபாத்திமா (ரழி) “எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே” எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உமரின் நிலை

உமர் (ரழி) எழுந்து நின்று “சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்) இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை மூஸா இப்னு இம்ரான் (அலை) அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த போது மக்கள் மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள். ஆனால், மூஸா (அலை) திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபியவர்களும் தன் இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

அபூபக்ரின் நிலை

அபூபக்ர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள ‘சுன்ஹ்’ என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும் பேசாமல் நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். “என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” என்றும் கூறினார்கள்.

பின்பு அறையிலிருந்து வெளியேறி அபூபக்ர் (ரழி) மஸ்ஜிது நபவிக்கு வந்தார்கள். அங்கு உமர் (ரழி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “உமரே! அமருங்கள்” என்றுரைத்தும் உமர் (ரழி) அமர மறுத்து விட்டார்கள். அபூபக்ர் (ரழி) மிம்பரில் ஏறி சப்தமிட்டு தஷஹ்ஹுத் முழங்கினார். மக்கள் உமர் (ரழி) அவர்களை விட்டு நீங்கி அபூபக்ர் (ரழி) அவர்களை நோக்கி விரைந்தனர். அப்போது அபூபக்ர் (ரழி) “உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ! நிச்சயம் முஹம்மது மரணித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்! உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கினாரோ! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன் மரணிக்க மாட்டான். அல்லாஹ் கூறுகிறான்:

முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்று விட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். (அல்குர்ஆன் 3:144)

என்று உரையாற்றினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: “அபூபக்ர் (ரழி) இந்த வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்ரிடமிருந்து அதை செவியேற்ற மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.”

இப்னுல் முஸய்ம்ப் (ரழி) கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அந்த வசனத்தை ஓதியவுடன் அவர்கள் கூறுவதுதான் உண்மை என நான் அறிந்து கொண்டேன். என்னுடைய கால்கள் சோர்ந்து என்னால் நிற்க இயலவில்லை. அப்படியே பூமியில் சாய்ந்து விட்டேன். நபி (ஸல்) இறந்து விட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி)

அடக்கம் செய்ய ஏற்பாடுகள்

நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்வதற்கு முன்னதாக முஸ்லிம்களின் காரியங்களை நிர்வகிக்கும் கலீஃபாவை நிர்ணயம் செய்வதில் மக்கள் ஈடுபட்டனர். பனூ சாம்தாவின் வீட்டு வராண்டாவில் இது தொடர்பாக நடந்த விவாதங்களுக்கும் கருத்து பரிமாற்றங்களுக்கும் பிறகு, முஹாஜிர்களும் அன்சாரிகளும் ஒரு மனதாக அபூபக்ரை கலீஃபாவாக நிர்ணயித்தனர். இந்த வேலையில் திங்கட்கிழமையின் பகல் முழுதும் முடிந்து இரவும் முழுமையாக முடிந்தது. அது வரை நபி (ஸல்) அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையைக் களையாமல் அப்படியே குளிப்பாட்டினர்.

இப்பணியில் அப்பாஸ், அலீ, ஃபழ்ல் இப்னு அப்பாஸ், குஸம் இப்னு அப்பாஸ், நபி (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமை ஷுக்ரான், உஸாமா இப்னு ஜைத், அவ்ஸ் இப்னு கவ்லீ (ரழி) ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்பாஸ், ஃபழ்ல், குஸம் (ரழி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ (ரழி) குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் (ரழி) நபி (ஸல்) அவர்களை தனது நெஞ்சின் மீது சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா)

இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச் சொந்தமான ‘கர்ஸ்’ என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி (ஸல்) வாழ்நாளில் அருந்தி வந்தார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

நபி (ஸல்) அவர்களை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அடக்கம் செய்வது

நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்ர் (ரழி) “இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்று நபி (ஸல்) கூற, நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். உடனடியாக நபி (ஸல்) மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா (ரழி) குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி அமைத்தார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம், கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சென்று தனித்தனியாக தொழுதார்கள்.

முதலில் நெருங்கிய குடும்பத்தார்களும், பின்பு முஹாஜிர்களும், அடுத்து அன்சாரிகளும், தொடர்ந்து சிறுவர்களும், பின்னர் பெண்களும் தொழுதனர். சிலர், “பெண்கள் முதலிலும் அடுத்து சிறுவர்களும் தொழுததாக அறிவிக்கின்றனர். (முவத்தா மாலிக், தபகாத் இப்னு ஸஅத்)

இதே நிலையில் செவ்வாயும் முழுமையாக கழிந்து புதன் இரவின் பெரும் பகுதி கழிந்தது. இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:

“இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்.”

இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம் நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது. (முஸ்னது அஹ்மது)

நபியவர்களின் குடும்பம்

1) ஹிஜ்ரத்துக்கு முன்பு நபி (ஸல்) அவர்களின் வீடு மக்காவில் இருந்தது. அதில் நபி (ஸல்), அவர்களின் மனைவி கதீஜா பின்த் குவைலிது (ரழி) இருந்தார்கள். நபி (ஸல்) தங்களது 25வது வயதில் 40 வயது நிரம்பிய கதீஜா (ரழி) அவர்களை மணமுடித்தார்கள். அவர்கள் உயிருடன் இருக்கும் வரை நபி (ஸல்) வேறு யாரையும் மணமுடிக்கவில்லை. கதீஜா (ரழி) அவர்களின் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்குப் பல ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். ஆண் குழந்தைகள் யாரும் உயிருடன் இல்லை. பெண் பிள்ளைகள் ஜைனப், ருகய்யா, உம்மு குல்சூம், ஃபாத்திமா (ரழி) ஆகியோராகும்.

ஹிஜ்ரத்துக்கு முன்பாக அபுல் ஆஸ் இப்னு ரபீஆவுக்கு ஜைனபை நபி (ஸல்) மணமுடித்து வைத்தார்கள். இவர் ஜைனபுடைய சிறிய தாயாரின் மகனாவார். ருகையா, உம்மு குல்சூம் ஆகிய இருவரையும் ஒருவர் பின் ஒருவராக உஸ்மானுக்கு மணமுடித்து வைத்தார்கள். பத்ரு, உஹுதுப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஃபாத்திமாவை அலீக்கு மணமுடித்துத் தந்தார்கள். ஃபாத்திமாவுக்கு ஹசன், ஹுசைன், ஜைனப், உம்மு குல்சூம் என்ற நான்கு பிள்ளைகள் இருந்தனர்.

மற்ற முஃமின்களை விட நபி (ஸல்) அவர்களுக்குப் பல காரணங்களை முன்னிட்டு நான்குக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வது ஆகுமானதாக இருந்தது. நபி (ஸல்) பதிமூன்று திருமணங்கள் செய்திருந்தார்கள். அதில் கதீஜாவும், ‘ஏழைகளின் தாய்’ என புகழப்பட்ட ஜைனப் பின்த் குஸைமாவும் நபி (ஸல்) உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே மரணித்து விட்டார்கள். ஏனைய ஒன்பது மனைவிகள் உயிருடன் இருக்கும்போது நபி (ஸல்) மரணமானார்கள். மற்ற இரண்டு பெண்களை மணமுடித்து, பிறகு பிரிந்து விட்டார்கள்.

2) ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) – கதீஜா (ரழி) அவர்கள் இறந்து ஒரு மாதத்திற்குப் பின் நபித்துவத்துடைய பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் இவர்களை மணமுடித்தார்கள். ஒன்றுவிட்ட சகோதரன் மகன் சக்ரான் இப்னு அம்ருக்கு இவரை மணமுடித்து தரப்பட்டிருந்தது. அவன் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 54, ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.

3) ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரழி) – ஸவ்தா (ரழி) அவர்களை மணமுடித்து ஓராண்டுக்குப் பின் நபித்துவத்துடைய 11 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில், ஹிஜ்ரத்துக்கு இரண்டாண்டுகள், ஐந்து மாதங்களுக்கு முன் ஆயிஷாவை அவரது 6 வது வயதில் மணமுடித்தார்கள். ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின் ஏழு மாதங்கள் கழித்து ஆயிஷாவின் 9 வது வயதில் அவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரழி) மட்டுமே நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் கன்னிப் பெண்ணாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களை மிக அதிகம் நேசித்தார்கள். இச்சமுதாயப் பெண்களில் அவர்களே அதிக மார்க்க ஞானமுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள்.

ஏனைய உணவுகளை விட ‘ஸரீத்’ என்ற உணவுக்குரிய சிறப்பைப் போன்று ஏனைய பெண்களை விட ஆயிஷா (ரழி) மிகச் சிறப்புப் பெற்றிருந்தார்கள். ஹிஜ்ரி 57 அல்லது 58 ஆம் ஆண்டு ரமழான் பிறை 17ல் மரணமானார்கள். பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

4) ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி) – இவரது கணவர் குனைஸ் இப்னு ஹுதாஃபா சஹ்மி (ரழி). பத்ர்-உஹுதுக்கு இடைப்பட்ட காலத்தில் மரணமாகிவிடவே, இவர் விதவையானார். இத்தா முடிந்து, ஹிஜ்ரி 3, ஷஅபான் மாதத்தில் இவரை நபி (ஸல்) மணமுடித்துக் கொண்டார்கள். ஹஃப்ஸா (ரழி) ஹிஜ்ரி 45ல், ஷஅபான் மாதம் தமது 60வது வயதில் மரணமானார்கள். இவர்களையும் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.

5) ஜைனப் பின்த் குஜைமா (ரழி) – இவர் ஹிலால் இப்னு ஆமிர் இப்னு ஸஃஸஆவின் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் ஏழைகள் மீது அதிகம் இரக்கமும் கருணையும் உடையவராக இருந்ததால் (உம்முல் மஸாகீன்) ‘ஏழைகளின் தாய்’ எனச் சிறப்பித்துக் கூறப்பட்டார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். கணவர் உஹுத் போல் ஷஹீதான பின்பு அவரை நபி (ஸல்) ஹிஜ்ரி 4ல் மணமுடித்தார்கள். மணமுடித்து ஏறக்குறைய 3 மாதங்கள் கழித்து ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவருக்குத் தொழ வைத்து பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.

6) உம்மு ஸலமா ஹிந்த் பின்த் அபூ உமையா (ரழி) – இவர் அபூ ஸலமாவின் மனைவியாக இருந்தார். அந்தத் தம்பதியருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர். ஹிஜ்ரி 4, ஜுமாதா அல்ஆகிராவில் அபூ ஸலமா (ரழி) மரணமானார். அதே ஆண்டு ஷவ்வால் மாதக் கடைசியில் நபி (ஸல்) உம்மு ஸலமாவை மணமுடித்தார்கள். இவர் மார்க்க ஞானமும் நுண்ணறிவும் கொண்ட பெண்ணாகத் திகழ்ந்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 59 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 62) தமது 84வது வயதில் மரணமடைந்தார்கள். இவரையும் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.

7) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் இப்னு ருபாப் (ரழி) – இவர் அஸத் இப்னு குஜைமாவின் குடும்பத்தைச் சார்ந்தவர். நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ஜைத் இப்னு ஹாஸாவின் மனைவியாக இருந்தார். ஜைத் (ரழி) தலாக் கொடுத்து, இத்தா காலம் முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்கு அவரை அல்லாஹ் மணமுடித்து வைத்ததாக பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

‘ஜைது’ (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக் கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். (அல்குர்ஆன் 33:37)

வளர்ப்பு மகன் தொடர்பான சட்டங்கள் அத்தியாயம் அஹ்ஜாபில் இறக்கப்பட்டன. அதனை அடுத்துப் பார்ப்போம். ஹிஜ்ரி 5 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 4, துல்கஅதா மாதம் நபி (ஸல்) ஜைனப் (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அதிகம் தர்மம் செய்பவராகவும் அதிகம் வணக்கம் புரிபவராகவும் விளங்கினார். தங்களது 53வது வயதில் ஹிஜ்ரி 20ல் மரணமெய்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் நபியை அடுத்து மரணமெய்தியவர்களில் இவரே முதலாமவர். இவருக்கு உமர் (ரழி) தொழுகை நடத்தி பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.

8) ஜுவைய்யா பின்த் அல்ஹாரிஸ் (ரழி) – இவன் தந்தை ஹாரிஸ், குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்த முஸ்தலக் கிளையினரின் தலைவராவார். நபி (ஸல்) பனூ முஸ்தலக் மீது படையெடுத்த போது கைதியான இவர், ஸாபித் இப்னு கைஸ் இப்னு சம்மாஸ் (ரழி) என்ற நபித்தோழருக்கு (கனீமா) வெற்றிப் பொருளில் பங்காகக் கிடைத்தார். இவரைச் சில தொகைகள் பெற்றுக் கொண்டு உரிமையிட ஸாபித் முடிவு செய்தார். அத்தொகையை நபி (ஸல்) செலுத்தி விட்டு ஹிஜ்ரி 6, (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 5) ஷஅபானில் மணமுடித்துக் கொண்டார்கள். இத்திருமணத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவியின் உறவினர்களை எங்ஙனம் அடிமையாக வைத்திருப்பது என்று எண்ணி முஸ்லிம்கள் தங்களிடம் அடிமைகளாக இருந்த நூறு பனூ முஸ்தலக் குடும்பத்தார்கள் அனைவரையும் விடுதலை செய்து விட்டனர். எனவே, தனது சமூகத்தாருக்கு அல்லாஹ்வின் அருள் பொருந்தியப் பெண்ணாக இவர் விளங்கினார். தனது 65வது வயதில் ஹிஜ்ரி 56 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 55) ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார்.

9) உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூஸுஃப்யான் (ரழி) – இவர் உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். அவர் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தை பிறந்ததால் உம்மு ஹபீபா என்றழைக்கப்பட்டார். இவர் தனது கணவருடன் ஹபஷாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார். அங்கு உபைதுல்லாஹ் கிறிஸ்துவராக மாறினார். சில காலத்திற்குப் பின் அங்கேயே இறந்து போனார். உம்மு ஹபீபா (ரழி) இஸ்லாமில் நிலையாக இருந்தார். ஹிஜ்ரி 7, முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமைய்யா ழம்ரீ என்ற தோழரை மன்னர் நஜ்ஜாஷியிடம் அனுப்பி, அங்குள்ள முஸ்லிம்களை அழைத்து வரச் சொன்ன போது உம்மு ஹபீபாவை மணமுடிக்கும் விஷயமாகவும் நஜ்ஜாஷியிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தில் நபி (ஸல்) குறிப்பிட்டிருந்தார்கள். அவர் நபி (ஸல்) சார்பாக நானூறு திர்ஹங்கள் மஹர் கொடுத்து உம்மு ஹபீபாவை நபி (ஸல்) அவர்களுக்கு மணமுடித்து வைத்து ‘ஷுரஹ்பீல் இப்னு ஹஸ்னா’ என்ற தோழருடன் அனுப்பி வைத்தார். இக்குழுவினர் நபி (ஸல்) கைபர் போரில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்தனர். போரிலிருந்து திரும்பிய பின் நபி (ஸல்) இவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 42ல் இவர் மரணமெய்தினார். சிலர் ஹிஜ்ரி 44 என்றும், சிலர் 50 என்றும் கூறுகின்றனர்.

10) ஸஃபிய்யா பின்து ஹய் (ரழி) – இஸ்ரவேலர்களின் பனூ நழீர் கூட்டத்தாருடைய தலைவன் மகள். கைபர் போரில் கைதியானார். இவரை நபி (ஸல்) தனக்காக எடுத்துக் கொண்டு இஸ்லாமுக்கு வரும்படி அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளவே நபி (ஸல்) அவரை உரிமைவிட்டு கைபரிலிருந்து திரும்பும் போது ஹிஜ்ரி 7ல் மணமுடித்துக் கொண்டார்கள். மதீனாவுக்குச் செல்லும் வழியில் கைபரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் இவருடன் நபி (ஸல்) வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

11) மைமூனா பின்த் ஹாரிஸ் (ரழி) – இவர் உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் ஹாரிஸின் சகோதயாவார். நபி (ஸல்) உம்ரத்துல் கழாவை முடித்துத் திரும்பும் போது ஹிஜ்ரி 7, துல்கஅதாவில் இவரை மணமுடித்தார்கள். மக்காவிலிருந்து 9 மைல் தொலைவிலுள்ள ‘சஃப்’ என்ற இடத்தில் இவருடன் நபி (ஸல்) இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 61ல் இதே சஃப் என்ற இடத்திலேயே இவர் மரணமடைந்தார் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். மரணமடைந்த ஆண்டு சிலர் ஹிஜ்ரி 38 என்றும், சிலர் 63 என்றும் கூறுகிறார்கள்.

ஆக, மேற்கூறிய 11 பெண்களை நபி (ஸல்) மணமுடித்து வாழ்க்கை நடத்தினார்கள். இவர்களில் கதீஜா, ஜைனப் பின்த் குஜைமா (ரழி) ஆகிய இருவரும் நபி (ஸல்) வாழும்போதே மரணமானார்கள். மற்ற மனைவிமார்கள் அனைவரும் வாழும்போது நபி (ஸல்) மரணமானார்கள். இவர்களைத் தவிர, கிலாஃப் குடும்பத்தாரைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், கிந்தா குடும்பத்தைச் சேர்ந்த ஜுவைனிய்யா என்ற பெண்ணைiயும் நபி (ஸல்) மணமுடித்தார்கள். ஆனால், அவர்களுடன் வாழ்க்கை நடத்தவில்லை. இது தொடர்பான பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அவற்றை இங்கு விவரிக்க இயலாது.

நபி (ஸல்) அவர்களுக்கு இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். ஒன்று: மன்னர் முகவ்கிஸ் வழங்கிய மாயா கிஃப்திய்யா. நபி (ஸல்) அவர்கள் மூலம் இவருக்கு ‘இப்றாஹீம்’ என்ற ஆண் மகவு பிறந்து பாலப்பருவத்திலேயே (ஹிஜ்ரி 10, ஷவ்வால் பிறை 28 அல்லது 29, (கி.பி. 632 ஜனவரி 27ல்) இறந்து விட்டது.

இரண்டாவது அடிமை: ரைஹானா பின்த் ஜைது. இவர் பனூ நளீர் அல்லது பனூ குறைளா சமூகத்தைச் சேர்ந்தவர். பனூ குறைளாவுடன் போரில் கைது செய்யப்பட்ட இப்பெண்ணை நபி (ஸல்) தனது பங்கில் எடுத்துக் கொண்டார்கள். இவரை உரிமையிட்ட பிறகு நபி (ஸல்) மணமுடித்தார்கள், எனவே, இவர் நபி (ஸல்) அவர்களின் மனைவியாகி விடுகிறார் என்று வேறு சிலர் கூறுகின்றனர். அறிஞர் இப்னுல் கய்” (ர) ‘முந்திய கூற்றே ஏற்றமானது’ என்கின்றார். அபூ உபைதா (ரஹ்) என்ற அறிஞர் “மேலும் இரண்டு அடிமைப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தார்கள் ஒருவர் ஜமீலா, இவர் போர்க் கைதியாக கிடைத்தவர். மற்றொருவர் பெயர் தெரியவில்லை, அவரை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்” என்கின்றார். (ஜாதுல் மஆது)

பலதார மணம் புரிந்தது ஏன்?

நபி (ஸல்) நல்ல உடல் வலிமையும் திடகாத்திரமும் கொண்ட வாலிபக் காலத்தில் தன்னை விட 15 வயது அதிகமான கதீஜா (ரழி) அவர்களுடனே ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள். கதீஜா (ரழி) மரணமான பின்பே ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவரும் வயதில் நபி (ஸல்) அவர்களை விட மூத்தவராக இருந்தார். அதற்குப் பின் தனது வயோதிக காலத்தில்தான் பல திருமணங்களைச் செய்தார்கள். இதை நன்கு சிந்திப்பவர் “நபி (ஸல்) பல திருமணங்களை செய்தது, அதிக ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான்” என்று அறவே கூற முடியாது. மாறாக, அதற்குப் பல உயர்ந்த உன்னத நோக்கங்கள் இருந்திருக்க வேண்டும் என அறியலாம்.

அபூபக்ர் (ரழி) அவர்களின் மகள் ஆயிஷாவையும், உமர் (ரழி) அவர்களின் மகள் ஹஃப்ஸாவையும் நபி (ஸல்) மணமுடித்து அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகிய இருவருடனும் உறவை பலப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு அலீ (ரழி) அவர்களுக்குத் தனது மகள் ஃபாத்திமாவையும், உஸ்மான் (ரழி) அவர்களுக்குத் தங்களது மகள்கள் ருகைய்யா பின்னர் உம்மு குல்சூமையும் மணமுடித்துக் கொடுத்து உறவை செம்மைப்படுத்திக் கொண்டார்கள். இந்த நால்வரும் இஸ்லாமுடைய வளர்ச்சிக்காக பல இக்கட்டான நேரங்களில் உடல், பொருள் தியாகங்கள் புரிந்து இஸ்லாமுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர்கள். எனவே, இந்த நால்வருடன் மக்கள் அனைவரும் நல்லுறவுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இத்திருமணங்கள் மூலம் நபி (ஸல்) முஸ்லிம்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அரபியர்கள் பண்டைக் கால வழக்கப்படி மாமனார் வீட்டு உறவைப் பெரிதும் மதித்தனர். இவ்வுறவு பல மாறுபட்ட குடும்பங்களுக்கிடையில் நெருக்கத்தை உண்டு பண்ணுவதற்குரிய வழிகளில் ஒன்றாக இருந்தது. மாமனார் வீட்டு உறவுகளுடன் சண்டையிடுவதையும், போர் புரிவதையும் தங்களுக்கு மகா கேவலமாகவும் இழுக்காகவும் கருதினர். பல மாறுபட்ட வமிசங்களிலிருந்து நபி (ஸல்) தங்களது திருமணங்களைச் செய்து அந்த வமிசங்களுக்கிடையே உள்ள பகைமையையும் கோபத்தையும் தணிக்க முயற்சித்தார்கள்.

எடுத்துக்காட்டாக, உம்மு ஸலமா (ரழி) – இவர் மக்ஜூம் கிளையைச் சேர்ந்தவர். அபூ ஜஹ்லும், காலித் இப்னு வலீதும் இதே கிளையைச் சேர்ந்தவர்கள்தான். (அபூஜஹ்ல் பத்ரு போரில் கொல்லப்பட்டான்) நபி (ஸல்) அவர்களைப் பல போர்களில் எதிர்த்து வந்த காலித் இப்னு வலீத் (ரழி) தனது கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) மணமுடித்துக் கொண்டதால் தனது எதிர்ப்பைக் கைவிட்டு குறுகிய காலத்திற்குள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாமை ஏற்றார்.

இவ்வாறே உம்மு ஹபீபா (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அபூ ஸுஃப்யானின் மகளாவார். அபூ ஸுஃப்யான் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த கொடுமைகள் அனைவரும் அறிந்ததே. உம்மு ஹபீபாவை நபி (ஸல்) திருமணம் செய்தபின் அபூஸுஃப்யான் தனது தீய செயல்களிலிருந்து சற்றே பின்வாங்கினார்.

அதுபோலவே, பனூ நழீர் மற்றும் பனூ முஸ்தலக் ஆகிய இரு யூத வமிசங்களிலிருந்து ஸஃபிய்யா மற்றும் ஜுவைரியாவை மணமுடித்தார்கள். இதனால் இவ்விரு குலத்தாரும் நபி (ஸல்) அவர்களிடம் பகைமை காட்டிவந்ததை நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமின்றி ஜுவைய்யா (ரழி) அவர்களினால் அவர்களது சமூதாயத்திற்குப் பெரும் நன்மைகளும் பலன்களும் கிடைத்தன. நபி (ஸல்) பெண்ணெடுத்த சமூகத்தார்களை அடிமையாக்கி வைப்பதா? என்று கைதிகளாக இருந்த அவர்களது சமூகத்தின் நூறு குடும்பத்தார்களை நபித்தோழர்கள் உரிமையிட்டார்கள். உள்ளங்களில் இந்த உதவி எவ்வளவு பெரியமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த பலன்களுக்கிடையில் மேலான மற்றும் ஒரு பலன் இத்திருமணங்களால் ஏற்படுகின்றது. அதன் விளக்கமாவது:

நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தினர் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை அமைப்பதற்குத் தேவையான பண்புகளை அறியாதவர்களாக இருந்தனர். இத்தகைய சமுதாயத்தைப் பண்படுத்தவும், சீர்திருத்தவும் வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.

இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படை, ஓர் ஆண் அந்நியப் பெண்ணுடன் கலப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஆண்களால் பெண்களை முழுமையாக சீர்திருத்துவதென்பது இச்சட்டத்தைக் கவனித்து முடியாத ஒன்று. ஆனால், பெண்களையும் சீர்திருத்த வேண்டும் என்ற அவசியம் ஆண்களைச் சீர்திருத்த வேண்டும் என்ற அவசியத்தை விட சற்றும் குறைவானதல்ல மாறாக, அதைவிட மிக அதிகமானதே.

ஆகவே, மகத்தான இச்சீர்திருத்தப் பணியை நிறைவேற்ற அதற்குத் தகுதிவாய்ந்த மாறுபட்ட வயதும் திறமையும் கொண்ட பெண்களை தனக்குத் துணையாக தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தவிர நபி (ஸல்) அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அப்போதுதான் வீட்டுப் பெண்களுக்கு ஒழுக்கப் பண்புகளையும் மார்க்கச் சட்டங்களையும் வழங்கலாம். அதன்மூலம் அவர்களை மற்ற கிராம, நகர, வாலிப, வயோதிகப் பெண்களுக்கு மார்க்கப் பயிற்சி தரும் ஆசிரியைகளாக உருவாக்க முடியும். அப்பெண்மணிகள் நபி (ஸல்) அவர்களின் சார்பாக பெண்ணினத்திற்கு மார்க்கத்தை எடுத்துரைக்கும் பொறுப்பையும் நிறைவேற்றுவார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவிகளான முஃமின்களின் தாய்மார்கள், நபி (ஸல்) தங்கள் வீடுகளில் எப்படி இல்லற வாழ்க்கையை நடத்தினார்கள் என்ற செய்திகளை நமக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இதில் அவர்களது பங்கு மகத்தானது. குறிப்பாக, நபி (ஸல்) அவர்களுடன் நீண்ட நாட்கள் வாழ்ந்த ஆயிஷா (ரழி) போன்ற துணைவியர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களின் பெரும்பாலானவற்றை சமுதாயத்திற்குத் தெரிவித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.

மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான். நபி (ஸல்) அவர்களின் மாமி மகள் ஜைனப் பின்த் ஜஹ்ஷை ஜைதுப்னு ஹாஸா (ரழி) மணமுடித்திருந்தார். ஜைதை சிறு வயது முதலே நபி (ஸல்) வளர்த்து வந்ததால் இவரை ஜைத் இப்னு முஹம்மது (முஹம்மதின் மகன் ஜைது) என்றே மக்கள் அழைத்தனர். ஆனால், இத்தம்பதியடையே சுமுகமான உறவு நிகழவில்லை. இதனால் ஜைது (ரழி) தனது மனைவியை விவாகரத்து செய்துவிட எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசித்தார்.

ஜைது (ரழி) தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டால் அவரை, தானே மணக்க நேரிடும் என அல்லாஹ்வின் அறிவிப்பு மூலம் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், இத்திருமணம் நடந்தால் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பழிப்பார்கள். நயவஞ்சகர்களும் யூதர்களும் முஷ்ரிக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக குழப்பங்களையும் தவறானக் குற்றச்சாட்டுகளையும் பரப்புவார்கள். அதனால், பலவீனமான நம்பிக்கையுடைய முஸ்லிம்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் ஏற்படலாம். ஆகவே, ஜைது (ரழி) தலாக் விஷயமாக பேசிய போது தலாக் விடவேண்டாம் என நபி (ஸல்) அவருக்கு அறிவுரை கூறினார்கள்.

நபி (ஸல்) உணர்ந்த இந்த அச்சமும் தடுமாற்றமும் அல்லாஹ்வுக்கு பிடிக்கவில்லை. எனவே, நபியவர்களை கண்டித்து அடுத்துவரும் வசனத்தை அருளினான்.

(நபியே!) அல்லாஹ்வும், நீங்களும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி “நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து உங்களுடைய மனைவியை (நீக்காது) உங்களிடமே நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிய சமயத்தில், நீங்கள் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உங்கள் மனதில் மறைத்தீர்கள். நீங்கள் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) (அல்குர்ஆன் 33:37)

ஆனால், நடக்க வேண்டியது நடந்து விட்டது. ஜைது (ரழி) தன் மனைவியை தலாக் கொடுத்து விட்டார், நபி (ஸல்) பனூ குறைளா யூதர்களை முற்றுகையிட்ட காலக்கட்டத்தில் ஜைனப் (ரழி) அவர்களுடைய இத்தா முடிந்தவுடன் நபி (ஸல்) அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இதனை நபியவர்களின் விருப்பத்திற்கு விடாமல் தானே மணமுடித்து வைத்ததாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

‘ஜைது’ (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக் கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக, இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும். (அல்குர்ஆன் 33:37)

இவ்வாறு அல்லாஹ் செய்ததற்குக் காரணம்:

ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கின்றது. (அல்குர்ஆன்33:5)

மற்றும்,

(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:40)

ஆகிய வசனங்களால் இந்தத் தவறான நடைமுறையை சொல்லால் உடைத்தது போல் செயலாலும் அதனை உடைக்க விரும்பினான்.

ஊறிப்போன எத்தனையோ பழக்க வழக்கங்களைத் தகர்ப்பது என்பது சொல்லால் மட்டும் முடியாது. அதனை மாற்ற நினைக்கும் சத்திய அழைப்பாளர்கள் தனது செயலாலும் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும். இதற்கு ஹுதைபிய்யா, உம்ராவில் நடந்த நிகழ்ச்சியை அழகிய எடுத்துக்காட்டாகக் கூறலாம். நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த அன்பு, பாசம் பற்றி உர்வா இப்னு மஸ்வூத் (ரழி) கூறிய ஹதீஸிலிருந்து நாம் தெரிந்திருக்கலாம்.

“உஸ்மான் (ரழி) கொல்லப்பட்ட செய்தி உண்மையாயின் வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போர் புரிய வேண்டும் பின் வாங்கக் கூடாது” என்று நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் மரத்தின் கீழே சத்தியவாக்குறுதி வாங்கினார்கள். அந்நேரத்தில் நபியவர்களிடம் போட்டி போட்டுக் கொண்டு தோழர்கள் சத்திய வாக்குறுதி தந்தார்கள். மேலும், அதில் அபூபக்ர், உமர் (ரழி) போன்ற நெருக்கமான தோழர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் அந்தத் தோழர்களுக்குச் சமாதான உடன்படிக்கை நிறைவேறிய பின், தங்களின் குர்பானி பிராணிகளை அறுக்கும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். ஆனால், நபியவர்களின் இக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு தோழர்களில் எவரும் முன்வரவில்லை. இது நபி (ஸல்) அவர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த உம்மு ஸலமா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! தாங்களே முதலில் எழுந்து சென்று குர்பானியை நிறைவேற்றுங்கள் யாரிடமும் பேசாதீர்கள்” என்று ஆலோசனை வழங்கினார்கள். அதற்கிணங்க நபி (ஸல்) அவர்களும் அவ்வாறு செய்ய, தோழர்கள் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு குர்பானியை நிறைவேற்றினார்கள். ஆகவே, காலங்காலமாக ஊறிப்போன பழக்கத்தைத் தகர்த்தெறிவதில் சொல்லால் திருத்துவது அல்லது செயலால் திருத்துவது ஆகிய இரண்டிற்குமிடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலுள்ள வேறுபாடு இருப்பதை உணரலாம்.

ஜைனபை நபி (ஸல்) திருமணம் செய்த பின்பு இத்திருமணம் குறித்து நயவஞ்சகர்கள் பல தவறான பொய்ப் பிரச்சாரங்களை மக்களுக்கிடையில் பரப்பினர். இறைநம்பிக்கையில் உறுதியற்ற முஸ்லிம்களின் இதயங்களில் தீய எண்ணங்கள் உண்டாயின.

இத்திருமணத்தால் இரண்டு விதமான குழப்பங்களை நயவஞ்சகர்கள் உண்டாக்கினர். 1) நபி (ஸல்) அவர்களுக்கு இது ஐந்தாவது திருமணமாக இருந்தது. (நான்கிற்கு மேல் திருமணம் முடிப்பது அனுமதியில்லை என முஸ்லிம்கள் அறிந்திருந்தனர்.) 2) ஜைது (ரழி) நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன். அவர் நபி (ஸல்) அவர்களின் மகனாகவே கருதப்பட்டு வந்தார். இதைச் சொந்த மகனின் மனைவியைச் சொந்தத் தந்தை மணமுடிப்பதைப் போன்று மானக்கேடான செயலாகக் கருதினர். அல்லாஹு தஆலா இவ்விரண்டையும் குறித்து தௌ;ளத் தெளிவான பதிலை சூரா அஹ்ஜாபில் இறக்கி வைத்தான். அதன் மூலம் ‘ஒருவரை வளர்ப்பு மகனாக ஆக்குவது மார்க்க சட்டத்தில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது’ என்றும் ‘நபி (ஸல்) அவர்களுக்கு பல உன்னத நோக்கங்களுக்காக ஏனைய முஸ்லிம்களைவிட திருமண விஷயத்தில் சிறப்புச் சலுகையை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்’ என்றும் முஸ்லிம்கள் புரிந்துகொண்டனர்.

நபி (ஸல்) தங்களது மனைவிமார்களுடன் மிக அழகிய முறையில் உயர்ந்த பண்புகளுடனும் சிறந்த குணங்களுடனும் வாழ்க்கை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் அவ்வாறே உயர்ந்த குணங்களும் சிறந்த பண்புகளும் பெற்றிருந்தனர். பொது மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வறுமையில் வாழ்ந்தும், நபி (ஸல்) அவர்களுக்குப் பணிந்து, பணிவிடை செய்து நல்ல மனைவியர்களாகத் திகழ்ந்தார்கள்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அல்லாஹ்விடம் சென்றடையும் வரை மெல்லிய ரொட்டியை அவர்கள் பார்த்ததாக எனக்குத் தெரியாது. பொறித்த ஆட்டுக் கறியை நபி (ஸல்) சுவைத்ததே இல்லை. (ஸஹீஹுல் புகாரி)

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்து விட்டோம். நபி (ஸல்) அவர்களின் வீடுகளில் எதுவும் சமைக்கப்படவில்லை.” உர்வா, “நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? என்று ஆயிஷாவிடம் கேட்டார். அதற்கு, “பேரீத்தம் பழங்களையும் தண்ணீரையும் உண்டு வாழ்ந்தோம்” என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள். இதுபோன்ற அநேக சம்பவங்கள் ஹதீஸ் நூற்களில் பதிவாகியுள்ளன. (ஸஹீஹுல் புகாரி)

வறுமையிலும் நெருக்கடியிலும் வாழ்ந்த போதிலும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர்கள் முகம் சுளித்ததோ, மனம் வருந்தியதோ, முறையீடு செய்ததோ இல்லை. ஆம்! அவர்களும் மனிதர்கள் தானே. இவ்வாறு ஒரே ஒரு முறை நிகழ்ந்தது. அதை அல்லாஹ் கண்டித்து ஒரு வசனத்தை இறக்கினான்:

நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன். அன்றி, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நன்மையைக் கருதுபவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்குர்ஆன் 33:28, 29)

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தேர்ந்தெடுத்து, தங்களது உயர்ந்த பண்புகளையும் சிறந்த குணங்களையும் நிலைநாட்டினர். அவர்களில் எவரும் உலகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களுக்கிடையில் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் பொதுவாக சக்களத்திகள் மத்தியில் இருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படவில்லை. அவர்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒரு சில நிகழ்வுகள்தான் நடந்தன. அதையும் அல்லாஹ் கண்டித்து விட்டான். அத்தியாயம் தஹ்ரீமின் துவக்கத்திலிருந்து ஐந்து வசனங்கள் வரை இதுபற்றியே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இறுதியில்……..

பலதார மணங்களின் அடிப்படையைப் பற்றி ஆழமாக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்த பலதார மணங்களைக் கடுமையாக விமர்சிக்கும் ஐரோப்பியர்களின் வாழ்க்கையையும், அவர்கள் படும் சிரமங்களையும், துன்பங்களையும், அவர்கள் புரியும் குற்றங்களையும், செய்யும் அசிங்கங்களையும் இந்த நேரிய அடிப்படையிலிருந்து விலகியதால், அவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்களையும், துயரங்களையும் ஆழிய கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்தால் பலதார மணம் மிக அவசியமானதும், இன்றியமையாததும், மிகச் சரியான தீர்வு எனவும் விளங்கிக் கொள்ளலாம். அறிவுடையோருக்கு இதில் நல்லதோர் படிப்பினை உண்டு.

பண்புகளும் நற்குணங்களும்

வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள். மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது கண்ணியம் வேரூன்றி இருந்தது. நபியவர்களை பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதுபோன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துகள் வெட்டப்படுவதைக் கூட பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், நபியவர்களின் நகத்துக்கு ஓர் இடையூறு ஏற்படுவதை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும் அழகிய குணங்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததுதான் தோழர்களின் இந்த நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் குணங்களையும் பண்புகளையும் முழுமையாக நம்மால் விவரிக்க முடியாது என்ற இயலாமையை ஏற்றுக் கொள்வதுடன் அடுத்து வரும் பக்கங்களில் அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை முடிந்தளவு சுருக்கமாகக் கூறுகிறோம்.

பேரழகு உடையவர்

நபி (ஸல்) ஹிஜ்ரா செய்து மதீனா செல்லும் வழியில் குஜாம்ய்யா கிளையைச் சார்ந்த ‘உம்மு மஅபத்’ என்ற பெண்ணின் கூடாரத்தைக் கடந்துச் சென்றார்கள். இந்நிகழ்ச்சியைப் பற்றி ஹிஜ்ரா பாடத்தில் முன்னர் கூறியிருக்கிறோம். வீடு திரும்பிய தனது கணவர் விசாரித்த போது நபியவர்களைப் பற்றி உம்மு மஅபத் விவரித்தது யாதெனில்:

பிரகாசமான முகம் உடையவர் அழகிய குணம் பெற்றவர் வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர் தலை சிறுத்தவரும் அல்லர் கவர்ச்சிமிக்கவர் பேரழகு உடையவர் கருத்த புருவம் கொண்டவர் நீண்ட இமைமுடி பெற்றவர் கம்பீரக் குரல் வளம் கொண்டவர் உயர்ந்த கழுத்துள்ளவர் கருவிழி கொண்டவர் மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர் வில் புருவம் கொண்டவர் கூட்டுப் புருவம் கொண்டவர் கருண்ட தலைமுடி கொண்டவர் அவரது அமைதி கம்பீரத்தைத் தரும் ஒளி இலங்கும் பேச்சுடையவர் தூரமாகப் பார்த்தால் அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார் அருகில் சென்றால் பழக இனிமையானவர் நற்பண்பாளர் நாவலர் தெளிந்த நடையுடைய பேச்சாளர் நீளமாகவோ சுருக்கமாகவோ இல்லாமல் நடுத்தரமான சொல்லாற்றல் பெற்றவர் அவருடைய மொழிதல் மணிமாலை உதிர்வது போல் இருக்கும் நடுத்தர உயரமுடையவர் பார்வைக்கு நெட்டையாகவோ குட்டையாகவோ இருக்க மாட்டார் இரண்டு கிளைகளுக்கு இடையிலுள்ள ஒரு கிளையைப் போன்றவர் மூவர் குழுவில் பளிச்செனத் தெரிபவர் சிறந்த கண்ணியம் வாய்ந்தவர் நண்பர்கள் புடை சூழ இருப்பவர் அவர் உரைத்தால் யாவரும் செவிமடுக்கின்றனர் அவர் ஆணையிட்டால் நிறைவேற்ற விரைகின்றனர் பணிவிடைக்குரியவர் மக்கள் கூட்டம் பெற்றவர் கடுகடுப்பானவருமல்லர் பிறரைக் குறைவாக மதிப்பவரும் அல்லர். (ஜாதுல் மஆது)

அலீ இப்னு அபீதாலிப் (ரழி) நபி (ஸல்) அவர்களை வருணித்துக் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) மிக நெட்டையோ மிகக் குட்டையோ இல்லை கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர் அடர்த்தியான சுருட்டை முடி உடையவருமல்லர் கோரைமுடி கொண்டவருமல்லர் சுருட்டை, கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர் பெருத்த உடம்பில்லை முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல சிவந்த வெண்மை நிறமானவர் கருவிழி உடையவர் நீண்ட இமை முடி பெற்றவர் புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கொடி போன்ற முடி உள்ளவர்கள் உடம்பில் முடி இருக்காது உள்ளங்காலும் கையும் தடித்தவர்கள் அவர்கள் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடு நடப்பார்கள் திரும்பிப் பார்த்தால் முழுமையாகத் திரும்பிப் பார்ப்பார்கள் இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரை இருக்கும் தூதர்களில் இறுதியானவர் மக்களில் மிக அதிகம் வழங்கும் கை உள்ளவர் துணிவுடைய உள்ளம் கொண்டவர் மக்களில் மிக அதிகம் உண்மை பேசுபவர் மக்களில் பொறுப்புகளை மிக அதிகம் நிறைவேற்றுபவர் மிக மிருதுவானவர் பழக மிகக் கண்ணியமிக்கவர் திடீரெனப் பார்த்தால் அச்சம் தரும் வடிவம் அறிமுகமானவர் அவரை விரும்புவர் அவர்களை யார் வருணித்தாலும் ‘அவர்களுக்கு முன்னும் அவர்களுக்கு பின்னும் அவர்களைப் போன்று யாரையும் பார்த்ததில்லை’ என்றே கூறுவர். (இப்னு ஹிஷாம்)

அலீ (ரழி) கூறுவதாக மற்றொரு அறிவிப்பில் வருகிறது: நபி (ஸல்) கனத்த தலையுள்ளவர் மொத்தமான மூட்டுகளைக் கொண்டவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கோடு போன்ற முடிகளைக் கொண்டவர் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போல் நடப்பார். (ஜாமிவுத் திர்மிதி)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அகலமான வாய் உடையவர் அகல விழி கொண்டவர் சதை குறைந்த கெண்டைக்கால் பெற்றவர். (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ துஃபைல் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) வெண்மை நிறமுடையவர் அழகிய முகமுடையவர் நடுத்தர உடம்பும், உயரமும் கொண்டவர். (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அகலமான கரமுடையவர்கள் முற்றிலும் சிவந்த நிறம் கொண்டவர் அல்லர். அவர் உயிர் பிரியும் போது தாடியிலும் தலையிலும் சேர்த்து இருபது வெள்ளை முடிகள் கூட இல்லை. நரை இரு பொட்டுப் பகுதியில் (கிருதாப் பகுதியில்) மட்டும் இருந்தது. தலையிலும் மிகக் கொஞ்சமாக நரைமுடி இருந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ ஜுஹைஃபா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் கீழ் உதட்டுக்கு கீழே கொஞ்சம் முடி வெண்மையாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) அவர்களின் கீழ் உதட்டு முடிகளில் சிறிது வெண்மை இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

பராஃ (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) நடுத்தர உயரமுள்ளவர்கள். அகன்ற புஜம் உடையவர்கள். அவர்களது தலைமுடி காது சோனை வரை இருக்கும். ஒரு நாள் நபி (ஸல்) அவர்களைச் சிவப்பு ஆடையில் பார்த்தேன். அவர்களை விட அழகான எதையும் பார்க்கவில்லை. வேதமுடையவர்களை ஒத்திருக்க வேண்டும் என்ற பிரியத்தில் நபி (ஸல்) தங்களது முடியை வகிடு எடுக்காமல் நேராக சீவிக் கொண்டிருந்தார்கள். பின்பு தங்களது தலைக்கு வகிடு எடுத்து சீவினார்கள். நபி (ஸல்) மக்களில் மிக அழகிய முகமும் குணமும் கொண்டவர்கள். அவர்களிடம் “நபியின் முகம் கத்தியைப் போன்று இருந்ததா?” எனக் கேட்க “சந்திரனைப் போல், அதாவது சற்று வட்ட வடிவ முகம் உடையவர்களாக இருந்தார்கள்” என்று பதிலளித்தார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ருபய்யி பின்த் முஅவ்வித் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களை நீ பார்த்தால் அவர்கள் உதிக்கும் அதிகாலை சூரியனைப் போல் இலங்குவார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் சந்திர இரவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன். நபி (ஸல்) சிவப்பு ஆடை அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் சந்திரனையும் மாறி மாறிப் பார்த்தேன். நபி (ஸல்) அவர்களே எனக்கு மிக அழகாக தென்பட்டார்கள். (ஷமாயிலுத் திர்மிதி, மிஷ்காத்)

அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களை விட மிக அழகான எதையும் நான் பார்த்ததில்லை. அவர்களது வதனத்தில் சூரியன் இலங்கியது. அவர்களை விட வேகமாக நடப்பவர்களை நான் கண்டதில்லை. பூமி அவர்களுக்கு சுருட்டப்பட்டது போல் இருக்கும். நாங்கள் சிரமத்துடன் நடப்போம். நபி (ஸல்) அவர்களோ சிரமம் தெரியாமல் நடப்பார்கள். (ஜாமிவுத் திர்மிதி, மிஷ்காத்)

கஅப் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சிரித்தால் அவர்களது முகம் மிக ஒளி பொருந்தியதாக, பார்ப்பவர்களுக்கு சந்திரனைப் போன்று இருக்கும். (ஸஹீஹுல் புகாரி)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் செருப்பு தைத்துக் கொண்டிருக்க, ஆயிஷா (ரழி) ஓர் ஆடையை நெய்து கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) உடலில் இருந்து வியர்வை வந்தது. நபி (ஸல்) அவர்களின் முக ரேகைகள் ஒளியால் இலங்கிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரழி) திடுக்கிட்டார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ கபீர் ஹுதலி தங்களைப் பார்த்தால் தமது

“அவரது முக ரேகைகளை நீங்கள் பார்த்தால்
மின்னும் நட்சத்திரத்தைப் போன்று இலங்குவதைப் பார்க்கலாம்.” (தஹ்தீப் தாரீக் திமஷ்க்)

என்ற கவிகளுக்கு பிறரை விட நீங்களே பொருத்தமானவர்” என்று கூறுவார்.

நபி (ஸல்) அவர்களைப் பார்த்தால் அபூபக்ர் (ரழி),

நம்பிக்கைக்குரியவர் தெரிவு செய்யப்பட்டவர்
நன்மைக்கு அழைப்பவர் இருள் நீங்கிய சந்திரனைப் போன்றவர். (குலாஸத்துஸ் ஸியர்)

என்ற கவிதையைக் கூறுவார்கள்.

ஜுஹைர் என்ற கவிஞர் ஹரீம் இப்னு சினானுக்கு படித்த கவிதையை நபி (ஸல்) அவர்களுக்கு உமர் (ரழி) கூறுவார்கள்.

“நீ மனிதனல்லாத வேறு படைப்பாக இருந்திருந்தால்,
பவுர்ணமி இரவின் நிலவாக இருந்திருப்பாய்.”

இக்கவிதையைப் பாடிவிட்டு உண்மையில் நபி (ஸல்) அப்படித்தான் இருந்தார்கள் என்று கூறுவார்கள். (குலாஸத்துஸ் ஸியர்)

நபியவர்கள் கோபித்தால் முகம் சிவந்துவிடும். மாதுளம் பழ முத்துக்களை முகத்தில் தூவப்பட்டது போன்றிருக்கும். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மெல்லிய கெண்டைக்கால் உடையவர்கள். அவர்களது சிரிப்பு புன்முறுவலாகத்தான் இருக்கும். அவர்களைப் பார்த்தால் கண்ணில் ‘சுர்மா’ இட்டதைப் போல் இருக்கும். ஆனால், சுர்மா இட்டவல்லை. (ஜாமிவுத் திர்மிதி)

உமர் இப்னு கத்தாப் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அழகிய பற்களைக் கொண்டவர்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகன்ற முன் பற்கள் உடையவர்கள் அவர்கள் பேசினால் பற்களின் இடைவெளியிலிருந்து பிரகாசம் வெளியேறுவது போன்றிருக்கும் அவர்களது கழுத்து தூய்மையான வெள்ளிச் சிலையின் கழுத்தைப் போல் இருக்கும் அவர்களது இமை முடி நீளமாக இருக்கும். தாடி அடர்த்தியாக, நெற்றி விசாலமாக இருக்கும் புருவம் அடர்ந்து வில் வடிவம் பெற்றிருக்கும் நீண்ட மெல்லிய மூக்குடையவர். மிருதுவான மெல்லிய கன்னமுடையவர். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை குச்சிப் போல முடி இருக்கும். வயிற்றிலோ நெஞ்சிலோ அதைத் தவிர முடி இருக்காது. குடங்கையிலும் தோள் புஜத்திலும் முடி இருக்கும். மார்பும் வயிறும் சமமானவர். அகன்ற மார்பும், நீளமான மணிக்கட்டும், விசாலமான உள்ளங்கையும் உள்ளவர் நீளமான முன் கையும், கெண்டைக்காலும் உள்ளவர் உள்ளங்கால் நன்கு குவிந்தவர்கள் விரல்கள் நீளமாக இருக்கும் அவர்கள் நடந்தால் கால்களை எடுத்து வைப்பவரைப் போல் பணிவுடனும் முன் பக்கம் சாய்ந்தவராகவும் நடப்பார்கள். (குலாஸத்துஸ் ஸீரா, தாரமி, மிஷ்காத்)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் கையைவிட மென்மையான பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப் போன்று வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை.

மற்றொரு அறிவிப்பில்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து வரக்கூடிய நறுமணத்தைவிட வேறு நறுமணத்தை அம்பலோ அல்லது கஸ்தூயிலோ நான் நுகர்ந்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ ஜுஹைஃபா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கரத்தை எடுத்து என் கன்னத்தில் வைத்தேன். அது பனிக் கட்டியை விட குளிர்ச்சியாக, கஸ்தூரியை விட மணமிக்கதாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) கூறுகிறார்கள்: நான் சிறுவனாக இருந்த போது எனது கன்னத்தை நபி (ஸல்) அவர்கள் தடவினார்கள். அவர்களது கை மிகக் குளிர்ச்சியாகவும், அத்தர் பாட்டிலிருந்து கையை எடுத்தது போன்று மிக்க நறுமணமாகவும் இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் வியர்வை, முத்துகள் போல் இருக்கும். (ஸஹீஹ் முஸ்லிம்)

உம்மு சுலைம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் வியர்வை மிக உயர்ந்த நறுமணமாக இருக்கும்.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) ஒரு பாதையில் சென்றிருக்க அதே பாதையில் மற்றொருவர் செல்கிறார் என்றால் அவர் அவ்வழியில் நபி (ஸல்) சென்றுள்ளார்கள் என்பதை அவர்களது வாடையின் மூலம் அறிந்து கொள்ளலாம். (மிஷ்காத், முஸ்னத் தாரமி)

நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கு மத்தியில் புறாவின் முட்டையைப் போல் மேனி நிறத்திலேயே நபித்துவ முத்திரை இருந்தது. அது இடது புஜத்திற்கு மேல் மிருதுவான தசைக்கு அருகில் மச்சம் போன்று இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)

உயர் பண்பாளர்

நபி (ஸல்) அவர்கள் தௌ;ளத் தெளிவாக இலக்கிய நயத்துடன் மொழிபவர்களாக இருந்தார்கள். இதனால் மக்களில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள். மக்களில் யாரும் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. நல்லியல்பு பெற்றவர்கள். அவர்களுடைய பேச்சு சரளமாகவும், சொல் தெளிவாகவும், கருத்து சரியானதாகவும் இருக்கும். ஆனால், அதற்காக சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களது சொல்லாக்கம் முழுமை பெற்றதாக இருக்கும். நூதனமான நுட்பங்களால் சிறப்பிக்கப்பட்டவர்கள். அரபிய மொழிகளின் பல வகைகளைத் தெரிந்திருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடம் அவரவர் பாணியில் அவரவர் தொனியில் உரையாற்றுவார்கள். நகரவாசிகளைப் போல் இலக்கியமாகவும், கிராமவாசிகளைப் போல் எளிய முறையிலும் அவரவர் நடைக்கேற்ப பேசுவார்கள். இது மட்டுமின்றி வஹியினால் இறை உதவியைப் பெற்றிருந்தார்கள்.

சகித்துக் கொள்வதும், பொறுத்துப் போவதும், சக்தியிருந்து மன்னிப்பதும், சிரமங்களைத் தாங்கிக் கொள்வதும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய இயற்கைப் பண்புகளாகும். எத்தனையோ அறிவாளிகள், மேதாவிகள் சமயத்தில் சருக்கலாம். பொறுமைசாலிக்கும் சமயத்தில் கோபம் தலைக்கேறலாம். இடையூறு அதிகமான போது நபி (ஸல்) அவர்களின் சகிப்புத் தன்மை அதிகரித்தது. மூடனின் வரம்பு மீறல் நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுமையைத்தான் தந்தது.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதில் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகு தூரம் சென்று விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காகப் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக பழிவாங்குவார்கள். மெதுவாக கோபம் வரும். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். கணக்கிட முடியாத அளவு தான தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல் ஏழை எளியோருக்கு தேவையுடையோருக்கு செலவு செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகக் கொடைத் தன்மையுடையவர்களாக விளங்கினார்கள். வானவர் ஜிப்ரீல், நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும் நாட்களில் மிக அதிகம் நபி (ஸல்) கொடையளிப்பார்கள். ஜிப்ரீல் ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து குர்ஆனை பரிமாறிக் கொள்வார்கள். அக்காலங்களில் விரைந்து வீசும் காற்றின் வேகத்தை விட செல்வங்களை வாரி வழங்குவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஜாபிர் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஏதாவதொன்று கேட்கப்பட்டு, அவர்கள் அதை இல்லை என்று சொன்னதில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் வீரமும் துணிவும் யாரும் அறியாத ஒன்றல்ல. நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகுந்த துணிச்சல் கொண்டவர்களாக விளங்கினார்கள். எத்தனையோ அபாயமான நிலைகளைச் சந்தித்துள்ளார்கள். தங்களிடமுள்ள வாள் வீச்சு வீரர்களும், அம்பெறியும் வீரர்களும் அவர்களைத் தனிமையில் பலமுறை விட்டுவிட்டு சென்றுவிட்ட போதிலும் நிலைகுலையாமல், தடுமாற்றமில்லாமல், புறுமுதுகுக் காட்டாமல், எதிரிகளை எதிர்த்து நின்றார்கள். எத்தனையோ வீரர்கள் ஒரு சில நேரங்களில் புறமுதுகு காட்டி ஓடி இருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை.

அலீ (ரழி) கூறுகிறார்கள்: போர் சூடுபிடித்து கண்கள் சிவந்து விடும்போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கருகே சென்று எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். எதிரிகளுக்கு அருகில் நபி (ஸல்) அவர்களைத் தவிர எங்களில் எவரும் நெருக்கமாக இருந்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: மதீனாவாசிகள் ஒரு நாள் இரவு சப்தத்தைக் கேட்டு பயந்து விட்டனர். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் விரைந்து செல்கையில் அதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று விவரத்தை அறிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கழுத்தில் வாளை தொங்கவிட்டுக் கொண்டு அபூ தல்ஹாவுக்குரிய குதிரையில் எவ்வித சேனம் கடிவாளம் ஏதுமின்றி சென்று வந்தார்கள். மக்களைப் பார்த்து “நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை பயப்பட வேண்டியதில்லை” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மிகக் கூச்சச் சுபாவமுள்ளவராக இருந்தார்கள்.

அபூ சயீத் குத் (ரழி) கூறுகிறார்கள்: திரை மறைவிலுள்ள கன்னிப் பெண்களை விட அதிக நாணமுள்ளவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். ஏதாவது பிடிக்காவிட்டால் அதை அவர்களது முகத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். எவரது முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பார்வையைக் கீழ்நோக்கி வைத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் மேல் நோக்கி பார்ப்பதை விட கீழ்நோக்கி பார்ப்பதே அதிகம். பெரும்பாலும் கடைக்கண்ணால் பார்ப்பார்கள். வெட்கத்தினாலும் உயர்ந்த பண்பின் காரணத்தாலும் யாரையும் வெறுப்பூட்டும்படி பேச மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஒருவரைப் பற்றி விரும்பாத செய்தி தங்களுக்குக் கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் “சிலர் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்பார்கள். அவருடைய பெயரைக் குறிப்பிட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள்.

“நாணத்தால் பார்வையைத் தாழ்த்துகிறார்!
அவர் மீது பயத்தால் பார்வை குனிகிறது.
அவர் புன் முறுவல் பூத்தால்தான் அவருடன் பேச முடியும்.”

என்ற ஃபரஸ்தக்கின் கவிக்கு நபி (ஸல்) அவர்களே மிகத் தகுதியுள்ளவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களில் “மிக்க நீதவானாக, ஒழுக்க சீலராக, உண்மையாளராக, நம்பிக்கையாளராகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இப்பண்புகளை உடன் இருந்தவர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட நன்கு அறிந்து வைத்திருந்தனர். நபித்துவம் கிடைக்கும் முன்பே அவர்களை ‘நம்பிக்கைக்குரியவர் (அல் அமீன்)’ என்று மக்கள் அழைத்தனர். இஸ்லாம் வருவதற்கு முன்பே அறியாமைக் காலத்தில் கூட மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு நாடி அவர்களிடம் வருவார்கள்.

அலீ (ரழி) கூறுகிறார்கள்: ஒருமுறை நபியவர்களை பார்த்த அபூஜஹ்ல் “நாங்கள் உங்களை பொய்ப்பிக்கவில்லை. நீங்கள் சொல்கின்ற மார்க்கத்தைத் தான் பொய்ப்பிக்கிறோம்” என்றான். இது விஷயமாக அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். (அல்குர்ஆன் 6:33) (மிஷ்காத், ஸுனனுத் திர்மிதி)

அன்றொரு நாள் மன்னன் ஹிர்கல் (ஹெர்குலிஸ்) அவையிலே அபூ ஸுஃப்யான் எதிரியாக இருந்தும் நபியவர்களைப் பற்றிக் கூறிய உரையாடல் நினைவுகூரத் தக்கது. “அவர் (நபி) இஸ்லாமைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு, பொய் பேசியுள்ளார் என்று அவர் மீது நீங்கள் பழி சுமத்தி இருக்கிறீர்களா?” என்று மன்னன் கேட்க, அதற்கு அபூ ஸுஃப்யான், “அவ்வாறு அவர் ஒருபோதும் பொய் பேசியதில்லை” என்று கூறினார்.

நபி (ஸல்) மற்றவர்களை விட அதிகம் பணிவுடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டு விலகியவர்களாகவும் இருந்தார்கள். மக்கள் அரசர் முன்பு எழுந்து நிற்பது போன்று தன் முன் எழுந்து நிற்பதைத் தடை செய்தார்கள். நலிந்தோர்களையும், நோயாளிகளையும் நலம் விசாரிப்பார்கள். ஏழைகளுடன் சேர்ந்திருப்பார்கள். அடிமை விருந்துக்கு அழைத்தாலும் இன் முகத்துடன் ஏற்றுக் கொள்வார்கள். தங்களுடைய தோழர்களுடன் அவர்களில் ஒருவராக அமர்ந்திருப்பார்கள்.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) தங்களது காலணிகளையும், தங்களது ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். உங்களில் ஒருவர் வீட்டில் வேலை செய்வது போன்றே நபியவர்களும் தங்களுடைய வீட்டில் வேலை செய்வார்கள். மனிதர்களில் ஒருவராகவே இருந்தார்கள். தங்களது ஆடைகளைத் தானே சுத்தம் செய்வார்கள். தனது ஆட்டில் தானே பாலைக் கறப்பார்கள். தங்களது வேலைகளைத் தானே செய்து கொள்வார்கள். (மிஷ்காத்)

மற்றெவரையும் விட அதிகம் நபி (ஸல்) வாக்குகளை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். உறவினர்களுடன் சேர்ந்து நெருக்கமாக வாழ்ந்தார்கள். மக்கள் மீது மிக்க அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மக்களில் மிக உன்னதமான குணம் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அருவருப்பான சொல், செயல் ஏதும் அவர்களிடம் இருந்ததில்லை. சபிக்கும் வழக்கமோ, கடைத் தெருக்களில் கூச்சல் போடும் பேதைமையோ கிடையாது. கெட்டதைக் கெட்டதை கொண்டு நிவர்த்தி செய்ய மாட்டார்கள். மாறாக, அதனை மன்னித்து மறந்து விடுவார்கள். எவரையும் தனக்குப் பின்னால் நடக்க அனுமதிக்க மாட்டார்கள். உடையிலோ ஆடையிலோ தங்களுடைய அடிமைகளைக் காட்டிலும் தம்மை உயர்வாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு பணிவிடை செய்தவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். தங்களதுப் பணியாளரை ‘சீ’ என்று கூட கூறியதில்லை. ஒரு செயலை செய்ததற்காகவோ, செய்யாமல் போனதற்காகவோ யாரையும் கண்டித்ததில்லை.

நபி (ஸல்) தோழர்களை அதிகம் நேசித்து, அவர்களுடன் அதிகம் பழகுவார்கள். அவர்களுடைய ஜனாஸாக்களிலும் கலந்து கொள்வார்கள். ஏழையை அவரது இல்லாமையினால் இளக்காரமாகப் பார்க்க மாட்டார்கள்.

ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் அறுக்கிறேன் என்றார் ஒருவர் உரிக்கிறேன் என்றார் ஒருவர் சமைக்கிறேன் என்றார் நபி (ஸல்) “அதற்காக நான் விறகுகளை சேர்த்து வருவேன்” என்றார்கள். அதற்கு தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு ஏன் சிரமம்! நாங்கள் இதைச் செய்து கொள்கிறோம்” என்றனர். அப்போது நபி (ஸல்) “உங்களால் செய்ய முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் உங்களில் என்னைத் தனியே உயர்த்திக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில், ஒருவர் தனது தோழர்களில் தனியாக வேறுபடுத்திக் காட்டுவதை அல்லாஹ் வெறுக்கிறான்” என்று கூறி விறகுகளைச் சேகரிக்கச் சென்றார்கள். (குலாஸத்துஸ் ஸியர்)

நபியவர்களை ந்து வருணிப்பதை நாம் கேட்போம்: “நபி (ஸல்) தொடர் கவலைக் கொண்டவர்கள் நிரந்தரச் சிந்தனையுடையவர்கள் அவர்களுக்கு ஓய்வு கிடையாது தேவையின்றி பேசமாட்டார்கள் நீண்ட நேரம் அமைதியாக இருப்பார்கள் பேசினால் வாய் நிரம்பப் பேசுவார்கள் பேச்சை முடிக்கும் போது முழுமையான வார்த்தைகளைக் கொண்டு முடிப்பார்கள். கருத்தாழமுள்ள வாக்கியங்களால் உரையாற்றுவார்கள் தெளிவாகப் பேசுவார்கள் அது தேவையை விட குறைவாகவோ அதிகமாகவோ இருக்காது. முரட்டுக் குணம் கொண்டவரும் இல்லை அற்பமானவரும் இல்லை அல்லாஹ்வின் அருட்கொடை குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக மதிப்பார்கள் எதையும் இகழமாட்டார்கள் உணவுகளைப் புகழவோ குறைகூறவோ மாட்டார்கள்.

சத்தியத்திற்கு பங்கம் விளைவித்தால் அவர்களுடைய கோபத்திற்கு முன் யாரும் நிற்க முடியாது பழிவாங்கியே தீருவார்கள். தங்களுக்காக கோபப்படவோ, பழிவாங்கவோ மாட்டார்கள் சந்தோஷம் மிகுந்தால் தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்வார்கள் பெரும்பாலும் புன்முறுவலாகவே சிரிப்பார்கள் சிரிக்கும் போது பற்கள் பனிக்கட்டிகளைப் போல் காட்சியளிக்கும் தேவையற்றதைப் பேசாமல் தங்களது நாவைப் பாதுகாத்துக் கொண்டு தேவையானவற்றையே பேசுவார்கள் தங்களது தோழர்களிடையே நட்பை ஏற்படுத்துவார்கள் பிரிக்க மாட்டார்கள் ஒவ்வொரு சமுதாயத்தின் சிறப்புக்குரியோர்களைத் தானும் கண்ணியப்படுத்திச் சிறப்பிப்பார்கள் அவரையே அவர்களின் நிர்வாகியாக நியமிப்பார்கள் ஒருவருடைய தீங்கினால் அவரிடமிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள், முற்றிலும் அவரை விட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார்கள் காணாத தங்களின் தோழர்களைப் பற்றி அக்கரையாக விசாரிப்பார்கள் மக்களிடம் அவர்களின் நிலவரங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள் நல்லதை நல்லது என்றும் சரியானதென்றும் கூறுவார்கள் கெட்டதைக் கெட்டதென்று உரைத்து அதனைப் புறக்கணித்து விடுவார்கள்.

நடுநிலையாளர்கள் முரண்பட மாட்டார்கள் மக்கள் மறந்து விடுவார்கள் என்பதால் அவர்கள் எதையும் மறவாமல் இருப்பார்கள் எல்லா நிலைகளிலும் ஆயத்தமாக இருப்பார்கள் சத்தியத்தில் குறைவு செய்யவோ அதை மீறவோ மாட்டார்கள் மக்களில் சிறந்தவர்தான் நபியவர்களுடன் இருப்பர். நபியவர்களிடம் மிகச் சிறப்பிற்குரியவர்கள் யாரெனில், மக்களுக்கு அதிகம் நன்மையை நாடுபவர்கள்தான் அதிகம் மக்களுக்கு உதவி உபகாரம் புரிபவர்கள்தான் நபியிடம் மிக்க கண்ணியத்திற்குரியவராக இருப்பர் அமர்ந்தாலும் எழுந்தாலும் அல்லாஹ்வையே நினைவு கூர்வார்கள் சபைகளில் தனக்காக இடத்தைத் தெரிவு செய்து கொள்ள மாட்டார்கள் சபைக்குச் சென்றால் சபையின் இறுதியிலேயே அமர்ந்து கொள்வார்கள் அவ்வாறே பிறரையும் பணிப்பார்கள் தன்னுடன் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவருடனும் உரையாடுவார்கள் தன்னைவிட யாரும் நபியவர்களிடம் உயர்ந்தவர் இல்லை, தானே நபியவர்களிடம் நெருக்கமானவர் என்று ஒவ்வொருவரும் எண்ணுமளவுக்கு நடந்து கொள்வார்கள்.

ஒருவர் ஏதாவது தேவைக்காக வந்தால் அவராகச் செல்லும் வரை அவருடன் நபி (ஸல்) இருப்பார்கள் தேவையை கேட்கும் போது அதனை நிறைவேற்றித் தருவார்கள் அல்லது அழகிய பதிலைக் கூறுவார்கள் நபி (ஸல்) தங்களது தயாளத் தன்மையையும் நற்குணங்களையும் அனைத்து மக்களுக்கும் விசாலப்படுத்தியிருந்தார்கள். எனவே, மக்களுக்கு ஒரு தந்தையைப் போல் திகழ்ந்தார்கள். உரிமையில் அவர்களிடம் அனைவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தார்கள். இறையச்சத்தைக் கொண்டே மக்களுடைய சிறப்புகள் நிர்ணயிக்கப்பட்டன. கல்வி, கண்ணியம், பொறுமை, சகிப்புத் தன்மை, வெட்கம், நம்பிக்கை அனைத்தும் நிறைந்ததாக அவர்களது சபை இருந்தது. அங்கு உரத்த குரல்கள் ஒலிக்காது கண்ணியம் குலைக்கப்படாது தவறுகள் நிகழாது இறையச்சத்தால் ஒருவருக்கொருவர் பிரியத்துடன் நடந்துகொள்வர் பெயரிவருக்கு கண்ணியமும் சிறியவர்களுக்கு இரக்கமும் காட்டுவார்கள் தேவையுடையோருக்கு உதவி செய்வார்கள் புதியவர்களுடன் நட்புடன் நடந்து கொள்வார்கள்.

எப்பொழுதும் மலர்ந்த முகமும், இளகிய குணமும், நளினமும் பெற்று இருப்பார்கள் கடுகடுப்பானவரோ, முரட்டுக் குணம் கொண்டவரோ, கூச்சலிடுபவரோ, அருவருப்பாகப் பேசுபவரோ, அதட்டுபவரோ, அதிகம் புகழ்பவரோ அல்லர் விருப்பமற்றதைக் கண்டுகொள்ள மாட்டார்கள் நிராசையாகவும் மாட்டார்கள்.

மூன்று குணங்களை விட்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்:

1) முகஸ்துதி, 2) அதிகம் பேசுவது, 3) தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மக்களைப் பற்றி மூன்று காரியங்களைத் தவிர்த்துக் கொண்டார்கள்:

1) பிறரைப் பழிக்க மாட்டார்கள், 2) பிறரைக் குறைகூற மாட்டார்கள், 3) பிறரின் குறையைத் தேடமாட்டார்கள்.

நன்மையானவற்றைத் தவிர வேறெதுவும் பேசமாட்டார்கள் அவர்கள் பேசினால் சபையோர்கள் அமைதி காப்பர்கள் தங்களின் தலைமீது பறவை அமர்ந்திருப்பது போல் அசையாமல் இருப்பார்கள் நபி (ஸல்) அமைதியானால் தோழர்கள் பேசுவார்கள் நபியின் முன் பேசும்போது தோழர்கள் போட்டியிட்டுக் கொள்ள மாட்டார்கள். யாராவது பேசத் தொடங்கினால் அவர் முடிக்கும் வரை அவருக்காக அமைதி காப்பார்கள் முதலில் பேசியவன் பேச்சை ஏற்பார்கள் மக்கள் சிரிப்பதைக் கண்டு தானும் சிரிப்பார்கள் மக்கள் ஆச்சரியப்படுபவற்றைக் கண்டு தானும் ஆச்சரியப்படுவார்கள் புதியவன் முரட்டுப் பேச்சை சகித்துக் கொள்வார்கள் தேவையுடையோரை நீங்கள் பார்த்தால் அவர்களின் தேவையை நிறைவேற்றுங்கள் என்பார்கள் உதவி உபகாரம் பெற்றவர் நன்றி கூறினால் மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். (ஷமாயிலுத் திர்மிதி, அஷ்ஷிஃபா)

காஜா இப்னு ஜைத் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) சபையினில் கண்ணியத்திற்குரிய வர்களாக தோற்றம் அளிப்பார்கள் தங்களது உடல் உறுப்புகளில் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள் அதிகம் மௌனம் காப்பார்கள். தேவையற்றதைப் பேசமாட்டார்கள் அழகிய முறையில் உரையாடாத வரை புறக்கணித்து விடுவார்கள் அவர்கள் புன்முறுவலாகவே சிரிப்பார்கள் அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும் தேவையை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்காது நபியவர்களின் கண்ணியத்தை முன்னிட்டும் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு முன் தோழர்கள் புன்முறுவலாகவே சிரிப்பார்கள். (அஷ்ஷிஃபா)

சுருங்கக் கூறின் நபி (ஸல்) முழுமை பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான்.

“நிச்சயமாக நீங்கள் நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.” (அல்குர்ஆன் 68:4)

என்று அவர்களைப் புகழ்ந்து கூறியிருக்கிறான்.

இந்த நற்பண்புகள் நபியவர்கள் மீது மக்களுக்கு விருப்பத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது. இப்பண்புகள் அவர்களை உள்ளங்கவர் தலைவராகத் திகழச் செய்தது. முரண்டு பிடித்த அவரது சமுதாய உள்ளங்களைப் பணிய வைத்தது. மக்களைக் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் சேர்த்தது.

இதுவரை நாம் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறிய நற்பண்புகள் அவர்களது மகத்தான தன்மைகளின் சிறு கோடுகளே. அவர்களிடமிருந்த உயர்ந்த பண்புகளின் உண்மை நிலைமையையும் அதன் ஆழத்தையும் எவராலும் அறிந்து கொள்ள முடியாது. தனது இறைவனின் பிரகாசத்தால் ஒளிபெற்று, குர்ஆனை தனது பண்புகளாகக் கொண்டு, மேன்மையின் உச்சக்கட்டத்தை அடைந்த, மனித சமுதாயத்திலேயே மிக மகத்தானவன் உண்மையை அறிந்து கொள்ள யாரால்தான் முடியும்?

அல்லாஹ்வே! முஹம்மதின் மீதும், முஹம்மதின் கிளையார்கள் மீதும் உனது தனிப்பட்ட கருணையை அருள்வாயாக! இப்றாஹீமின் மீதும் இப்றாஹீமின் கிளையார்கள் மீதும் உனது தனிப்பட்ட கருணையை அருளியது போன்று நிச்சயமாக நீயே புகழுக்குரியவன் கண்ணித்திற்குரியவன். அல்லாஹ்வே! முஹம்மதின் மீதும் முஹம்மதின் கிளையார்கள் மீதும் அருள் வளங்களை அருள்வாயாக! இப்றாஹீமின் மீதும் இப்றாஹீமின் கிளையார்கள் மீதும் அருள் வளங்களை நீ அருள் செய்தது போன்று நிச்சயமாக நீயே புகழுக்குரியவன் கண்ணியத்திற்குரியவன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s