பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலியாகும் பரிதாப உயிர்கள்….

அது 1999-ம் வருடம் நவம்பர் 24-ம் தேதி… காஞ்சிபுரத்தில் உள்ள பெப்சி தொழிற்சாலை முன்பு படையோடு வந்து இறங்குகிறார் டி.ஆர்.ஓ. சகாயம். அடுத்த சில நிமிடங்களில் ஆலைக்கு சீல்! ‘குளிர்பானத்தில் அழுக்குப் படலம்’ எனச் சொல்லி பெரியவர் ஒருவர் கொடுத்த புகாரில்தான் இந்த அதிரடி. அதோடு நிற்கவில்லை; மாவட்டம் முழுக்க பெப்சி விற்பனைக்கும் தடை போட்டார் சகாயம்.

இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி 8.12.1999 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘இந்த உள்ளம் அலறுதே ஐயோ!’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
 அதன் பின்னர் சின்ன சின்னதாக பிரச்னை​கள் கிளம்பினாலும், மிகப் பெரிய இடை​வெளிக்குப் பிறகு இப்போது ஒரு சிறுமியின் உயிர் பறிக்கக் காரணமாக அமைந்துவிட்டது என்று பெப்சி மீது பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது!
கடலூர் மாவட்டம் சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சா புலி. இவருக்கு அபிராமி, லலிதா, கௌசல்யா மற்றும் பரமசிவம் என நான்கு குழந்தைகள். அவர்களில் அபிராமி இப்போது உயிரோடு இல்லை. மற்ற மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், அவர்கள் குடித்த ‘பெப்சி’ குளிர்பானம்தான் என்று சொல்லப்படுகிறது.
குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு கடலூர் மருத்துவமனை வளாகத்தில் கதறித் துடித்துக்கொண்டிருந்த தந்தை அஞ்சா புலியிடம் பேசினோம். ”எனக்கு ஒரு ஆண் குழந்தை, மூன்று பெண் குழந்தைங்க. கஷ்டப்பட்டுக் கூலிவேலை செய்துதான் இவர்களையெல்லாம் காப்பாத்​திட்டு வந்தேன். வேலைக்குப் போய் வீட்டுக்குத் திரும்பி வரும்போதே, குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வந்துடுவேன். அன்னைக்கு எங்க ஊர் கடையில அரை லிட்டர் பெப்சி ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வந்தேன். நான்கு குழந்தைகளுக்கும் கொஞ்​சம் கொஞ்சம் குடிக்கக் கொடுத்தேன். அதை குடிச்ச கொஞ்ச நேரத்திலேயே சின்ன மகள் அபிராமி என்​கிட்ட வந்து, ‘அப்பா… எனக்குத் தலையெல்லாம் சுத்துது. மயக்கமா வருதுப்பா’ன்னு சொன்னா. சொல்லிகிட்டு இருக்கும்போதே… திடீ​ருன்னு மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா. அவ தலையைத் தூக்கிப் பார்த்தா, வாயெல்லாம் நுரை தள்ளிகிட்டு இருந்தது.
நான் பதறிப் போய் பக்கத்தில் இருந்தவங்களைக் கூப்பிடறதுக்குள்ளேயே, மத்த மூணு குழந்தைகளும் அதேபோல் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாங்க. இதைப் பார்த்து ஊரே திரண்டு வந்துடுச்சு. எல்லோரையும் தூக்கிட்டு வந்து பக்கத்துல இருந்த தனியார் மருத்துவமனையில் காட்டினோம். அவங்க, கடலூர் கொண்டுபோங்கன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் கடலூர் மருத்துவனையில சேர்த்தோம். என் பெரிய மக அபிராமி பிழைக்காம போயிட்டா.
சின்ன மக கௌசல்யாவையும் மகன் பரமசிவத்​தையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் சேர்த்திருக்காங்க. லலிதா மட்டும் இங்கே இருக்கு. அவர்களோட நிலைமையும் மோசமா இருக்குன்னு சொல்றாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எதையோ குடிக்க வாங்கிக் கொடுத்து என் கையாலேயே என் புள்ளையைக் கொன்னுட்ட பாவியாகிட்டேனே…” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.
இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜாவிடம் பேசினோம். ”அவர்கள் காலாவதியான பெப்சி குளிர்பானத்தை அருந்தியிருக்கிறார்கள். காலாவதியானதால் குளிர்பானம் விஷத்தன்மையாக மாறியுள்ளது. அதனால்தான் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்துபோன குழந்தையின் குடல் பகுதிகளில் இருக்கும் உணவையும், சம்பவத்துக்குக் காரணமான குளிர்பான பாட்டிலையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முழு உண்மையும் தெரிந்தவுடன், சட்டப்படி அந்த கம்பெனி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
”இது சாதாரண ஃபுட் பாய்சன் கிடையாது. அவர்கள் உட்கொண்ட உணவில் மோசமான விஷத்தன்மை இருக்கிறது. அந்தக் குழந்தையை காப்பாற்ற நாங்களும் எவ்வளவோ போராடினோம். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. அதனால்தான் மற்ற இரு குழந்தைகளையும் பாண்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்துவிட்டோம்’’ என்றனர் சிகிச்சையளித்த மருத்துவர்கள்.
பெப்சி நிறுவனத்தின் கருத்தை அறிய மாமண்டூரில் உள்ள பெப்சி தொழிற்சாலைக்குச் சென்றோம். ”மேலிட அனுமதி இன்றி நான் பேட்டி கொடுக்கக் கூடாது. எங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து உங்களிடம் பேசுவார்கள்” என்ற பிளான்ட் மேனேஜர் ராமு, நமது செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டார். ஆனால், கட்டுரை அச்சுக்கு செல்லும்வரை யாரும் நம்மை தொடர்புகொள்ளவில்லை.
இந்த நிலையில், ‘உயிர் பறிபோக காரணமாக இருந்தது ஒரிஜினல் பெப்சியே அல்ல; அது டூப்ளிகேட்’ என்ற பிரசாரத்தையும் சிலர் செய்துவருகிறார்கள். ஒரிஜினலோ, டூப்ளிகேட்டோ… குழந்தையின் உயிர் பறிபோக காரணமாக இருந்த அத்தனை பேரும் பாரபட்சம் இல்லாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!
COURTESY –  VIKATAN
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s