வித்தியாசமான சிந்தனை… வெற்றிக்குப் பாலம்!

 ‘வித்தியாசமான சிந்தனை இருந்தால், எளிதில் வெற்றி பெறலாம்’ என்பதற்கு உதாரணம், மதுரையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி. பூக்கள் சிரிக்கும் ‘பொக்கே’ பார்த்திருப்போம்… இவர் செய்வதோ, ‘சாக்லேட் பொக்கே’!

தன் தொழிலைப் போலவே, இனிக்க இனிக்கப் பேசுகிறார் ராஜராஜேஸ்வரி…

”எனக்கு சொந்த ஊர் சிவகங்கை. மதுரையில் செட்டிலாகி ரொம்ப வருஷமாச்சு. ஒன்றரை வருஷத்துக்கு முன்ன, சென்னையில் இருந்து பிரசவத்துக்காக தாய் வீடு வந்திருந்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தவங்ககிட்ட, சாக்லேட் செய்யக் கத்துக்கிட்டேன். ரெண்டே மணி நேரத்தில் கத்துக்கிட்டதை வெச்சே, தொழில் பண்ணலாம்னு தைரியமா  முடிவெடுத்து களத்துல இறங்கினேன். சாக்லேட்டுகள் செய்து, கவர்ச்சிகரமான ரேப்பர்கள்ல சுத்தி, பாக்ஸில் வெச்சு… பேக்கரி, மால், காலேஜ் கேன்டீன்னு கொடுக்க ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்தில் வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்து சாக்லேட்டுகளை டூ-வீலரில் வெயிலில் எடுத்துப் போய், கடையில் உள்ள ஃப்ரிட்ஜில் வைக்கறதுக்குள்ள உருகிடும். அப்புறம்தான் மாலை நேரங்கள்ல டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சேன். இப்படி இந்தத் தொழிலில் அடிபட்டு அடிபட்டே அடிப்படைகளைக் கத்துக்கிட்டேன். தொழில் நல்லா போகும் நேரத்தைவிட, டல்லாகும் சமயங்கள்ல தளரவிடாமல் என் அம்மா யசோதாவும், தம்பி முரளிகிருஷ்ணனும் பக்கபலமா இருந்தாங்க” என்றவரின் சாக்லேட்டுகள், ஊர் தாண்டி இப்போது விற்பனை ஆகின்றன.

”என் சாக்லேட்டோட தரமும் ருசியும் வாய்மொழி விளம்பரமா பரவ, அதை பயன்படுத்தி நானும் முயற்சிகள் எடுக்க, இப்போ சென்னை, விருதுநகர், சிவகாசி போன்ற ஊர்கள்ல இருந்தெல்லாம் எனக்கு ஆர்டர்கள் கிடைக்குது. குறிப்பா, சென்னையில் மால்கள், பெரிய ஸ்வீட் ஸ்டால்கள்னு விற்பனை ஆகுது. கடைகள் தவிர, காலேஜ் ஸ்டூடென்ட்ஸ் மத்தியிலயும் சாக்லேட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கு” என்றவர், சாக்லேட் பிசினஸில் இருந்து, சாக்லேட் பொக்கே பிசினஸ் பிக்-அப் ஆன கதையைச் சொன்னார்.

”ஒரு முறை என் தோழியோட விசேஷத்துக்காக ஒரு ஃப்ளவர் பொக்கே வாங்க நினைச்சேன். அப்போதான், இந்த சாக்லேட் பொக்கே செய்யும் யோசனை வந்துச்சு. இதுக்கு முன்ன இப்படி எதுவும் நான் கேள்விப்படலங்கறதுக்காக தயங்கல. இந்த புது முயற்சிக்கு நிச்சயம் பாராட்டு கிடைக்கும்னு நம்பிக்கையோட இறங்கினேன். பல நூறு ரூபாய்கள் செலவழிச்சு வாங்கும் பொக்கே மலர்கள், இரண்டொரு நாளில் வாடிடும். ஆனா, சாக்லேட் பொக்கே, வீணாகாம எல்லாராலயும் விரும்பிச் சாப்பிடப்படுமே! உடனடியா சாக்லேட் பொக்கே ரெடி செய்து, தோழிக்குக் கொடுத்தேன். விசேஷத்துக்கு வந்திருந்தவங்க ஆச்சர்யமா பார்த்து, பாராட்டினாங்க. அந்த உற்சாகத்துல இதையும் தொழிலா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சு, இப்போ மூணு மாசமாகுது.

இந்தத் தொழிலின் ஆரம்ப முயற்சிகள்ல என் ஃப்ரெண்ட் ரேவதி, சரவணன் ரொம்ப உதவினாங்க. கிஃப்ட், பொக்கே இதெல்லாம் கல்லூரி மாணவர்களோட ஏரியாங்கறதால, சாக்லேட் பொக்கேவை கல்லூரி விழாக்கள்ல டிஸ்பிளே செய்தோம். அடுத்ததா அபார்ட்மென்ட்கள்ல அறிமுகப்படுத்தி வாய்ப்புகள் கேட்டோம். இப்போ திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், விசேஷங்கள்னு ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுருக்கு. சிங்கப்பூர், மலேசியா நாடுகள்ல இருந்தெல்லாம், மூங்கில் கூடை சாக்லேட் பொக்கேவை பூக்கள் இல்லாமலேயே கேட்கறாங்க. ராமநாதபுரத்தில் ஒரு விழாவுக்கு கலெக்டரை வரவேற்க, நான் தயாரிக்கற சாக்லேட் பொக்கே வாங்கிட்டுப் போனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!” என்று பூரித்த ராஜராஜேஸ்வரி,

”பொக்கேவில் அதிகமா ஹார்ட் மாடலைதான் விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. குழந்தைகளோட பிறந்தநாளுக்கு டெடிபியர், பறவைகள், பழ வடிவங்கள்னு சாக்லேட் செய்வேன். சீர்தட்டில் வைக்க, விசேஷங்களில் வரவேற்பில் வைக்க எல்லாம் இப்போ இந்த பொக்கேவை ஆர்டர் கொடுக்கறாங்க. இதுக்குத் தேவையான ரேப்பர்களை மும்பையிலிருந்து ஆர்டர் செய்து வாங்குறேன். மூங்கில் கூடைகளை பரமக்குடியில் ஆர்டர் செய்றேன். மோல்டுகளைப் பொறுத்தவரை சிலிக்கான் மோல்டு, ஸ்டூடென்ட் மோல்டு மற்றும் பிராண்டட் மோல்டுகள் கடைகள்ல கிடைக்கும். சிலிக்கான் மோல்டை நல்லா வளைக்கலாம். அதில் சாக்லேட்டை ஊற்றினா, சுலபமா வந்துடும். ஸ்டூடென்ட் மோல்ட்ல சாக்லேட்டை தட்டி எடுக்கணும். பிராண்டட் மோல்டுகள் நீண்டநாள் உழைக் கும். கோகோ பவுடர், மில்க் பவுடர், பாதாம், முந்திரி, பிஸ்தா எல்லாவற்றையும் கலந்து டிசைன் மோல்டுகளில் ஊற்றி ஃப்ரீஸரில் வெச்சா… சாக்லேட் ரெடி. அவசரத்துக்கு சாக்லேட் (டார்க், பிரவுன், வொயிட்) பார்கள் வாங்கியும் தயாரிப்பேன்.

பெரும்பாலும் டார்க் பிரவுன் சாக்லேட்டை நட்ஸோடு சேர்த்துதான் பொக்கே செய்வேன். அப்போதான் டேஸ்ட்டாவும் ரிச்சாவும் இருக்கும். மூணு மாதங்கள் வரை இந்த பொக்கே சாக்லேட்டை வெச்சுருந்து உபயோகிக்கலாம். நட்ஸ் சாக்லேட்னா… ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். ஃப்ரிட்ஜில வெச்சா… நீண்ட நாள் உபயோகிக்கலாம்” என்று தகவல்களைத் தந்ததோடு… சாக்லேட் பொக்கே தயாரிக்கும் முறையையும் சொன்னார் (பார்க்க: பெட்டிச் செய்தி).

நிறைவாக, ”சாக்லேட் கைப்பக்குவமும், பொக்கே செய்யும் ஆர்வமும் இருந்தா… இந்தத் தொழில்ல அவரவர் திறமையை வைத்து, நிறைவா சம்பாதிக்கலாம்!” என்று புதுவழி காட்டினார் ராஜராஜேஸ்வரி!


‘பொக்கே’ ரெடி பண்ணலாம் வாங்க..!

”பொக்கே தயாரிக்க முதலில் பலூன் ஸ்டிக் தயாரிக்க வேண்டும். தடிமனான ஸ்ட்ராவின் மேல், செலோடேப்பை நன்கு சுற்றிக்கொள்ள வேண்டும் (வொயிட், ப்ளூ, பிங்க், ரெட், கோல்டு என கலர் கலரான செலோடேப்கள் கிடைக்கின்றன. ஸ்டிக்கின் மேல் வைக்கும் ரேப்பருக்கு ஏற்றவாறு செலோடேப் கலரைத் தேர்ந்தெடுக்கலாம்).

 ஸ்டிக்கின் மேல் பிளாஸ்டிக் புனலை வைத்து, தயாரித்த சாக்லேட்டை அதன் மீது வைத்து, அதன் மேல் சில்வர் அல்லது கோல்டு ரேப்பரை சுற்றி செலோடேப் கொண்டு ஒட்ட வேண்டும். பிறகு, டபுள் ரேப்பரை முக்கோணமாக மடித்து ஸ்டிக்கின் மேல் V ஷேப்பில் வைத்து ஒட்ட வேண்டும். தேவைப்பட்டால், இன்னொரு டபுள் ரேப்பரை முக்கோணமாக மடித்து பூ மாடலில் ஒட்டலாம். பூ டிசைனில் ரேப்பரை ஒட்டினால், பார்க்க அழகாக இருக்கும். ரேப்பர் எல்லா நிறங்களிலும் கிடைக்கும். கோல்டன் ரேப்பர், பார்க்க ரிச்சாக இருக்கும். டபுள் ரேப்பர் காஸ்ட்லியானது… பார்க்க ஷைனிங்காக, அழகாக இருக்கும். இதுபோல 15 ஸ்டிக்குகள் அல்லது அதற்கு மேல் பொக்கேவின் விலைக்கு ஏற்றவாறு தயாரித்து, செலோடேப் கொண்டு ஒட்ட வேண்டும்.

 மூங்கில் கூடை பொக்கே செய்வதற்கு, மூங்கில் கூடையின் அடியில் தெர்மாகோல் ஸீட்டை வைத்து, அதில் சாக்லேட்டுகளை நிரப்பி, அதன் மேல் பலூன் ஸ்டிக், ரோஜாப்பூ, கிறிஸ்துமஸ் இலையை தெர்மாகோல் ஸீட்டில் குத்தி, கூடையின் மேல ரேப்பரால் சுற்றி பொக்கே தயாரிக்கலாம்.

பின்பு ரோஜாப்பூ, டேலியா பூ, கிறிஸ்துமஸ் இலை (சவுக்கு இலை), சோளத்தட்டை (காய்ந்தது) இவற்றை சாக்லேட்டின் மேல் வைத்து செலோடேப்பால் ஒட்ட வேண்டும். காம்புகளை சரிசமமாக கத்தரிக்கோல் மூலம் கட் செய்ய வேண்டும். ஃப்ரெஷ் ஃப்ளவர் பொக்கே என்றால் பூக்களும், கிறிஸ்துமஸ் இலையும் வைக்கலாம். ஆர்ட்டிஃபிஷியல் என்றால், சோளத்தட்டை வைக்கலாம்.

 பிறகு, வொயிட் கலர் ரேப்பரை பாதியாக மடித்து (இரண்டு முனைகளும் சரிசமமாக இருக்கக் கூடாது), அதில் இவற்றை வைத்துச் சுற்றி டேப் கொண்டு ஒட்ட வேண்டும். பிறகு, கீழ்ப்பகுதியில் கோல்டன் ரேப்பரை ஒட்டி, அதில் ரிப்பனைக் கட்டினால்… பொக்கே தயார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s