அள்ளிக் கொடுக்கும் ஆட்டுப்பண்ணை!

ஆசை இருக்கு அரசாள.. அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட… இது மேல் என்று சொல்லும் அளவுக்கு மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல்.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகளவில் உருவாகி வரும் ஆட்டுப்பண்ணைகளே அதற்கு சாட்சி! அவர்களில் ஒருவராக.. நிறைவான லாபம் பார்த்து வருகிறார், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜன். இளங்கலை வணிகவியல் பட்டதாரியான இவர், புகைப்பட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கைகொடுத்த மூலிகை வைத்தியம்!

கம்பீரமான தோற்றத்தோடு 250 ஆடுகளுடன் பிரமாண்டமாக காட்சி  அளிக்கிறது, இவரது ஆட்டுப் பண்ணை. 2009 –ம் வருடம் நவம்பர் மாதம், ஏழு லட்சம் ரூபாய் முதலீடு  போட்டு.. 86 தலைச்சேரி, 10 போயர், 15 சிரோஹி, 15 தலைச்சேரி – போயர் கலப்பு ஆடுகள் என்று மொத்தம் 126 ஆடுகளுடன் பண்ணை ஆரம்பித்தேன். அந்த சமயம் குளிர் காலம் என்பதால், ஆடுகளுக்கு கடுமையான சளித் தொந்தரவால் நிமோனியா வந்தது. எவ்வளவோ இங்கிலீஷ் மருந்துகள் கொடுத்தும், சரி செய்ய முடியவில்லை. 20 ஆடுகள் வரைக்கும் இறந்துவிட்டது. கடைசியாக, தஞ்சாவூர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் தலைவர், டாக்டர்.புண்ணியமூர்த்தி சொன்ன மூலிகை வைத்தியத்தைக் கடை பிடித்தப்போது… எல்லா ஆடுகளுமே குணமாகி, ஆரோக்கியமாக வளர ஆரம்பித்தது. அதனால் வரப்பு ஓரத்தில் எல்லாம்… ஆடு, மாடுகளுக்குத் தேவையான மூலிகைகளையும் வளர்த்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இயற்கை உரத்தில் தீவன சாகுபடி!
தீவனத்திற்காக 3 ஏக்கரில் கோ – 4, ஒன்றரை ஏக்கரில் தீவனச் சோளம், ஒன்றரை ஏக்கரில் வேலிமசால், அரை ஏக்கரில் அகத்தி என்று சாகுபடி செய்கிறோம். சொந்தமாக பசுந்தீவனம் சாகுபடி செய்து தாராளமாக கொடுப்பதால், ஆடுகளும்.. ஊட்டமாக, திடகாத்திரமாக வளர்கிறது. தீவனச் செலவும் குறைகிறது. எங்களிடம் இருக்கும் 15 மாடுகளுக்கும் இதிலேயே பசுந்தீவனம் கிடைத்துவிடுகிறது. அடர் தீவனத்திற்கு மக்காச்சோளம் அதிகமாக தேவைப்படுவதால், 3 ஏக்கரில் அதையும் போட்டிருக்கிறோம். தேவைக்கு போக மீதியை விற்பனை செய்திடுவோம்.
பத்தரை ஏக்கரில் நெல், கடலை, எள் வாழை என்று இருக்கு. வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 500 கிலோ ஆட்டு எருவும் இரண்டரை டன் மாட்டு எருவும் போடுகிறோம். பசுந்தீவனத்திற்கு எந்த ரசாயன உரமும் கொடுப்பதில்லை. நெல், மக்காச்சோளம், கடலை மாதிரியான பயிர்களுக்கு மட்டும் கொஞ்சம் யூரியா போடுவோம். அதனால் எங்களக்கு உரச்செலவும் குறைந்துவிடுகிறது என்றார்.

பாதுகாப்பான பரண்!
தரையிலிருந்து நான்கரை அடி உயரத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டு, பரண் அமைத்திருக்கிறேன். தாராளமாக காற்றோட்டம் கிடைக்கும் மாதிரி அமைத்திருப்பதால், உள்ளே வெக்கை இருக்காது. 220 அடி நீளம், 21 அடி அகலத்தில் கொட்டகை இருக்கு. இதை 13 பாகமாக பிரித்திருக்கிறேன்.  ஒரு பாகத்தில் பெரிய ஆடுகள் 20 வரைக்கும் அடைக்கலாம்.  கழிவுகள் கீழே விழுகிற மாதிரி கொட்டகையோட தரைப்பகுதியில் இடைவெளி விட்டிருக்கிறேன்.  பரணுக்கு கீழே சேகரமாகும் கழிவுகளை வாரத்திற்கு ஒரு முறை அள்ளிவிடுவோம்.
4 கிலோ பசுந்தீவனம்.. அரை கிலோ அடர் தீவனம்!
கோ -4ல் 40%, வேலிமசாலில் 20%, தீவனச் சோளத்தில் 25%, அகத்தியில் 10%, கிளரிசீடியா, சூபாபுல், கல்யாணமுருங்கை ஒவ்வொன்றிலும் 5% என்று எடுத்து, மொத்தமாக கலந்து… அதில் ஒரு பெரிய ஆட்டுக்கு தினம் 4 கிலோ அளவுக்குக் கொடுக்கிறோம். இதை மூன்று வேளையாக பிரித்து கொடுப்போம். குட்டிக்கு ஒன்றரை கிலோ அளவுக்குக் கொடுக்கிறோம். இது போக, தினமும் மதியம் ஒரு மணியளவில் அடர்தீவனம் கொடுப்போம். குருணையாக உடைத்த மக்காச்சோளம் 40%, கோதுமைத் தவிடு 10%, நெல் தவிடு 21%, கடலைப் புண்ணாக்கு 15%, சோளமாவு 10%, தாது உப்பு 3%, சாதாரண கல் உப்ப 1% இந்த விகிதத்தில் கலந்து, இதில் பெரிய ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு 500 கிராம் வரைக்கும், குட்டிகளுக்கு 200 கிராம் வரைக்கும்  கொடுக்கிறோம் என்றார்.
காலந்தவறாமல் தடுப்பூசி!
15 நாளைக்கு ஒரு முறை பரணை சுத்தமாக கூட்டி பரணை விட்டு விடுவோம். தினமும் காலையில், மாலையில் ஆடுகளை வெயிலில் கொஞ்ச நேரம் நிறுத்திடுவோம். வருடத்திற்கு இரண்டு முறை, துள்ளுமாரி நோய், அம்மை நோய்களுக்கான தடுப்பு ஊசி போட்டுவிடுவோம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து தருவோம். பனிக் காலத்தில் கொட்டகையை சுற்றி நான்கு பக்கமும்  பாலிதீன் படுதாகட்டி,  குளிரைக் கட்டுப்படுத்துவோம். நோய் அறிகுறி ஏதும் தெரிந்தாலே, அதற்கான மூலிகை வைத்தியத்தை உடனே செய்திடுவோம்.  ராத்திரி நேரத்தில் வேப்பங்கொட்டையை உடைத்து, நெருப்பில் போட்டு, ஆடுகள் இருக்கும் பகுதியில் புகை உண்டாக்குவோம். அதனால், ஆடுகளுக்கு கதகதப்பா இருப்பதுடன், ஈ, கொசு இதெல்லாம் அண்டாமல் இருக்கும். கொட்டகையை சுற்றி பயிர் செய்வதால் வெயில் காலங்களில் வெக்கையும் தணிந்துவிடும்.
20 பெட்டைக்கு ஒரு கிடா என்று சேர்த்துவிடுவோம். ஒரு ஆடு, இரண்டு வருடத்தில், மூன்று முறை குட்டி போடும். இதன் மூலமாக ஆறு குட்டிகள் கிடைக்கும். சராசரியாக இரண்டு வருடத்தில் ஐந்து குட்டி கிடைத்துவிடும்.
கிலோ 300 ரூபாய்!
கிடா குட்டிகளை ஐந்து மாதத்திலிருந்து ஆறு மாத வயதில் விற்றுவிடுவோம். தலைச்சேரி கிடாவும் சிரோஹி கிடாவும் இந்த வயதில்  15 கிலோ வரை வந்துவிடும். தலைச்சேரி போயர் கலப்பினக் கிடா… ஆறு மாதத்தில் 20 கிலோ வரை வந்துவிடும். கிடா ஆடுகளை பெரும்பாலும் இறைச்சிக்காகதான் வாங்குவார்கள். ஒரு கிலோ உயிர் எடை  225 ரூபாய் என்று விற்போம். பெட்டை ஆடுகளை வளர்ப்பிற்க்காக வாங்கி கொண்டு செல்வார்கள். அதனால், ஆறு மாத வயதிலிருந்து பத்து மாத வயது வரைக்கும் வளர்த்து விற்போம். வளர்ப்பு ஆடுகள் என்பதால், உயிர் எடை ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் விலை கிடைக்கிறது. போயர் ரகத்தில், கிடா, பெட்டை இரண்டையுமே  வளர்ப்பிற்காகத்தான் வாங்கி கொண்டு செல்வார்கள்.  இதில் கிடா, உயிர் எடையில் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். பெட்டை, 1,500 ரூபாய்க்கு விலை போகும். ஆனால், அதிகமாக விலை கிடைக்கிறதே என்று அதிக எண்ணிக்கையில் வளர்க்க கூடாது. இதை வாங்குபவர்கள் மிகவும் குறைவு என்று எச்சரிக்கை தந்தார் ராஜன்.
4 ஆண்டுகள் … ஆயிரம் ஆடுகள்!
இந்த நான்கு வருடத்தில் எல்லா ரகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட ஆயிரம் ஆடுகள் வரை பெருகியிருக்கு. இதுவரைக்கும் 850 ஆடுகளை, 51 லட்ச ரூபாய்க்கு விற்றிருக்கிறோம். தீவனம், ஆள் சம்பளம், மருத்துவம், மின்சாரம், பராமரிப்பு என்று செலவெல்லாம் போக… 30 லட்சம் ரூபாய் நிகர லாபமாக கிடைத்திருக்கிறது. 250 ஆடுகள் கொட்டகைகளிலிருக்கிறது. பண்ணைக்குப் போக மீதி இருக்கும் ஆட்டு எருவை ஒரு டன் 2 ஆயிரத்து 500 ரூபாய் என்று விற்கிறோம். இதிலும் கணிசமான வருமானம் கிடைக்கிறது என்றார் ராஜன்.
சளிக்கான மூலிகை மருந்து!
தூதுவளை இலை – 10, பூண்டு – 10 பல், ஓமவள்ளி இலை -10, துளசி இலை 10 கைப்பிடி, முருங்கைத்தழை – 10 கைப்பிடி, பெரிய வடிவிலான ஆடுதொடா இலை – 2, கல்யாணமுருங்கை இலை – 4 கைப்பிடி ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தலா 20 கிராம் வெந்தயம், சீரகம், 20 எண்ணிக்கையில் மிளகு, தலா 10 எண்ணிக்கையில் பூண்டு, வெங்காயம், 4 ஸ்பூன் மஞ்சள் தூள், 3 ஸ்பூன் கல் உப்பு… இவற்றை எல்லாம் கலந்து தனியாக அரைத்து… ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மூலிகையோடு சேர்த்து, கால் கிலோ பனைவெல்லம் சேர்த்துப் பிசைந்து, 10 உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். ஒரு ஆட்டுக்கு ஒரு உருண்டை வீதம் கொடுத்தால் சளி சரியாக விடும்.
தொடர்புக்கு
ராஜன், செல்போன் : 99420 64180
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.10.13 http://www.vikatan.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s