உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்

IMG_11651508822648எந்த ஒரு நாட்டிலும் தொழிலும், வேளாண்மையும் இரு தண்டவாளங்கள்போல அமைந்தால்தான், வளர்ச்சி என்ற ரெயில் வேகமாக செல்லமுடியும். அதனால்தான் தமிழக அரசு இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதற்குரிய பலனை விவசாயிகள் அடையும் நிலையை உருவாக்கினால்தான், அவர்களும் ஊக்கத்தோடு விவசாயத்தில் ஈடுபடுவார்கள். இதில் உணவு பதப்படுத்தல் வசதிகள் அதிகமாக இருந்தால்தான், விவசாயிகள் விளைபொருட்களை பத்திரமாக சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும்போது விற்று லாபம் பார்க்கமுடியும். அந்த வசதி இல்லையென்றால், அந்த நேரத்தில் என்ன விலை கிடைக்குமோ?, அந்த விலைக்கு விற்கத்தான் முடியும். இது அழுகும் பொருட்களுக்கு மிகமிக பொருந்தும். விவசாயிகள் மட்டுமல்ல, வியாபாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு அத்தாட்சி மார்க்கெட்டுகளில் அவ்வப்போது வெளியே கொட்டப்படும் காய்கறிகள், பழங்கள்தான். நாடு முழுவதும் இவ்வாறு போதிய அளவில் பதப்படுத்தும் வசதிகள் இல்லாததால் ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவுப்பொருட்கள் அழுகிப்போய்விடுகின்றன.

இதுபோன்ற நிலையைத் தடுக்க, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அதிக அளவில் அமைத்தால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். நுகர்வோருக்கும் ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டும் விளையும் எல்லா உணவு பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்கும். அதனால்தான் உலகம் முழுவதிலும் இந்த தொழில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும், பயிறு வகைக்காக புதுக்கோட்டை மாவட்டத்திலும், தக்காளிக்காக தர்மபுரி மாவட்டத்திலும், வாழைக்காக தேனி மாவட்டத்திலும், கொப்பரைக்காக கோயம்புத்தூர் மாவட்டத்திலும், நிலக்கடலைக்காக விழுப்புரம் மாவட்டத்திலும் பதப்படுத்தும் மையங்களை 75 சதவீதம் தனியார் மற்றும் 25 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்புடன் தொடங்கவும், விவசாயிகளின் 25 சதவீத பங்களிப்பை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு விரைவில் இந்த மையங்களைத் தொடங்கவும் தமிழக அரசு நட வடிக்கை எடுத்துவருகிறது.

இந்த சூழ்நிலையில், தோலை உறித்து பழத்தை கொடுத்தும், வாங்காத ஒரு நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்திவிட்டார்கள். மோடி அரசாங்கத்தில் உணவு பதப்படுத்தல் தொழிலுக்காக தனியாக ஒரு அமைச்சகம் இருக்கிறது. அந்த துறையின் மந்திரியாக ஹர்சிம்ரத் கவுர் பாதல் என்ற பெண் மந்திரி இருக்கிறார். உணவு பதப்படுத்தும் தொழிலுக்காக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏராளமான உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கொண்ட 22 உணவு பூங்காக்களை நாடு முழுவதும் தொடங்குவதற்கான முயற்சிகளில் மத்திய உணவு பதப்படுத்தும் துறை எடுத்துவருகிறது. உணவுபொருட்கள் வீணாவதைத் தடுத்து, பதப்படுத்தவும், ஏற்றுமதிகளை ஊக்குவிக்கவும், இதன்காரணமாக உணவு பணவீக்கத்தை குறைக்கவும் நட வடிக்கை எடுத்துவரும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த 22 உணவு பூங்காக்களில் தொழிற்சாலைகள் தொடங்க யார்–யார்? விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்று விண்ணப்பம் கோரப்பட்டது. இந்த தொழிலைத் தொடங்க நபார்டு வங்கி குறைந்த வட்டியில் கடன்தர தயாராக இருக்கிறது. இதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான வரியும் 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பழங்கள், காய்கறிகள், பால், கோழி வளர்ப்பு என்று உணவுபதப்படுத்தும் தொழிலுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும், உணவு பூங்காக்களில் தொழிற்சாலைகள் தொடங்க அதிகமாக யாரும் ஆர்வம் காட்டவில்லை, எனவே, இந்த ஆண்டு மத்திய அரசாங்கத்தின் உணவு பூங்கா தமிழ்நாட்டில் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் கை நழுவிப்போய்விட்டது. கர்நாடக மாநிலம் தும்கூரில் முதல் உணவு பூங்காவை இன்று பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். தமிழக தொழில்துறை இதை விட்டுவிடக்கூடாது. ‘ஒரே கல்லில் இரு மாங்காய்’ என்பதுபோல, விவசாயத்துக்கும், வேளாண்மைக்கும் பலனளிக்கும் இந்த உணவு பூங்காக்களை தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக தொழில் முனைவோருக்கும் விவரமாக எடுத்துச்சொல்லி, மத்திய அரசாங்கத்தோடும் பேச்சுவார்த்தை நடத்தி முயற்சி எடுக்கவேண்டும். ஒரு இடத்திலாவது உணவு பூங்கா தொடங்கப்படவேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s