நபி இப்ராஹீம் அலை வரலாறு

#ஹஜ்_சிறப்பு_பதிவு:

இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.IMG_4913641780245

அல் குர்ஆன் -60:4.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனின் தூதுவராக அனுப்பபட்டவர். கிறிஸ்துவர்களால் “ஆப்ரஹாம்” என்று அழைக்கபடுபவர். அல்லாஹ்வின் இல்லம், இஸ்லாமியர்களின் புனித இடமான “காஃபா” வை கட்டியவர்கள். எந்தவித மாறுதலுமின்றி அப்படியே பின்பற்ற வேண்டிய தலைவர்களை உஸ்வா என்று அழைப்பார்கள். முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய உஸ்வாக்கள் என இறைமறை இருவரை குறிப்பிடுகிறது. அழகிய முன்மாதிரியாக நபி (ஸல்) அவர்களையும், இப்ராஹீம் (அலை) அவர்களையும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வாழ்ந்த காலத்தில் சிலைகளை அதிகமாக வணங்க கூடியவர்கள் இருந்தார்கள். இஸ்லாத்தை அவர்களிடம் அழகிய முறையில் ஆழமாக எத்தி வைத்தார்கள். தன்னுடைய தந்தையே சிலையை வணங்க கூடியவராக தான் இருந்தார். தன்னுடைய தந்தைக்கும் அழைப்புப்பணி செய்தார்கள். தம் சார்ந்த மக்களிடமும் அழைப்புப்பணி செய்தார்கள். சிந்திக்க வைத்தார்கள்.

அதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்).

அல் குர்ஆன் 26:72,73.

தன்னுடைய தந்தையின் எதிர்ப்பு, அந்நாட்டு அரசனின் எதிர்ப்பு, ஊர் மக்களின் எதிர்ப்பு என பல எதிர்ப்புகளுக்கும் இடையில் இஸ்லாத்தின்பால் மக்களை அழைத்தார்கள். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து அணைத்து துன்பங்களையும் சகித்து கொண்டு, இஸ்லாத்தை எத்தி வைத்தார்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தார்கள். பல வருடங்களுக்கு பிறகு ஒரு அழகான ஆண் குழந்தை (நபி இஸ்மாயில் (அலை)) பிறந்தது. ஊரின் எதிர்ப்பினால் மனைவி குழந்தையோடு பாலைவனத்தில் ஹிஜ்ரத் (பயணம்) செய்தார்கள். அந்த நேரத்தில் தான் அல்லாஹ் கட்டளையிடுகிறான், மனைவியையும் கை குழந்தையையும் பாலைவனத்தில் விட்டுவிட சொல்லி. எந்தவித யோசனயுமின்றி கட்டளையை நிறைவேற்றினார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மனைவி ஹாஜரா அவர்கள் கேட்டார்கள்,

’’இப்ராஹீமே,இறைவன் சொல் கேட்டா இவ்வாறு செய்கிறீர்கள்’’ என கேட்ட போது ’’ஆமாம்’’ என பதில் அளித்தார்கள்….

’’அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கண்டிப்பாக கைவிட மாட்டான்’’…. என்று ஹாஜரா கூறினார்கள்.

***ஸஃபா, மர்வா மலை (தொங்கு தோட்டம் ஓடுதல்):

IMG_4921098521332கை குழந்தையோடு ஹாஜரா அவர்கள் பாலைவனத்தில் தன்னந்தனியாக வீடின்றி, உணவின்றி, தண்ணீரின்றி, தன் கணவர் எப்பொழுது திரும்பி வருவார் என்று கூட தெரியாமல் அல்லாஹ்விற்காக கஷ்டத்தை அனுபவித்தார்கள்.

பிள்ளையின் தண்ணீர் தாகத்திற்க்காக பாலைவனத்தில் ஸஃபா, மர்வா என மலைகளுக்கு இடையே அங்கும் இங்குமாக ஓடினார்கள். பாலைவனத்தில் ஏது தண்ணீர். அந்த பெண்மணிக்கு இறைவன் கொடுத்த பரிசு தான் ஜம்ஜம் நீருற்று. உம்ரா, ஹஜ்ஜிற்கு செல்லும் அனைவர்களும் ஸஃபா, மர்வா மலைகளுக்கு இடையே ஓடும் தொங்கு தோட்டத்தின் நோக்கம் இந்த தியாக பெண்மணியை நினைவு கூற தான்.

***குர்பானியின் (பலியிடுதல்) நோக்கம்:

பல வருடங்கள் கழித்து நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பி வந்தார்கள். தன் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் தானாக உழைக்க கூடிய வயதை அடைந்தார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் தம் மகனை பலியிட கட்டளையிட்டான். பல வருடம் குழந்தை இல்லாது வயது கடந்து பெற்ற தன் பிள்ளை நபி இஸ்மாயில்(அலை) அவர்கள் மீது மிகுந்த பாசம் உடையவர்களாக இருந்தார்கள்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய கனவில் அல்லாஹ் கட்டளையிட்ட விஷயத்தை தன் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களிடம் சொன்னார்கள். சற்றும் தயக்கமின்றி நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடியே செய்யுங்கள் என்று கூறினார்கள்.

“என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”

அல் குர்ஆன் 37:102.

இறைவனின் கட்டளையை நிறைவேற்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தயாரானார்கள். அந்த நேரத்தில் சைத்தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சைத்தானிர்க்கு கட்டுப்படாமல் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தயாரானார்கள்.

வானவரின் தூதர் ஜிப்ரையில் (அலை) அவர்களை அனுப்பி தன் மகனை பலியிடுவதை தடுத்தான் இறைவன். நீ கண்ட கனவை நிறைவேற்றி விட்டாய். எம்முடைய சோதனை அனைத்திலும் வெற்றி அடைந்து விட்டாய் என்று அல்லாஹ் கூறினான். தன்னுடைய மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அல்லாஹ் பலியிட கட்டளையிட்டான். இதன் காரணமாகவே “குர்பானி” கொடுக்கபடுகின்றது.

அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை கூறப்படுகிறது.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, ”இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

அல் குர்ஆன் 37:100

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறவே “குர்பானி” கொடுக்கபடுகின்றது. அதாவது அல்லாஹ்விற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கின்றோம் என்பதே இதன் பொருள்.

***மாட்டை அறுத்து கொண்டாடுவது அல்ல இந்த பக்ரித் பெருநாள்..

தியாகத்தை நினைவு கூற கொண்டாடுவதே இந்த தியாக திருநாள்.,.!

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல் குர்ஆன் (22 : 37)

இதன் பொருளை உணர்ந்து அனைவரும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து இப்பெருநாளுக்கு உரிய சிறப்பை செய்து கொண்டாடுவோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s