ஹஜ் உம்ரா விளக்கம் 6

#மினாவில்_செய்ய_வேண்டியவை

IMG_2375056366095IMG_2382710791932இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப்படி தன் மகனைப் பலியிட முன்வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் அவன் மீது ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் உஸ்தா எனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை கற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் ஊலா எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.

அதை நினவு கூறும் விதமாகவும், ஷைத்தான்களின் தூண்டுதலுக்குப் பலியாக மாட்டோம் என்பதைப் பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும்‘மினா’வில் அமைந்துள்ளன.

முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குள் நுழையும்போது இடப்புறமாக ‘ஜம்ரதுல் அகபா’ எனும் இடம் அமைந்துள்ளது. துல்ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க வேண்டும்.

நெருக்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ, கூச்சலோ போடக்கூடாது. இரவே மினாவுக்குச் சென்றவர்களும் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறியக் கூடாது. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன்கூட்டியே அனுப்பிய போது, “ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதீ.

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்;தைச்) சற்று விரைவுபடுத்தினார்கள். ‘ஜம்ரதுல் அகபா’வை அடையும் வழியில் புறப்பட்டார்கள். மரத்திற்கு அருகில் உள்ள ஜம்ரதுல் அகபாவை அடைந்ததும் ஏழுகற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறினார்கள். சுண்டி எறியும் சிறுகற்களையே எறிந்தார்கள். பதனுல்வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)

நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை. விரட்டுதல் இல்லை. வழிவிடு, வழிவிடு என்பது போன்ற கூச்சல் இல்லை.
அறிவிப்பவர் : குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்கள் : நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

முன்னரே புறப்பட்டுச் சென்றவர்களும் சூரியன் உதயமான பிறகே கல்லெறிய வேண்டும் என்றாலும் பெண்கள் மட்டும் மக்கள் கூடுவதற்கு முன்பே கல்லெறிந்து கொள்ளலாம்.

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுதுவிட்டு “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “புறப்படுங்கள்” என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள் “நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர் என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலைமுடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ததும் அவர் இஹ்ராமிலிருந்து ஒரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள இப்போது முதல் அவர் அனுமதிக்கப்படுகிறார். தலைமயிரை சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மழித்துக் கொள்ளலாகாது.

நபி (ஸல்) அவர்கள் மினாவுக்கு வந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்தார்கள். பிறகு தமது தங்குமிடம் வந்து ஒட்டகத்தை அறுத்தார்கள். பிறகு மழிக்கக் கூடியவரிடம் தமது வலது பகுதியையும் இடது பகுதியையும் சுட்டிக் காட்டி ‘அகற்றுவீராக’ என்றனர். பிறகு அதை மக்களுக்குக் கொடுக்கலானார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்

“இறைவா! மழித்துக் கொள்ளக்கூடியவர்களை மன்னிப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” (மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். “இறைவா! மழித்துக் கொள்ளக்கூடியவர்களை மன்னிப்பாயாக” என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

“தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்கு கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அபூதாவூத், தப்ரானி, தாரகுத்னி

“நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா

“நான் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும், பத்தாம் நாளில் கஃபாவை தவாப் செய்வதற்கு முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணத்தைப் பூசிவிட்டேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

(பத்தாம் நாளில் குர்பானி கொடுப்பது, சம்மந்தமான விவரங்களைத் தனியாக பிறகு விளக்குவோம்)

பத்தாம் நாள் கிரியைகளை மேலே நாம் கூறிய வரிசைப்படி செய்வது நபிவழி என்றாலும், அந்த வரிசைக்கு மாற்றம் செய்வதில் தவறேதும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும்போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். மற்றொருவர் அவர்களிடம் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். இன்னொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாப் செய்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

புகாரி, முஸ்லிமில் இடம் பெறும் இன்னொரு அறிவிப்பில் “குர்பானி கொடுப்பதற்கு முன் மழித்துக் கொண்டேன், கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றும், இன்னும் இதுபோன்று கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும், “தவறில்லை செய்வீராக” என்றே அன்றைய தினம் விடையளித்ததாகக் காணப்படுகின்றது.

மினாவில் பத்தாம் நாள் செய்வேண்டிய காரியங்களை முன்பின்னாகச் செய்வதில் தவறேதும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

தவாப் அல் இபாளா
பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டு, குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாப் செய்ய வேண்டும். இது ‘தவாப் அல் இபாளா’ எனப்படுகின்றது. இது ‘தவாப் ஸியாரா’ எனவும் கூறப்படுகின்றது. இந்த தவாபைச் செய்துவிட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று ‘தவாப் அல் இபாளா’ செய்துவிட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட் வாகனத்தில் ஏறி தவாபுல் இபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும் மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபியவர்கள் ஒருதடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.

தவாபுல் இபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்துவிட்டால் அங்கே லுஹர் தொழுதுவிட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒருமுறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக்கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.

தவாப் அல் இபாளா செய்யும் முறை
நபி (ஸல்) அவர்கள் தவாப் அல் குதூம் செய்யும்போது மூன்று தடவை ஓடியும் நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாபின் போது ஏழுசுற்றிலும் நடந்தேதான் செல்லவேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஓடியதாக வரும் ஹதீஸ்களில் “ஆரம்ப தவாபின் போது” என்ற வாசகம் காணப்படுகின்றது. இதிலிருந்து இதை நாம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் தவாப் அல் இபாளா செய்யும்போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, ஹாகிம்

பெயர் குறிப்பிடப்பட்ட தவாபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏழு சுற்று சுற்றியதும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை. (புகாரி). அதுபோல் ஸபா, மர்வாவுக்கிடையே ஸஃயும் செய்ய வேண்டும்.

இந்த தவாபை முடித்தபிறகு உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமிலிருந்து ஒருவர் விடுபடுகிறார். இஹ்ராம் கட்டிய காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல் ஹலாலாகின்றது.

கடைசி ஹஜ் வருடத்தின் போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் தவாபுல் குதூம் செய்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவரும், ஹஜ்ஜுக்கும், உம்;ராவுக்கும் இஹ்ராம் கட்டியவரும் பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. பத்தாம் நாளில் கல்லெறிந்து, தலையை மழித்து, அறுத்துப் பலியிட்டவுடன் பெண்களிடம் கூடுவது தவிர மற்ற விஷயங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதை முன்னர் கண்டோம். இந்தத் தவாபைச் செய்தவுடன் முழுமையாக அவர் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறார்.

பெருநாள் தொழுகை கிடையாது
பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. ஆயினும் நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் சொற்பொழிவு நிகழ்த்தியதாக பல ஹதீஸ்கள் கூறுகின்றன. நபி (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது ‘அள்பா’ எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஹிர்மாஸ்பின் ஸியாத் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்

பத்தாம் நாளன்று மினாவில் நபி (ஸல்) அவர்களின் உரையை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல் : அபூதாவூத்

அனேகமாக மினாவில் அவர்கள் லுஹர் தொழுகை நடத்திய பிறகு இந்த உரையை நிகழ்த்தியிருக்கக் கூடும்.

கல்லெறியும் நாட்களும் இடங்களும்
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபா எனும் இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிவது பற்றி முன்னர் அறிந்தோம். அதைத் தவிர கல்லெறிய வேண்டிய மற்ற இடங்களும் நாட்களும் உள்ளன. அவற்றையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

துல்ஹஜ் பதினொன்று, பனிரெண்டு, பதிமூன்று ஆகிய மூன்று நாட்கள் கல்லெறிய வேண்டிய நாட்களாகும். ஒருவர் விரும்பினால் 11, 12 நாட்கள் மட்டும் கல்லெறிந்து விட்டுத் திரும்பி விடலாம். அந்த நாட்களில் கல்லெறிவதற்காக அதற்கு முந்திய இரவுகளில் மினாவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும். தினமும் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கல்லெறியும் மூன்று இடங்களிலும் தலா ஏழு கற்களை எறிய வேண்டும்.

மினாவுக்குள் நுழையும்போது இடது புறம் ஜம்ரதுல் அகபா அமைந்துள்ளதை நாம் முன்னர் அறிந்தோம். அங்கிருந்து 116.77 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் உஸ்தா எனும் இடம் அமைந்துள்ளது. ஜம்ரதுல் உஸ்தாவிலிருந்து 156.4 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் ஊலா (அல்லது ஜம்ரதுல் ஸுக்ரா) அமைந்துள்ளது. இம்மூன்று இடங்களும் கல்லெறிய வேண்டிய இடங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழும் நேரத்தில், கடைசி நாளில் (பத்தாம் நாளில்) தவாபுல் இபாளா செய்துவிட்டு மினாவுக்குத் திரும்பினார்கள். (11,12,13 ஆகிய) அய்யாமுத்தஷ்ரீக் நாட்களின் இரவுகளில் மினாவிலேயே தங்கிக் கொண்டார்கள். சூரியன் சாய்ந்ததும் ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். ஜம்ரதுல் ஊலா, ஜம்ரதுல் உஸ்தா ஆகிய இடங்களில் (கல்லெறிந்துவிட்டு) நீண்ட நேரம் நின்று அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்துவிட்டு அவ்விடத்தில் நிற்கமாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், ஹாகீம்

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஊலா எனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சற்றுமுன்னேறி, சமதரையைத் தேர்வு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நிற்பார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு ஜம்ரதுல் உஸ்தாவில் கல்லெறிவார்கள். பிறகு இடப்புறமாக நடந்து சென்று சமதரையில் கிப்லாவை நோக்கி நிற்பார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். அங்கே நீண்ட நேரம் நிற்பார்கள். பிறகு பதனுல் வாதி என்ற இடத்திலிருந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிவார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஸாலிம் நூல்கள் : புகாரி, அஹ்மத்

குறிப்பிட்ட நாட்களில் (11,12,13) அல்லாஹ்வை நீங்கள் திக்ரு செய்யுங்கள். இரண்டு நாட்களுடன் ஒருவர் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றம் இல்லை. (மூன்றாம் நாளும்) ஒருவர் தாமதித்தால் அவர் மீதும் குற்றம் இல்லை. (அல்குர்ஆன் 2 : 203)

சூரியன் உச்சியிலிருந்து சாய்வதைக் கவனித்து உடனே கல்லெறிய வேண்டும்.

“நாங்கள் நேரத்தைக் கணித்துக் கொண்டே இருப்போம். சூரியன் உச்சி சாய்ந்தவுடன் கல்லெறிவோம்”
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, அபூதாவூத்.

இவ்வாறு மூன்று நாட்களும் கல்லெறிய வேண்டும். கல்லெறிவதற்காக மினாவில் இரவு தங்குவது நபிவழி என்றாலும் அது கட்டாயமானதல்ல. தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவிலேயே தங்கிக் கொண்டு கல்லெறிவதற்காக மினாவுக்குப் புறப்பட்டு வரலாம்.

மினாவில் தங்கவேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

தொடரும் ….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s