நட்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா?(தி ஹிந்து–தமிழ்)

மன்னார்குடியில் வந்த குடும்பத்தினருடனான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நட்பு ஒரு நாள் அவரது அரசியல் வாழ்வை முடக்கும் என்ற அவரது அரசியல் விசுவாசிகள் பலரது கணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது சனிக்கிழமை வெளியான தீர்ப்பு.

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது நடந்த சம்பங்கள் குறித்து நன்கு அறிந்தவர்களின் குற்றச்சாட்டு சசிகலா அந்தக் காலகட்டத்தில் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரங்களை கையில் வைத்திருத்தார் என்பதாகவே இருக்கும். சசிகலாவும் அவரது சகாக்களும் தமிழகம் முழுவதும் இடங்களை வாங்கிக் குவிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

1980-களில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. அப்போது இருந்தே ஜெயலலிதாவும்-சசிகலாவும் நல்ல நட்புறவில் இருக்கின்றனர். கட்சிக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் என ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவருடன் சசிகலாவும் இருப்பார்.

ஜெயலலிதாவின் வீட்டிலேயே சசிகலா தங்க ஆரம்பித்தார். சசிகலா தவிர அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் அவருடன் ஜெயலலிதாவின் வீட்டில் தங்கினர். சசிகலாவின் உறவினர்களில் ஒருவரான பாஸ்கரன் தொலைக்காட்சி ஒன்றை நிர்வகித்து வந்தார். மற்றொரு உறவினர் வி.என்.சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஆனார்.

1995 செப்டம்பரில் நடைபெற்ற சுதாகரனின் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி ஊடகங்களில் வெளியானதே, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பின் பலன் தேர்தலில் எதிரொலித்தது. மக்களவைத் தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. 1996 பொதுத் தேர்தலில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி கண்டது.

சிறிய பிரிவு:

தேர்தல் பின்னடைவுக்குப் பின்னர், சசிகலா, மற்றும் அவரது குடும்பத்தினருடனான நட்புறவை துண்டித்துக் கொள்வதாக ஜெயலலிதா அறிவித்தார். வளர்ப்பு மகனையும் கைவிட்டார். வாழ்நாள் முழுவது நகைகள் அணியப்போவதில்லை என சூளுரைத்தார்.

சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு அமலாக்கப் பிரிவு முதலில் செக் வைத்தது. தொலைக்காட்சி சேனலுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். 1996 ஜூன் மாதம் சசிகலாவும் அந்நியச் செலவாணி சட்ட விரோத பயன்பாடு, கடத்தல் தடுப்புச் (COFEPOSA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டி.டி.வி.தினகரனும் கைதானார்.

ஆனால், சசிகலா விடுதலையான பின்னர், மீண்டும் மலர்ந்தது ஜெயலலிதா – சசிகலா நட்பு. ஆனால், அரசு பி.ஆர்.ஓ.வாக இருந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் எப்போதுமே ஜெயலலிதாவின் நல் அபிப்ராயத்தைப் பெறவில்லை. அவர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஜெயலலிதா சந்தேகித்தார்.

இதனால், டிசம்பர் 2011-ல் சசிகலா குடும்பத்தினர் சசிகலா குடும்பத்தினரை நட்வு வளையத்தில் இருந்து மீண்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. அதிமுகவை கையகப்படுத்த நடராஜனும், மற்றவர்களும் கூட்டுச் சதியில் ஈடுபடுவதாகக் கருதி ஜெயலலிதா இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

ஜெயலலிதாவின் நடவடிக்கை கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மன்னார்குடி குடும்பத்தினருடனான நட்பே ஜெயலலிதாவுக்கு கேடு விளைவித்ததாக கட்சியினர் நம்பினர். ஆனால், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி 100 நாட்கள் மட்டுமே நீடித்தது. சசிகலா, தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு பணிந்தார் ஜெயலலிதா.

1990-களில் சசிகலாவும் அவரது கூட்டாளிகளும் துவங்கிய தொழில்நிறுவனங்கள் மூலம் கிடைத்த சொத்தே பின்னாளில் ஜெயலலிதாவை நீதிமன்றங்களில் நிறுத்தியது. சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தை இந்த நிறுவனங்களே வருவாய் என திரித்துக் கூறின என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment