மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்

 
 
 
கடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் உள்ளது மலப்புழா. கேரளாவின் அழகான பெண்களைப்போல பச்சை பசேல் என்ற  தென்னமரங்கள், பாக்குமரங்கள், தோப்புகள் சூழந்த பகுதி மலப்புழா என்ற சின்னஞ்சிறய நகரம். அந்நகரத்தில் உள்ளது கம்பீரமான மழப்புழா டேம்.

கேளராவின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது இந்த மலப்புழா அணை.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணை கட்டுமானப்பணி 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆறே ஆண்டுகளில் அதாவது 1955ல் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா காணப்பட்டது.
இந்த அணையின் நீளம் 2,069 மீட்டர், உயரம் 115 மீட்டர். 2 கால்வாய்களை கொண்டது. இதன் மூலம் 42 ஆயிரம் ஹெக்டர் நீர் தேக்க பரப்பளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதி 145 சதுர கிலோ மீட்டர், கொள்ளளவு 236 கன மீட்டர். 1955ல் மெட்ராஸ் ஸ்டேட் முதல்வராக இருந்த பேரறிஞர் காமராஜர் இந்த அணையை திறந்துவைத்துள்ளார். அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பக்தவச்சலம் காலத்தில் அவரின் மேற்பார்வையில் இந்த அணை கட்டப்பட்டது.
 

 
பார்வையாளர்களுக்கு அனுமதி :
தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி. வாராந்திர, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இரவு 8 மணி வரை சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அணைக்குள் நுழைய பெரியவர்களுக்கு 15 ரூபாய் டோக்கன். குழந்தைகளுக்கு 10 ரூபாய் வாங்குகிறார்கள்.
கம்பீரமாக உள்ள இந்த அணையின் கீழ் பகுதி முழுவதும் பெரிய தோட்டம், குழந்தைகளுக்கான விளையாட்டு புல்வெளி மைதானம். நீச்சல் குளம், போட்டிங், ரோப் கார் என சகல வசதிகளையும் செய்து வைத்துள்ளது கேரளா சுற்றுலாத்துறை. உள்ளே போட்டிங், டோப் கார், நீச்சல் குளம் ஆகியவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும்.
செஸ், குழந்தைகளுக்கான சிலச்சில விளையாட்டுகள் இலவசம். கார்டனை பொறுமையாக நடந்து சுற்றி பார்க்க வேண்டுமானால் சரியாக 12 மணி நேரமாகும். அதனால் ரோப் கார் அமைத்துள்ளார்கள். ஆகாயத்தில் இருந்தபடி கார்டனை வலம் வரலாம். இல்லையேல் போட்டில் அமர்ந்தால் ஒரு ரவுண்ட் அடித்துக்காட்டுவார்கள்.
கார்டன் உட்பட அனைத்து பகுதிகளையும் தூய்மையாக வைத்துள்ளார்கள். மலப்புழா அம்யூஸ்மன்ட் பார்க்குக்கு ஒரு வரலாறு உண்டு.  கேரளா மாநிலத்தில் அமைக்கப்பட்ட முதல் அம்யூஸ்மென்ட் பார்க் இதுவாகும். பாம்பு பண்ணையும் உண்டு. இந்த டேம்மில் இருந்து பாலக்காடு உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. தொழிற்சாலைகளுக்கும் இங்கிருந்து தான் நீர் செல்லப்படுகிறது. அதோடு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 42 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெருகிறதாம்.
திருவிழா காலங்களில் இரவு நேரத்தில் தண்ணீரில் அமைக்கப்பட்டுள்ள கலர் பல்புகள் வெளிச்சத்தில் அந்த நீரை பார்க்கும் போது அப்படியொரு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தம் ஏற்படும்.
நீச்சல் குளம்:
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நீச்சல்குளம் திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் இரவு 8 மணி வரை உண்டு. மதியம் 1 முதல் 2
மணி வரை சாத்தப்படும். பெண்களுக்கு தனியாக 2 மணி முதல் 3 மணி வரை நீச்சல்க்காக திறந்துவிடப்படுகிறது. 75 ரூபாய் நீச்சல் குளத்திற்கான தொகை.
ரோப் கார்:
தென்னிந்தியாவில் அணையை சுற்றிப்பார்க்க ரோப் கார் வசதி செய்து தரப்பட்ட முதல் அணை இதுதான். இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் 64 கோச் அமைக்கப்பட்ட இது இரண்டாயிரம் அடி தூரத்துக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்கிறது. மாலை 6 மணி வரை மட்டுமே இதில் பயணம் செய்ய முடியும்.
பாம்பு பண்ணை
மலப்புழா பூங்காவில் பாம்பு பண்ணை உள்ளது. பாம்புக்கான சிகிச்சை மையமாகவும் இது செயல்படுகிறது. உலகில் அதிக விஷம் உள்ளதும், மேற்கத்திய மலைத்தொடரில் மட்டுமே காணப்படும் கிங் கோப்ரா என்கிற ராஜநாகம் சுற்றலா பயணிகள் பார்வைக்காக இந்த பாம்பு பண்ணையில் உள்ளது. ஆண் ராஜநாகம், பெண் ராஜநாகம் இரண்டு இந்த பண்ணையில் உள்ளது. அதற்கு குளிர்சாதன வசதி செய்து பாதுகாக்கிறார்கள். அதேபோல் வெள்ளை ராஜநாகம் ( ஒயிட் கோப்ரா ) உட்பட 30 வகையான பாம்புகள் பார்வைக்கு உள்ளன.
 
ராக் கார்டன் ( கல் பூங்கா )
தென்னியாவில் முதன் முதலில் அமைக்கப்பட்ட பூங்காயிது. இங்கு உடைந்த பானை ஓடுகள், பீங்கான்கள், டைல்ஸ்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே போய் பார்த்தால் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் ஒரு பெண் நடனம் ஆடுவது, கேரளாவில் பாராம்பரிய வாத்தியமான செண்டை மேளம் வாசிப்பது.
ஒரு பெண் மண் சுமப்பது, வெண் கொக்குகள், பெண்கள் நடனம் ஆடுவது, உழைக்கும் ஆண்கள், விலங்குகள் போன்றவற்றை அமைத்துள்ளார்கள். இதே போல் நமது தமிழகத்தில் ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த
பூங்கா மலப்புழா அணை அமைந்துள்ள பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்ல பெரியவர்களுக்கு
10 ரூபாய் தான். ஆனால் மனதுக்கு சந்தோஷத்தை தரும் இடமாகவுள்ளது. பார்க்க வேண்டிய இடம்.
2005ல் மலப்புழா அணையின் ஐம்பதாவது ஆண்டு விழாவை கேரளா அரசாங்கம் கோலாகலமாக கொண்டாடியது. மலப்புழா அணைக்கு மிக அருகில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் பாலக்காடு கோட்டை என்கிற திப்புக்கோட்டை.
திப்புக்கோட்டை :
பாலக்காடு நகரின் மையத்தில் உள்ளது. திப்பு கோட்டை. பாலக்காடு கோட்டை என்ற பெயரில் முதலில் கோழிக்கோடு மன்னர் அரசாச்சியின் கீழ் ஒரு சிற்றரசரால் ஆளப்பட்டு வந்தது. காலப்போக்கில் கோழிக்கோடு மன்னரின் பிடியில் இருந்து விலகி சுதந்திர மன்னராக அச்சன் என்பவர் ஆளத்தொடங்கியுள்ளார். இதனை கண்டு பொங்கிய கோழிக்கோடு மன்னர் பாலக்காடு மீது போர் தொடுக்க ஆயத்தமானார். 1757ல் அந்த போர் நடைபெறயிருந்த நிலையில் பாலக்காடு அரசர் ஐதர்அலியிடம் உதவி கேட்டு ஆள் அனுப்பினார். அவரும் உதவி செய்ய உறுதியளித்து தன் படைகளை அனுப்பினார்.
ஐதர்அலி கட்டுப்பாட்டில் இந்த பாலக்காடு கோட்டை வந்தது. இதனை கண்டு கொதித்த பிரித்தானிய படைகள் ஐதர்அலியிடம் இருந்து படை நடவடிக்கை மூலம் 1768ல் கோட்டையை கைப்பற்றினர். கோட்டையை விட்டுதர மனம்மில்லாத ஐதர்அலி பிரித்தானிய படைகள் மீது போர் தொடுத்து சில மாதங்களிலேயே கோட்டையை மீட்டார். இரண்டாவது முறையாக 1783ல் மீண்டும் பிரித்தானிய படைகள் அந்த கோட்டையை கைப்பற்றின. அவர்களிடம்மிருந்து கோழிக்கோட்டு அரச படைகள் கைப்பற்றின. இவர்களிடம்மிருந்து 1790ல் மீண்டும் பிரித்தானிய படைகளிடமே இந்த கோட்டை வந்தது. பலப்போர்களில் இந்த கோட்டை ஆயுத கிடங்காக இருந்துள்ளது, வீரர்கள் பாதுகாப்புக்கு இருந்துள்ளனர்.
1900க்கு பின் ஆங்கிலேயர் ஆட்சியின் போது அரசு அலுவலகமாக இக்கோட்டையை பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள். இன்று பாதுகாக்கப்பட்ட பகுதியாக செயல்பட்டு சிதலமடையாமல் உள்ளது இக்கோட்டை. கேரளாவில் பாதுகாக்கப்படும் கோட்டைகளில் ஒன்றாக பராமரிக்கப்படுகிறது.
ஐதர்அலியின் மகன் திப்புவின் பெயர் இந்த கோட்டைக்கு வைக்கப்பட்டு அந்த பெயரிலேயே இன்று அழைக்கப்படுகிறது.
முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்ட கோட்டையிது. சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு பசுமையாக வைக்கப்பட்டள்ளது. இக்கோட்டையின் உள்ளே  திறந்தவெளி அரங்கமாக பயன்படுத் தப்படுகிறது. குழந்தைகளுக்கான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பாலக்காடு சப்-ஜெயிலும், ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது.
 
தங்குமிடம் – வழித்தடம்
சுகாதாரமான முறையில் உண்ண சிறிய, பெரிய உணவகங்கள் உள்ளன. தங்குவதற்கு விடுதிகள், ஹோட்டல்கள் குறைந்த அளவே உள்ளன. இங்கு இடம் கிடைக்கவில்லையெனில் அருகில் உள்ள பாலக்காட்டில் தங்கிக்கொள்ளலாம்.
சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் நேரடியாக பாலக்காட்டுக்கு இரயிலில் செல்லாம். கோவை, பொள்ளாச்சியில் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
கோவையில் இருந்து 48 கி.மீ. தொலைவு தான். பொள்ளாச்சியில் இருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது.
– ராஜ்ப்ரியன்
 

 

 

 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s