கோயில் ஆகிறது பரப்பன அக்ரஹாரா சிறை!

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட முதல் மூன்று நாட்கள் பரப்பன அக்ரஹாரா நெரிசலில் சிக்கித் தவித்தது. நாட்கள் ஆக ஆக கூட்டமும் குறைய ஆரம்பித்துள்ளது. 

ஓவர் டு பரப்பன அக்ரஹாரா…

சைரன் வைத்த காரில் தம்பிதுரை!

அமைச்சர்கள் பெரும்பாலும் பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருசிலர் தினமும் காலை 10 மணிக்கு பரப்பன அக்ரஹாராவுக்கு வருகின்றனர். அமைச்சர்களுக்காக அவர்களது உதவியாளர்கள் பிளாஸ்டிக் சேர்களை எடுத்து வருகிறார்கள். அந்த சேர்களை மரத்தடியில் போட்டு உட்கார்ந்து கொள்பவர்கள், மதியம் வரை பேசியபடியே இருக்கிறார்கள். அங்கேயே மதிய உணவு வருகிறது. மரத்தடியில் அமர்ந்தபடியே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். சிலர் அங்கிருந்து சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு கிளம்பிவிடுகிறார்கள். மாலை 6 மணி ஆனதும், கொசு அதிகம் இருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். 4-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சைரன் வைத்த காரில் சிறை வளாகத்துக்கு வந்தார். ஜெயலலிதாவை சந்திக்க மனு கொடுத்துவிட்டு நீண்ட நேரம் உள்ளே காத்திருந்தார். ஆனால், ஜெயலலிதாவிடம் இருந்து பதில் இல்லை. அதனால் மதியம் 2 மணியளவில் அங்கிருந்து கிளம்பிவிட்டார். மீண்டும் அன்று மாலை 6 மணிக்கு ஜெயிலுக்குள் சென்று திரும்பினார் தம்பிதுரை.

மண்டை உடைக்கும் போராட்டம்!

திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க-வினர் சிலர், ‘நாங்க அம்மாவை பார்த்தே ஆகணும்!’ என்று செக்போஸ்டில் இருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘இப்போ நீங்க போகலைன்னா நாங்க அடிச்சு விரட்ட வேண்டியிருக்கும்’ என்று போலீஸார் எச்சரித்தனர். கடுப்பாகிப்போன அ.தி.மு.க-காரர் ஒருவர், ”வீரப்பன் இல்லாமல் உங்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு. வீரப்பன் இருந்திருந்தா இந்த நேரம் நீங்க அம்மாவை உள்ளே வெச்சுருக்க முடியுமா… அம்மா மட்டும் வெளியில வரட்டும் அப்புறம் நாங்க யாருன்னு காட்டுறோம்!” என்று கோபப்பட்டார். அதற்கு அங்கிருந்த போலீஸ்காரர், ”வீரப்பனை சுட்டுக் கொன்றதே உங்க அம்மாதானே!” என்றதும், அ.தி.மு.க பார்ட்டி  கப்சிப் ஆனார். செங்கம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், இளங்கோ, பிரகாஷ், இம்தியாஸ் ஆகியோர் சிறைக்கு எதிரே உட்கார்ந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். குளித்துவிட்டு வந்து, சிறையை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டனர்.

மொட்டை போட்ட அதே குழுவினர் மறுநாள் ஒரு தேங்காய் மூட்டையுடன் சிறை செக்போஸ்ட் அருகே வந்தனர். ”அம்மாவை வணங்கி இங்கே தேங்காய் உடைக்கப் போகிறோம்!” என்று சொல்லிவிட்டு, ஜெயிலை நோக்கி கும்பிட்டுவிட்டு தேங்காய்களை ரோட்டில் உடைக்க ஆரம்பித்தனர். போலீஸார் பதறியபடி ஓடி வந்து தேங்காய்களைப் பறிமுதல் செய்ய முயற்சித்தனர். ”தேங்காய் உடைக்கிறதை தடுத்தீங்கன்னா உங்க மண்டையை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்!” என்று அவர்கள் ஆக்ரோஷமாகக் கத்தினார்கள். அதனால் போலீஸார் அமைதியாக… 101 தேங்காய்களையும் ரோட்டில் உடைத்துவிட்டு மீண்டும் அங்கேயே விழுந்து பயபக்தியுடன் வணங்கினார்கள்.

‘பெயில் கேட்டு அலைவது வேஸ்ட்!’

சிறை வளாகத்துக்கு வெளியே ஜெராக்ஸ் பேப்பர்களோடு சுற்றித் திரிந்த நாகராஜ் என்ற ஜோதிடர், ”அம்மாவுக்கு இந்த தண்டனை கிடைக்க முக்கிய காரணம், அவர் 16.5.2011 அன்று பதவியேற்றதுதான். அந்த நாளும் நேரமும் சரியில்லை. அதனால்தான் இந்த சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. இதை அம்மா பதவியேற்ற மறுநாளே நான் இமெயில் மூலம் கார்டனுக்கு அனுப்பிவிட்டேன். அதற்கான அத்தாட்சிதான் இது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அம்மாவுக்கு 19-ம் தேதிதான் பெயில் கிடைக்கும் என்று கட்டம் சொல்லுது.  இவங்க பெயில் கேட்டு அலைவது வேஸ்ட். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முன்பைவிட வேகமாகச் செயல்படுவார். அவர் பிரதமர் ஆகும் நாளும் வெகுதூரத்தில் இல்லை!” என்று ஜோதிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்தது. ஜெயலலிதாவுக்கு ஆருடம் சொன்னவர், ஒருகட்டத்தில் அங்கே வந்தவர்களுக்கும் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

‘அப்போ காவிரி… இப்போ சேர்!’

செக்போஸ்ட்டுக்கு எதிர்புறத்தில் உள்ள மரத்தடியில் ஒருவர் ‘தமிழ்நாடு புரட்சித்தலைவி பசுமை தமிழகம்’ என்ற ஃப்ளெக்ஸ் கட்டி அதற்கு கீழே சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தோம். ”என் பேரு சுந்தரராஜன். தமிழ்நாடு புரட்சித் தலைவி பசுமை தமிழகத்தின் நிறுவனர். காலையில என்னோட ரூம்ல உண்ணாவிரதம் தொடங்கிட்டுதான் கிளம்பினேன். அம்மா வெளியில வரும் வரைக்கும் தொடர் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருக்கேன்” என்றார். சரியாக மதியம் 3 மணிக்கு சுந்தரராஜன், ‘நான் தற்போது யூரின் செல்ல வேண்டியிருப்பதால் இங்கிருந்து கிளம்புகிறேன்’ என்று அறிவித்துவிட்டுப் புறப்பட்டார். திரும்பி வந்தவரின் சேரை காணவில்லை. ”கன்னட வெறிபிடித்தவர்கள் காவிரியையும் விடவில்லை. எங்க அம்மாவையும் விடவில்லை. இப்போ என்னோட சேரையும் விடவில்லை!” என்று கத்திவிட்டு, யாருக்கோ போன் செய்தார். அவரது உதவியாளர் ஒரு சேரை எடுத்துக்கொண்டு வந்தார். ”இனி என்னோட சேர்ல யாராவது கை வெச்சுப்பாருங்க…” என்று உரக்கச் சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டார். இரவு 7 மணிக்கு, ”எனக்கு ஹோட்டல்ல ரூம் இருக்கு. நான் அங்கே போய் உண்ணாவிரதத்தைத் தொடரப் போறேன்!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் சுந்தரராஜன்.

‘அது நம்ம பொண்ணு!’

கர்நாடகத்தின் மண்டியா மாவட்டம் மேலக்கோட்டை பகுதியில் ஜெயலலிதாவின் முன்னோர்கள் வாழ்ந்தனர். அதன் அருகே உள்ள ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் முன்னாள் பிரதமர் தேவகவுடா. தேவகவுடாவுக்கு ஜெயலலிதா மீது எப்போதும் தனிப்பாசம் உண்டு. கடந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றபோது, ‘அது நம்ம பொண்ணு!’ என்று சந்தோஷத்துடன் சொன்னவர் தேவகவுடா. ஜெயலலிதாவை சிறையில் சந்திக்க முயற்சி செய்தவர்களில் இவரும் ஒருவர். ஆனால், அது முடியவில்லை என்றதும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ”தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இருக்கின்ற நல்லுறவைப் பேணி காக்க வேண்டும். ஜெயலலிதாவின் உடல் நிலை, பாதுகாப்புப் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு கர்நாடக சிறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அவரை மாற்ற வேண்டும். இதுபற்றி நான் கர்நாடக அரசிடமும் முறையிடப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொடுத்தாலும் விடமாட்டோம்!

சிறைக்குச் செல்லும் செக்போஸ்ட்டில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளையும், வாட்டர் பாட்டில், டீ, காபி, மற்றும் மதிய உணவு வாங்கிக் கொடுப்பது அங்கே வரும் அ.தி.மு.க-வினர்தான். போலீஸ்காரர்களை எப்படியாவது நட்பாக்கி ஜெயில் வளாகத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அனைத்தையும் மறுக்காமல் வாங்கிக்கொள்கிறார்கள் போலீஸார். ஆனால், யாரையும் உள்ளே மட்டும் அனுமதிப்பது இல்லை. பரப்பன அக்ரஹாராவுக்கு வரும் தொண்டர்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகிறார்கள். பலர் பெங்களூருக்கு வந்துதான் கருப்புச் சட்டை வாங்குகிறார்கள். இதனால், அங்கே கறுப்புச் சட்டைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

– வீ.கே.ரமேஷ

விகடன்

க்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s