சென்னை ஜி.ஹெச்யில் சுகாதாரம் கிலோ என்ன விலை?

 

2823மக்களின் அடிப்படையான வாழ்வாதாரங்களான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை, மருத்துவம் ஆகியவற்றை உறுதி செய்து தர வேண்டியது அரசின் கடமையாகும். இவற்றை மக்களுக்கு இலவசமாக தருவதாக கூறி அவர்களை பிச்சைக்காரர்கள் போல் காட்டாமல், அதை பெறுவதற்கான வழியை உருவாக்கி கொடுக்கும் அரசே நல்லரசு. அது போன்ற ஒரு அரசின் கீழ் வாழும் குடிமக்கள் நிச்சயம் உழைப்பாளிகளாகவும், சுயமரியாதை மிக்கவர்களாகவும் இருப்பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. தயவு செய்து இதையாரும் தமிழகத்தோடும் தற்போது நடக்கும் ஆட்சியோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஒரு ஆட்சியின் உண்மையான நிலையை கண்டறிய வேண்டுமானால் அதற்கு ஒரு எளிய சோதனை உள்ளது. அரசு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். என்றைக்கு அரசு மருத்துவமனைகள் நாற்றம் இல்லாமல், குப்பைகள் தேங்காமல், நோயாளிகள் அவதிப்படாமல், சுகாதாரமாக தோற்றம் அளிக்கிறதோ அப்போது நாம் நிச்சயமாக அதை நல்லாட்சி என்று கண்களை மூடிக் கொண்டு விட்டு சொல்லி விடலாம்.

சென்னையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஆரோக்கியமுள்ள ஒருவர் சென்றால், அங்குள்ள குப்பை கழிவுகள், நாற்றங்கள் தாங்காமல் மயங்கி விழாமல் இருந்தால் ஆச்சரியம். அதை விட ஆச்சரியம், இது போன்ற கழிவுகளால் அந்த நபருக்கு வேறு ஏதேனும் உபாதைகள் ஏற்படாமல் இருந்தால் அவர் உண்மையிலேயே அதிர்ஷ்ட சாலிதான். அரசு மருத்துவமனைகள் என்னமோ மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக சொல்லப்படுகிறது. இது அப்பட்டமான பொய். ஒரு புறம் லஞ்ச ஊழலில் பெருத்து போயுள்ள ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு அங்கு வரும் நோயாளிகளும், மக்களும் தினம் தினம் நூற்றுக்கணக்கில் அழும் பணத்தை விட்டு விடுங்கள். அது தனிக்கதை. ஆனால் மக்களின் அன்றாட உழைப்பால் உருவான கோடிக்கணக்கான வரிப்பணத்தை கொண்டு மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் அதற்கென நிதி ஒதுக்கி, அந்த நிதியை கொண்டு இயங்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை போன்றவை மக்களுக்கு தேவையான சேவைகளை செய்து தருகின்றன என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

ஆனால் அதில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு டாக்டர்கள் தொடங்கி கடை நிலை ஊழியர் வரை நோயாளிகளை நடத்தும் நடவடிக்கையை பார்த்தால் ஊமையாக இருப்பவர் கூட உரக்க கத்தி கோஷம் போடும் அளவுக்கு எரிச்சல் வந்து விடும். இது போதாது என்று மக்களின் வரிப்பணத்தை முழுவதும் எங்கோ கொண்டு சென்று கொட்டி விட்டு, எந்த வித பராமரிப்பும் இல்லாமல் மருத்துவமனை முழுவதையுமே சவகிடங்கு போல் மாற்றிவிட்ட திறமை அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே சேரும். போதாக்குறைக்கு மருந்து கிடையாது, மருத்துவர் கிடையாது, மாத்திரைகள் கிடையாது என்று அவ்வப்போது நோயாளிகளை ஒரு நாயை போல விரட்டி அடிக்கும் அவலத்தால் படும் தவிப்பை எத்தனை வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.
இது போதாதென்று சில மாதங்களுக்கு முன்பு திருவல்லிகேணி கோஷா மருத்துவமனையில் எலி கடித்து பச்சிளங்குழந்தை இறந்தது.

சரியான மின் விளக்கு இல்லாமல் பெரம்பூர் அருகே இருக்கும் மருத்துவமனையின் 4வது தளத்தில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் சாப்பிட்ட டாக்டர்களே மயக்கம் போட்டு விழுந்தனர். அவர்களுக்கு அந்த கேன்டீனில் சாப்பிடாத மற்ற டாக்டர்கள் மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள செயற்கை சுவாச கருவியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ அணைப்பு ஊழியர்கள் வருவதற்குள் ஊழியர்களே அதை போராடி அணைத்தனர். நோயாளிகள் அனைவரும் அந்த வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டனர்.
இதையெல்லாவற்றையும் தாண்டி உச்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முன் பகை காரணமாக ஒரு கும்பல் ஒன்று அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையின் மாடியில் புகுந்து ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பிச் சென்றது.

இவ்வாறு சென்னை அரசு மருத்துவமனைகளின் அவலத்தை எழுத புகுந்தால் அது கட்டப்படாத பேண்டேஜ் துணியின் நீளம் போல நீண்டு கொண்டே போகும். நாமே கத்தரித்து இங்கே நிறுத்திக் கொள்வோம். அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுளிக்க வைக்கும் நாற்றம். எங்கு திரும்பினாலும் கழிவுகள், இலவச சிகிக்சையை பெறுவதற்குக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை. ஏழ்மையும், இல்லாமையும் துரத்த நோய்க்கு சிகிச்சை பெற்றே ஆகவேண்டிய சூழ்நிலையில் அரசு மருத்துவமனையை நாடினால் அலட்சியமும், அவமானமும்தான் அங்கு சிகிச்சையாக கிடைக்கிறது. பிரசவத்திற்கு பல்லாயிரம் ரூபாய் கொடுக்க இயலாமல் அரசு தாய்- சேய் மருத்துவமனைகளை நாடினால் அங்கு பச்சிளம் குழந்தைகளை எலிகளுக்கும், நாய்களுக்கும் இரையாக்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஏற்கனவே நடப்பில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை உருப்படியாக பராமரிக்க முடியாத அரசு தற்போது கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து புதிய மருத்துவ கட்டிடங்களை கட்டி வருகிறது.

உரிய வசதிகளையும், சிகிச்சையையும், போதிய ஊழியர்களையும், சுகாதாரமான பராமரிப்பையும் செய்தால், இருக்கும் மருத்துவமனைகளிலேயே ஏராளமான மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எத்தனையோ தனியார் மருத்துவமனைகள் சாதாரணமாக இரண்டு, மூன்று அடுக்குகளிலேயே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்கிற போது, இத்தனை பெரிய கட்டிடம், நூற்றுக்கணக்கான ஊழியர்கள், பல அடுக்கு தளங்கள், கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் தருவிக்கப்பட்ட நவீன மருத்துவ கருவிகள், கோடிக்கணக்கில் செலவழித்து ஆண்டு தோறும் வெளிவரும் நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் இவர்களை கொண்டு ஒரு தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு அளிக்க முடியாதா? அல்லது அளிக்க ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனரா?

சென்னை அரசு மருத்துவமனையை நம்பித்தான் லட்சக்கணக்கான சென்னைவாசிகளும், சென்னையை நம்பி வாழ வந்துள்ள கோடிக்கணக்கான தமிழக மக்களும் உள்ளனர். ஆரோக்கியமான குடிமக்களை கொண்ட தேசம் எந்தவித புற நிர்பந்தமும் இல்லாமல் தானாகவே தன்னிறைவு பெறும் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போகலாம். ஆனால் மக்களுக்கு நிச்சயம் தெரியும். அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது மக்களுக்கான சலுகை அல்ல. உரிமை. அதற்கு அடிப்படையாக சுகாதாரமான சுற்றுபுறச் சூழலுடன் அரசு மருத்துவமனைகள் இருக்க வேண்டியது அவசியம். ஆட்சியாளர்கள் அதற்கான நடவடிக்கையை எடுப்பார்களா என்பதே மக்கள் முன் வைக்கும் கேள்வி?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s