ஏரிக்குள் கல்யாண மண்டபம்…

p36

‘பட்டா நிலம்’ என்கிறது அ.தி.மு.க…
வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம் வடிந்துவிட்டது. அந்தத் தாக்குதலின் சோகத்திலிருந்தும் பலர் மீண்டுவிட்டனர். ஆனால், இந்தச் சோகத்துக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

வெள்ளம் பொங்கிப் பாய்ந்த நேரத்தில், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பொங்கி எழுந்த அரசு இயந்திரம், தற்போது எந்த நிலையில் இருக்கிறது? மீண்டும் ஒரு வெள்ளப் பாதிப்பு வராமல் இந்த அரசாங்கம் நம்மைக் காப்பாற்றி விடுமா என்பது உட்பட பல்வேறு கேள்வி களுடன் புறப்பட்டோம், வெள்ளப் பாதிப்பின் மையம் என வர்ணிக்கப்படும் முடிச்சூர் (தாம்பரம்) பகுதியை நோக்கி…

விகடனின் ‘நிலம்… நீர்… நீதி!’ இயக்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன், கடந்த ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில், வண்டலூர் தொடங்கி வாலாஜாபாத் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் நாள், விகடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ஆலோசனைக் குழு உறுப்பினர் அருண் கிருஷ்ண மூர்த்தி (நிறுவனர், இந்திய சூழலியலாளர்கள் நிறுவனம், சென்னை) உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டாவது நாள் ஆய்வின்போது, ஆலோசனைக் குழு உறுப்பினர்களான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங், டாக்டர் சுரேஷ் (இயக்குநர், பாமரர் ஆட்சியியல் கூடம் மற்றும் தேசியச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்) ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆய்வின்போது கண்டறிந்த ஒவ்வொன்றும் நம்மை நிலைகுலைய வைப்பதாகவே இருந்தன.

சோகம் பொங்கும் வண்டலூர் ஏரி!

வண்டலூர் ஏரிக்குள்தான் சென்னையின் 400 அடி வெளிவட்டச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி முற்றாக அடைபட்டிருப்பதோடு, அந்தச் சாலைக்கு மேற்புறம் வீடுகள், கட்டடங்கள் என்று முழுக்க முழுக்க கான்கிரீட் காடாக மாற்றப் பட்டுள்ளது. ஏரியை ஒழுங்காகப் பராமரித்திருந்தால் இன்னும் பல அடிகளுக்கு நீரைத் தேக்கியிருக்க முடியும்.

கரசங்கால் எனும் ஊரில் சாலையைக் குறுக்கிடுகிறது, கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து அடையாறு நோக்கிப் பாயும் கால்வாய். இந்தக் கால்வாய் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதோடு, சாலையோரமாக வந்து இந்தக் கால்வாயில் சேரும் இருபக்கக் கால்வாய்களும் கிட்டத்தட்ட மூடிக்கிடக்கின்றன. இதன் காரணமாகவே, வெள்ளம் பெருக்கெடுத்து அருகில் இருக்கும் வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளை மூழ்கடித்திருக்கிறது. இதேவேகத்துடன் அடையாற்றில் பாய்ந்த நீர், வழியில் சீறிக்கொண்டு வந்து சேர்ந்த செம்பரம்பாக்கம் நீருடன் கைகோத்து சென்னையை மூழ்கடித்தது.

பதற வைக்கும் 14 மாடி!

p36a

இதன் அருகிலேயே சாலையை ஒட்டி எழும்பிக் கொண்டிருக்கும் 14 மாடி கட்டடம், கிட்டத்தட்ட வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ந்த ராஜேந்திர சிங், “இதைப் பார்த்தீர்களா… கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து நீர் கசிந்து ஓடுகிறது. இவர்கள் கட்டியிருக்கும் கட்டடமே, கால்வாயின் மீதுதான். சாலையோரத்தில் இத்தனை அடுக்குகளைக் கட்ட எப்படி அனுமதி கிடைத்தது இப்படியெல்லாம் செய்தால், ஊருக்குள் வெள்ளம் வராமல் என்ன செய்யும்?” என்று கேள்வி எழுப்பினார்.

சோகத்தில் மணிமங்கலம்!

மணிமங்கலம் ஏரி… பெருவாரியாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக ஏரியின் கரையைத் தொட்டுத் ததும்பவேண்டிய நீர், பல அடிக்குக் கீழேயே கிடக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஏரிக்குள் தாறுமாறாக மண் அள்ளப்பட்டுவிட்டதால், நீரானது கீழாக கசிந்துகொண்டிருக்கிறது. இதனால், சீக்கிரமே இந்த ஏரி வற்றிப்போகும் ஆபத்து இருக்கிறது.

ஆக்கிரமிப்பின் உச்சம்… சாலமங்கலம்!

படப்பை அருகே, ஆத்தஞ்சேரியில் சாலமங்கலம் ஏரிக்குள் தென்னந்தோப்பு, மாந்தோப்பு என்று அமைத்ததோடு, கனரக வாகனங்கள் பழுதுபார்க்கும் பட்டறை உள்ளிட்ட பல கட்டடங்களும் முளைத்து விட்டன. வெள்ளநீர் சாலையில் பாய்ந்ததால்… அதிரடியாகக் களத்தில் குதித்த அதிகாரிகள், இந்த ஆக்கிரமிப்புகளை இடித்து நொறுக்கியதோடு, ஏரிக்குக் கரையை அமைக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளனர். பல கடைகள் அகற்றப்பட்டு கரை அமைக்கப்பட்டுள்ளது. அத்தனை பலமாக இல்லாமல் இருப்பதோடு, அரைகுறையாகவும் உள்ளது.

ஆழமில்லாத ஏரி!

பிரமாண்டமாக நிற்கும் தில்லை மஹாலின் பின்பக்கத்தைத் தொட்டு அலையடித்துக் கொண்டிருக்கிறது ஏரி. இந்த மஹாலின் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் நீர், நேரடியாக ஏரியில் கலக்கிறது. அடுத்துள்ள வஞ்சுவாஞ்சேரி ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்திருக்கிறது ராசி இன்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட பல கட்டடங்கள். இவற்றில் குடியிருப்புகள் மற்றும் வியாபார நிறுவனங்களும் அடக்கம். இதன் காரணமாகவே ஏரியில் போதுமான தண்ணீர் இல்லை. தூர்வாரப்படவும் இல்லை. ஆனால், கரையை மட்டும் பலப்படுத்தியிருக்கிறார்கள். இதன் கலங்கல் பகுதியானது தரையோடு தரையாக இருப்பது ஏரியில் போதுமான நீர் நிரம்பாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

ஏரிக்குள்ளேயே குப்பையைப் பிரிக்கும் அப்போலோ!

ஒரகடம் ஏரி கொடுமையிலும் கொடுமை. குப்பைகளைப் பிரித்தெடுப்பதற்கான பணிமனையை ஏரிக்குள்ளேயே அமைத்துள்ளனர், அப்போலோ டயர் நிறுவனத்தின் உதவியோடு. ஆம்… இந்த ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில்தான் அமைந்திருக்கிறது, அப்போலோ டயர் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள். பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் ஒரகடம் காவல் நிலையம் உள்ளிட்டவை ஏரிக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘இந்தியாவின் டெட்ராய்டு’ என்கிற பெருமையோடு இந்தப் பகுதி முழுக்க அமைக்கப் பட்டிருக்கின்றன, பல்வேறு ஆட்டோ மொபைல் நிறுவனத் தொழிற் சாலைகள். ஆனால், இவற்றில் பெரும்பாலானவை ஏரிக்குள்ளும், ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியை ஆக்கிரமித்துமே கட்டப் பட்டுள்ளன.

பரிதாப பாலாறு!

கடைசியாக பாலாறுக்குச் சென்றபோது… அதிர்ந்தே போனார் ராஜேந்திர சிங். “மேல்மடையில் ஆறு வறண்டிருக்கலாம். ஆனால், கீழ்மடை எனப்படும் ஆறு கடலில் கலப்பதற்கு முன்பாக இருக்கும் பகுதிகள் வறண்டு கிடப்பதை இங்குதான் பார்க்கிறேன். இதுபோன்ற கொடுமை உலகில் எந்த ஊரிலும் இல்லை. இத்தனைப் பெரிய ஆற்றை இப்படி வறண்டுகிடக்கச் செய்திருக்கும் உங்கள் அரசாங்கங்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை” என்று கோபப்பட்டவர், “இந்த ஆற்றை உயிர்ப்பிக்க வேண்டும். ஆற்றின் வழிநெடுக உள்ள ஏரிகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதன் மூலமாகவே இதைச் சாதிக்க முடியும்” என்று ஆதங்கம் பொங்கச் சொன்னார்.

-த.ஜெயக்குமார், துரை.நாகராஜன்
படங்கள்: தி.ஹரிஹரன், தி.குமரகுருபரன்

தில்லை மஹால்!

வெள்ளப் பாதிப்பு காரணமாகவே, சாலமங்கலம் ஏரியில் உள்ள வீடு, வியாபார நிறுவனங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், அருகில் உள்ள தில்லை மஹால்?

அதன் உரிமையாளர் தி.குணசேகரனிடம் கேட்டபோது, “மஹால் பின்புறம் உள்ள சுவர் ஆக்கிரமிப்பு என்று அகற்றப்பட்டுள்ளது. மஹால் அமைந்துள்ள இடம் பட்டா நிலம்தான்” என்று சொன்னார்.

(ஆனால், பின்புறத்தில் செப்டிக் டேங் மீது கட்டப்பட்டிருந்த சிறிய சுவர் மட்டுமே இடிக்கப் பட்டுள்ளது. மற்றபடி சுவர் எதையும் பெரிதாக இடிக்கவில்லை என்பதை நாம் நேரிலேயே பார்த்தோம்).

இதை ஆமோதிக்கிறார்… குன்றத்தூர் தி.மு.க ஒன்றியச் செயலாளரான படப்பை மனோகரன். “தில்லை மஹால் பட்டா நிலம்தான், ஏரி நிலம் கிடையாது. மஹாலுக்கு பின்னால்தான் ஏரி நிலம் இருக்கிறது. அங்கே ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றும் பணி முடிந்துவிட்டது” என்று அவர் சொன்னார்.

குணசேகரனின் நெருங்கிய உறவினர்கள் பலர் அ.தி.மு.க-வில் இருக்கிறார்களாம்.

மழுப்பும் அதிகாரிகள்!

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் குஜராஜிடம் கேட்டபோது, “தில்லை மஹால் இருப்பது பட்டா நிலம் என வருவாய்த் துறையினர் சொன்னதால் இடிக்கவில்லை” என்றார்.

வருவாய்த் துறை ஆய்வாளர் பூபாலன், ‘‘தில்லை மஹாலுக்குப் பின்னால் உள்ள சுவர் வரை இருக்கும் ஏரி நிலம், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அது ஆக்கிரமிப்பா, இல்லையா என்பதை எல்லாம் பொதுப்பணித் துறையிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நாங்கள் எதையும் சொல்ல முடியாது” என்று நழுவினார்.

இந்த விஷயத்தில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, மழை நேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிரடி காட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் கஜலெட்சுமியிடம் கேட்டோம். ‘‘சாலமங்கலம் ஏரியில் ஆக்கிரமிப்பு களை அகற்றியுள்ளனர். ஆனால், நீங்கள் சொல்லும் தில்லை மஹால்… ஆக்கிரமிப்பில் இருக்கிறதா… பட்டா நிலமா என்பது குறித்த முழு விவரங்களையும் சப்-கலெக்டரை நேரில் அனுப்பி உடனடியாக விசாரிக்கிறேன். அதன் அடிப்படையில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s