குடியிருந்த வீடும் போச்சு
கூண்டோடு ஊரும் போச்சு
பழகிய முகங்கலெல்லாம்
பலதிசையில் சடலமாச்சி
இதையெல்லாம் பார்க்கத்தானா
என்னை மட்டும் விட்டுபோச்சு? Continue reading
என் கவிதைகள்
அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா Continue reading
சில வைர வரிகள்….
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்?.
தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அள்ளாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.
நோன்பின் பெறுமதி
தக்வாவில் தங்கியிருக்கிறது.
நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தராவீஹ்-ல் வீங்குமே
இடக்கை அறியாமல் – சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.
இளைஞர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.
இந்த நன் நாளில்
கேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.
டி.வியிலிருந்து
கண்ணை கழட்டுங்கள்.
அந்த டி.வி.டியை
இன்றேனும் தூக்கில் போடுங்கள்.
காதுகளுக்கு கீதம்
விஷம் என்று சொல்லுங்கள்.
எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும் இளைஞர்களே
அந்த இரவு நேர மரத்திலிருப்பது
தெம்பிலி அல்ல உங்கள் ஒழுக்கங்கள்
– வெட்டாதீர்கள்
அந்த மாமரத்திலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்
– ஏன் உடைக்கிறீர்கள்.
வெடிகளை அல்ல
– அதை கொளுத்த வேண்டும் என்ற மடமையை கொளுத்துங்கள்.
நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்.
அந்த இரவுகள்
தூய்மையாகவே இருந்துவிட்டு போகட்டும்.
நாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோற்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.
தோழர்களே….
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.
இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.
இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.
இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும்
மயானத்தில் அல்ல காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.
இந்த நோன்பு
ஒரு இராணுவ வீரனின் நெஞ்சில் தக்வாவை தட்டியிருந்தால்
கொகட்டிச் சோலையில் ஒரு கோடீஸ்வரி கொழுத்தப் பட்டிருக்க மாட்டாள்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.
நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்.
நோன்பில்லாத ஹிட்லர்
மண்ணிடம் தோற்றான்.
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்.
நோன்பு மரம்,
இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு பெட்ரோல் ஊற்றும்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.
நன்றி,
ஜம்மியா
ரோஜாக்கள்
பல் மருத்துவருக்கோர் பாராட்டு!
புன்னகையை தொலைத்த எனக்கு
புதிய முகம் தந்ததினால்-
அன்னையானாய் நீ எனக்கு!
பல் போனால் சொல் போகும்!
என் தமிழ் சொல் காத்த
பழநீ(யின்) குமரா!
விதியென்று வரவில்லை
வேறு வழியின்றி வரவில்லை
நீண்ட வழி கடந்து
அறிந்தே வந்தேன்!- உன்
ம(ரு)கத்துவம் தெரிந்தே வந்தேன்!
என் சாண் உடம்பின்
அழகு முத்துப் பந்தல்
தோரண வாயில்-சீர் படுத்தி
எனை சிரிக்க வைத்த கலைஞனே!
நற் பிறப்பின் நாயகனே!- எங்கள்
பற்களின் காவலனே! நீ வாழி!
ஊருக்கு உழைப்பதில் துணை நிற்கும்
உன் துணைவி! எழில் மகள்! தமிழ்
குல மகள் வாழியவே!
என்ன தவம் செய்தார் இவன் தந்தையென
நாடு போற்ற நீடு வாழ வாழ்த்துகிறேன்!
எங்கள் பல்லாண்டு (பல்+ஆண்டு ) -நீ
பல்லாண்டு வா!ழ்க! வளமுடன்!
என்றும் எந்தன் சிரிப்பினில்
தெரிவதெல்லாம் உன் முகமே!
குலசை சுல்தான்
கண்ணீர் பூக்களால் ஓர் கவிதாஞ்சலி
பாரதி இல்லம் விட்டு
பறந்து போனது பாசப் பறவை!
படைத்தவன் மடி தேடி!
மஹாராணி உன் ஊர்க்கோலம்…
மல்லிகைத் தேர்க் கோலம்..
காணாமல் போனவன் நான்!
அரை நூற்றாண்டு ஆகியும் கூட
நேற்று வாழ்ந்தாற் போல்
நெஞ்சில் சில நினைவுகள்
நிழலாடுகின்றன இன்றும்….
உயிர் தந்த உறவே!.
உன் பெருமை ஒரு வரியில்
சொல்ல இயலுமோ!
என் கவியில் உனை வடிக்க
வார்த்தைகள் இல்லை என்னிடம்!
கவிக்கு இலக்கணம் பொய்யுரை!-
என் கவிதாஞ்சலி
இலக்கணம் மறந்த மெய்யுரை!
தாய் எனும் மந்திரச் சொல்
இல்லையெனில்
என்றும் என் கவிதை சூனியந்தான்!
எந்த தாய் மறைந்தாலும்– என்
இதயம் அழுகிறதே?.ஆம்
எல்லாமே என் தாய் தானே!
காணிக்கை கேட்காத
தெய்வம் நீ!
உன் தோட்டத்தில் தான்
எத்தனை மலர்கள்?
எத்தனை நிறங்கள்?
எத்தனை குணங்கள்!
தாய் போல் அரவணைக்க
தரணியில் யாருண்டு!
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் நீ இருந்தாய்!
’அ’ படிக்கும் முன்னே
அம்மாவை படித்தவன் நான்!
உயிர் எழுத்தின்
உண்மைப் பெயர் அம்மா!!
அம்மாவின் கருவறை-நான்
இன்னொரு முறை வாழத்-
துடிக்கும் புனித அறை!
என் நினைவில் வந்து வந்து
போகுதம்மா உன் முகம்!
இமைகளில் சிறை பிடிக்க
இயலவில்லை-சிதறி
விழுகிறது என் கண்ணீர்!
தும்பை பூ சேலை கட்டி
தூயவளே நீ படைத்த
அமுதுண்டு மகிழ்ந்தவன் நான்!
பாசமெனும் ஒற்றை சொல்லுக்காக
பல படிகள் ஏறி தோற்றவன் நான்!
என் நிலை அறிந்து ஆறுதல் கூற
யாருமில்லை இன்று எனக்கு!!
மரணம் ஓர் மாயச் சொல்!
மரணத்தை படித்தவன் நான்!
மரணம்…
காலத்தின் ஞானம்!
தூக்கத்தின் தொடர்ச்சி…
மரணம்…
ஒரு வழிப் பாதை…
முக்காலம் சொல்லித் தரும்
சமதர்ம தத்துவம்!
மரணம்…
மன்னிக்க முடியாத
இயற்கையின் தண்டனை..
இன்று நீ!!…-நாளை??
காத்திருக்கும் பட்டியலில்
நாங்கள்?? -இது
இறைவனின் நியதி!
சுவர்க்கத்தின் வாயினில்
துயில் கொள்ளும் அன்னையே!
காத்திரு தாயே! காத்திரு!
நிச்சயம் நான் அங்கு வருவேன்
ஏனெனில்…
தாயின் காலடியில் தான்
என் சொர்க்கம்!!
கண்ணீர் பூக்களால்
ஆயிரம் கோடி அர்ச்சனைகள்!
வேரின் பெருமையை-இனி
விழுதுகள் பேசட்டும்!
(நண்பரின் அம்மா மறைவுக்கு எழுதியது)
அன்பு மகன்,
குலசை சுல்தான்.
அம்மா!
அறுபது வயதுக் குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்தேடி
உன் உயிர் தந்து
என்னுயிராகிவிட்ட தாயே !
அன்று உன்னருகிருந்து
இன்று உனையும்
இழந்து தனிமரமாய்
குளிருக்குள் உன் வடு
தேடும் பறவையானேன் !
சிறு பிள்ளை தன் தாயிழந்த
துயர் எனை வாட்டுகிறது
கோழிக் குஞ்சுகளாய்
உன்னுள் நானிருந்த
நாட்களைத் தேடுகிறேன் !
இறுதி வரை உன் முகம்
காணாது போனதற்காய்
ஏங்குகிறேன்,! .
எனக்காக உன்னலமிழந்து
எனைக்காத்த தாயே !
நீ இருக்கும் வரை எனை
அணுகா வாழ்வின் துயர்
இன்று என்னிருப்பும் கேள்வியாகி
சுமையாகிப் போனது!
என் சோகங்களின்
சுமை தாங்கி நீ
எப்புத்தகத்திலும் அச்சிலில்லை
உன்னிடம் நான் கற்றவைகள்
உன்னுள் உருகிப்போனது
என் கனவுகள்
உடல் கூடாய் உலவுகிறேன்
உன் நினைவில்!
உன் இனிய கனவுகளை
என்னால் நிஜமாக்க முடியவில்லை
இருப்பினும் நீயும் உன்
நினைவுகளும் என்னுடன் அம்மா.
உன் உள்ளம் வேண்டி
நிற்கிறேன் தாயே!– இன்றும்
அறுபது வயதுக் குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்தேடி!
நான்!
பாமரத் தாய் ஒருத்தி
பாடி முடித்த கவிதை நான்!
எல்லாச் சுமைகளையும்
வண்ணங்களாக்கி
சிறகில் சுமந்து
தேன் தின்று திரியும்
பட்டாம்பூச்சி நான்!
என் சிறகுகளே இன்று
சிலுவைகளாயிப்போனது.-நான்
வாழும் காலம் சிறிதெனினும்
சுகம் என்றும் இல்லை.இல்லை.!
பாடித்திறிந்தப் பறவை அன்று!
இன்றோ முடங்கிப் போன
சடமாய்ப் போனேன்.
சிறகுகளில் எனைச் சுமந்து
பறந்தவள் இன்று
சருகுகளாய் உறங்கிப் போனாள்.!
உறவுகள் அரிதாரத்தில்
உலா வரும் காலமிது!
உண்மை முகங்களை
எங்கே தேடுவேன்??
உறவுகளே! பொய் முகங்களின்
திரையை திறந்து வாருங்கள்
அகங்களாள் அளாவிடுவோம்-அன்பாய்…..
வரங்களும் சாபங்களாகும் வேளை இது
நான் நலமாய் வாழ வழி
ஒன்று சொல்லுங்களேன்!
குலசை சுல்தான்
பிராயச்சித்தம் தேடி…
பிராயச்சித்தம் தேடி…
இவர்கள் தம்
மனைவியரிடமே
பகல் கொள்ளையடித்த
திருடர்கள்
பின்பு கூசாமல்
அவள் முகம் பார்க்கும்
வேடதாரிகள்..
வெட்கமின்றிக்
கேட்டு வாங்கிய
பிச்சைக் காரர்கள்..
ஏழைத் தந்தையின்
துன்பத்தில் சிரிக்கும்
இம்சை அரக்கர்கள்.
மாற்றான் பணத்தில்
வித்தை காட்டும்
போலிகள்
சொந்தக் காலில்
நிற்கத் தெறியாத
கோழைகள்
ஆணினத்துக்கே
இழுக்காய்ப் போன அழுக்குகள்
பாவி மகள் படுக்கைக்கும்
விலை கொடுத்தாள்._ அங்கே
ஆண் வேசியாய் அவன் இருந்தான்.
தவறுகள் திருத்திக் கொள்ளத்தான்
திரும்ப தொடர அல்ல!
பிராயச்சித்தம் தேடிக்
கொண்டவன் நான்
பிறப்பால் என் வழித்தோன்றல்
மணமுடித்தான் மஹர் கொடுத்து.
திசை மாறிய பறவைகளே
திரும்ப வாருங்கள் கூட்டுக்கு
எப்போது வருவீர்கள் நீங்கள்?????
வேண்டும்…..
வேண்டும்…..
கவிதை ஒன்று வேண்டும் – தமிழ்க்
கவிதை ஒன்று வேண்டும் – நான்
செவிமடுத்து மனம் சிலிர்க்கும் வண்ணமொரு
சின்ன கவிதை வேண்டும்!
சோலை ஒன்று வேண்டும் – அங்கு
தூய தென்றல் வேண்டும் – இளங்
காலை தோறும் தமிழ்ப்பண் வழங்கி
எனைக் கருணை செய்ய வேண்டும்!
குலசை சுல்தான்
நான் யார்? நான் யார்?
நான் யார்? நான் யார்?
எனக்குக் கீழே இருப்பவர்கள் மட்டுமே
என்மேல் பொறாமைப்பட முடியும்,
அல்லது என்னை வெறுக்க முடியும்.
என்னை யாரும் வெறுத்ததுமில்லை,
என்மேல் யாரும் பொறாமைப்பட்டதுமில்லை.
நான் யாருக்கும் மேலே இல்லை.
எனக்கு மேலே இருப்பவர்கள் மட்டுமே
என்னைப் புகழ முடியும்,அல்லது இகழ முடியும்.
என்னை யாரும் புகழ்ந்ததுமில்லை,
என்னை யாரும் இகழ்ந்ததுமில்லை.
நான் யாருக்கும் கீழே இல்லை.
அவன் ஒருவனைத் தவிர.அகிலத்தின்
ஏகத் தலைவன் அவனைத் தவிர!
கனவுகளும் ஆசைகளும் இல்லாத
மிகச் சிறந்த மனிதனாக
இருப்பதைக் காட்டிலும் நான்
கனவுகளும்அவற்றை அடைய
ஆசைகளும் கொண்ட மிகச்
சாதாரண மனிதனாக இருப்பேன்.
ஒவ்வொரு மனிதனும் இரண்டு மனிதர்கள்.
ஒருவன் இருளில் விழித்திருக்கிறான்.
இன்னொருவன் வெளிச்சத்தில் உறங்குகிறான்.
வீழ்வதில் வெட்கப்படாதவன் -மீண்டு
எழுவதில் வெற்றி காண்பவன்.- தன்
தனித்துவத்தை இழக்காதவன் – தனி
மனித நேயத்தை காப்பவன்.
அலைகளின் பேரோசையில்
அமைதியைத் தேடுபவன்.
அழகினிலும் அழகை ரசிப்பவன்.
நாத்திகனாய் இரு(ற)ந்தவன் – இன்று
நாயனை நம்புபவன்..
படைப்பினங்களை வணங்காமல்
படைத்தவனை தொழுபவன்.
தாயை நேசிப்பவன் -தமிழை சுவாசிப்பவன்
உயிர் உறவு தந்த பெற்றவரை மதிப்பவன்
உறவாட வந்த இவ்வுலகை மறப்பவன் -மறு
உலக வாழ்வை எதிர் பார்ப்பவன்.
கவிச் சோலையில் கானம் பாடுபவன்
காற்றினிலும் கவிதைத் தேடுபவன்.
உன்னால் முடியும் என்பதில் உயிரானவன்.
நான் கற்றவைகள் சில இதோ
உலகம் என்னை புடம் போட்டது- விலையாய்
உயிரைக் கேட்பது. விந்தை தான்.
வஞ்சனை எப்போதாவது
வெற்றி பெறுகிறது ஆனால்
எப்போதும்
தற்கொலை செய்து கொள்கிறது.
எங்கெல்லாம் நீ உன் சிந்தனைகளை
திருப்புகின்றாயோ அங்கெல்லாம் உன்
தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கு
நீ விரும்புகின்றாய்…..
குலசை சுல்தான்
எது கவிதை . .
எது கவிதை . .
வீசாத காற்றாக, அடிக்காத அலையாக,
வீழாத அருவியாக,
மெதுவாக, மிக மென்மையாக,
வருந்தாது சுமக்கும் சுமையாக!
இப்போதெல்லாம் அது,
சூறாவளியாக,
ஆளளவு அலையாக,
நயாகரா நீர் வீழ்ச்சியாக,
வலுவாக, மிக வன்மையாக,
வருந்திச் சுமக்கும் சுமையாக!
எத்தனை தடவைகள் . .
காலையில் நினைவில் வரா
நல்ல கனவு போல . .
கவிதையும் வரும் வேகத்தில்
ம(i)றந்து போயிருக்கும்!
நான் பல இரவுகளில்
பலமுறை தொலைத்திருக்கிறேன்!
எனது கவிதைகளை!
கண்ணயரும் கடைசி விநாடிகளில்
தோன்றும் பல அற்புத வரிகள்
காலையில் பலமுறை முயன்றும்
நினைவுக்கு வராது போயிருக்கின்றன!
கவிதை என்பது
வெளியில் சொல்லப்பட்ட கருத்து அல்ல.
ரத்தம் வழியும் காயத்திலிருந்தோ
புன்னகை சிந்தும் வாயிலிருந்தோ
பிறக்கும் பாடல் அது.
குலசை சுல்தான்
ஹைக்கூ கவிதை
தக தக கடவுள்
கொழு கொழு அர்ச்சகர்
ஒட்டி உலர்ந்த ஏழை பக்தர்கள்.
விண் தொடும் கோபுரம்
விலையுயர் கடவுள்கள்
வாசலில் கும்பலாய் பிச்சைக் காரர்கள்.
செருப்பு மட்டுமல்ல
தைத்தவனும் வெளியே.
கருணைக் கடவுளின் ஆலயம்.
வெள்ளையாய் மாறியது கருப்பு
கோயில் உண்டியலில்
கொட்டிய பணம்
அறிவில் பிறந்தும்
அறிவைக் கெடுக்கிறது
தொலைக்காட்சி.
அறிவியல் குதிரை
மூடை மூடையாய்
மூட நம்பிக்கைகள்
பயணம்
தொலைக்காட்சி.
விழிப்புற் று
விடுவார்களோ மக்கள்?
கவலை வேண்டாம்
யாமிருக்க பயமேன்?
தொலைக்காட்சி.
நோக்கம்
காக்கைக் கூட்டங்கள்
பேரணிகள், மாநாடுகள்
எல்லாமே வயிற்றுக்காக.
கலப்பு மணம்
எல்லாச் சாமிகளும்
கைவிட்டன
அவளுக்கும் திருமணம் நடந்தது
வரதட்சணை கேட்டு
வற்புறுத்தும் மிருகத்தோடு.
அமாவாசை
நிலவைத் தொலைத்த வானத்துக்கு
இயற்கைக் காட்டும் கருப்புக் கொடி
அமாவாசை
மனதோடுதான் நான் பேசுவேன்…
என் இதயத்திற்கோர் இரங்கல் கவிதையிது….
என் இதயமே ! நீ
ஏன் அழுகிறாய் ?
என் பலவீனங்கள் நீ
அறியாயோ ?
உன் விழிகளின் கூர்மை
காயப் படுத்தும்
என்னை ஊடுருவி !
காரணம் என் தவறுகள்
தெரியா தெனக்கு !
எதுவரை நீடிக்கும்
உன் அழுகை ?
நின் கனவுகள்,
மெய்ப்படும் வரையா?
ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம்
இதயங்கள் சொல்லும் !
மனமே என்னுடன்
ஏன் ஊடல்?
உனை அறுவை
சிகிட்சை செய்ததாலா?
நம்மை இணைக்க
இறைவன் செய்த
விளையாட்டு அது!
பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று !
ஏன் ஈர்ப்பு அவைமேல்
இன்று இனித்திடும் போது ?
நான் ஒன்று சொல்ல
வந்தேன் !
நானதைச் சொல்ல வேண்டும்
இப்போது !
மரணம் என்னைத் தடுத்தால்
நாளைக்கு
உரைக்கப்படும் அது !
ஏனெனில்
நீளும் வரலாற்றில்
வருங் காலம்
ஒருபோதும்
மறைப்பதில்லை
ரகசியத்தை !
என் மனமே உன் வண்ணக்
கனவுகள் எண்ணச்
சிதறல்களாக வாழ்வினில்
கோலம் போட்டது சூனியமாய்!
இப் பிரபஞ்ச மேடையில்
நான் வேரா?..விழுதா?
புரியாத புதிர் நான்!
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !
அழகிய மரணமே !
வா! வந்து என்
தோள்களின் சுமையை
இறக்கி விடு!
களைத்துப் போனேன்
அவற்றின்
கனத்தைச் சுமந்து !
அழுவதற்கு கூட
கண்ணீரில்லை!
இருந்தாலும்
அதை மட்டும்
விட்டு விட்டது
என் உறவுகள்!!
சிலுவைகளை சுமக்கும்
என் தோள்களுக்கு-
சிறிது ஓய்வு வேண்டும்.
சிறகுகளைத் தா இறைவா!
சிட்டாக பறந்து
வருவேன் உன்னிடம்!
உறவுகளிடம் உள்ளங்களைத்
தேடினேன்? கானல் நீரினில்
முத்தெடுக்க முனைந்தவன் போல்!
எனது ஆசைகள்…
ஊமையின் கனவுகள்.
குருடனின் ஓவியம்..
செவிடனின் சங்கீதம்…
இக் கவிதையின் தாக்கம்
உண்டா உங்களிடம்?
விழி கடையோரம்
கண்ணீர் பூக்களா?
உறவுகளால் அர்ச்சிக்கப் –
பட்டவர் நீங்கள்!
அர்ச்சனைகள் ….
அக்னிப் பூக்களால்!!!
இனிய மரணமே ! வா
வந்து எனை
உறவுகள் இல்லா
உலகத்திற்கு
அழைத்துச் செல்!
அங்கேயாவது
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கிறேன்!
இறைவன் நாடினால்???!
குலசை சுல்தான்