கண்ணீர் பூக்களால் ஓர் கவிதாஞ்சலி

 

பாரதி இல்லம் விட்டு

பறந்து போனது பாசப் பறவை!

படைத்தவன் மடி தேடி!

மஹாராணி உன் ஊர்க்கோலம்…

மல்லிகைத் தேர்க் கோலம்..

காணாமல் போனவன் நான்!

அரை நூற்றாண்டு ஆகியும் கூட

நேற்று வாழ்ந்தாற் போல்

நெஞ்சில் சில நினைவுகள்

நிழலாடுகின்றன இன்றும்….

 

உயிர் தந்த உறவே!.

உன் பெருமை ஒரு வரியில்

சொல்ல இயலுமோ!

என் கவியில் உனை வடிக்க

வார்த்தைகள் இல்லை என்னிடம்!

 

கவிக்கு இலக்கணம் பொய்யுரை!-

என் கவிதாஞ்சலி

இலக்கணம் மறந்த மெய்யுரை!

 

தாய் எனும் மந்திரச் சொல்

இல்லையெனில்

என்றும் என் கவிதை சூனியந்தான்!

 

எந்த தாய் மறைந்தாலும்– என்

இதயம் அழுகிறதே?.ஆம்

எல்லாமே என் தாய் தானே!

 

காணிக்கை கேட்காத

தெய்வம் நீ!

உன் தோட்டத்தில் தான்

எத்தனை மலர்கள்?

எத்தனை நிறங்கள்?

எத்தனை குணங்கள்!

 

தாய் போல் அரவணைக்க

தரணியில் யாருண்டு!

தடைக்கல்லில் இடறுகையில்

படிக்கல்லாய் நீ இருந்தாய்!

 

’அ’ படிக்கும் முன்னே

அம்மாவை படித்தவன் நான்!

உயிர் எழுத்தின்

உண்மைப் பெயர் அம்மா!!

அம்மாவின் கருவறை-நான்

இன்னொரு முறை வாழத்-

துடிக்கும் புனித அறை!

 

என் நினைவில் வந்து வந்து

போகுதம்மா உன் முகம்!

இமைகளில் சிறை பிடிக்க

இயலவில்லை-சிதறி

விழுகிறது என் கண்ணீர்!

 

தும்பை பூ சேலை கட்டி

தூயவளே நீ படைத்த

அமுதுண்டு மகிழ்ந்தவன் நான்!

 

பாசமெனும் ஒற்றை சொல்லுக்காக

பல படிகள் ஏறி தோற்றவன் நான்!

என் நிலை அறிந்து ஆறுதல் கூற

யாருமில்லை இன்று எனக்கு!!

 

மரணம் ஓர் மாயச் சொல்!

மரணத்தை படித்தவன் நான்!

மரணம்…

காலத்தின் ஞானம்!

தூக்கத்தின் தொடர்ச்சி…

மரணம்…

ஒரு வழிப் பாதை…

முக்காலம் சொல்லித் தரும்

சமதர்ம தத்துவம்!

மரணம்…

மன்னிக்க முடியாத

இயற்கையின் தண்டனை..

 

இன்று நீ!!…-நாளை??

காத்திருக்கும் பட்டியலில்

நாங்கள்?? -இது

இறைவனின் நியதி!

 

சுவர்க்கத்தின் வாயினில்

துயில் கொள்ளும் அன்னையே!

காத்திரு தாயே! காத்திரு!

நிச்சயம் நான் அங்கு வருவேன்

ஏனெனில்…

தாயின் காலடியில் தான்

என் சொர்க்கம்!!

கண்ணீர் பூக்களால்

ஆயிரம் கோடி அர்ச்சனைகள்!

வேரின் பெருமையை-இனி

விழுதுகள் பேசட்டும்!

 (நண்பரின் அம்மா மறைவுக்கு எழுதியது)

அன்பு மகன்,

குலசை சுல்தான்.

 

அம்மா!

அறுபது வயதுக் குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்தேடி
உன் உயிர் தந்து
என்னுயிராகிவிட்ட தாயே !
அன்று உன்னருகிருந்து
இன்று உனையும்
இழந்து தனிமரமாய்
குளிருக்குள் உன் வடு
தேடும் பறவையானேன் !

சிறு பிள்ளை தன் தாயிழந்த
துயர் எனை வாட்டுகிறது
கோழிக் குஞ்சுகளாய்
உன்னுள் நானிருந்த
நாட்களைத் தேடுகிறேன் !
இறுதி வரை உன் முகம்
காணாது போனதற்காய்
ஏங்குகிறேன்,! .

எனக்காக உன்னலமிழந்து
எனைக்காத்த தாயே !
நீ இருக்கும் வரை எனை
அணுகா வாழ்வின் துயர்
இன்று என்னிருப்பும் கேள்வியாகி
சுமையாகிப் போனது!
என் சோகங்களின்
சுமை தாங்கி நீ

எப்புத்தகத்திலும் அச்சிலில்லை
உன்னிடம் நான் கற்றவைகள்
உன்னுள் உருகிப்போனது
என் கனவுகள்
உடல் கூடாய் உலவுகிறேன்
உன் நினைவில்!

உன் இனிய கனவுகளை
என்னால் நிஜமாக்க முடியவில்லை
இருப்பினும் நீயும் உன்
நினைவுகளும் என்னுடன் அம்மா.
உன் உள்ளம் வேண்டி
நிற்கிறேன் தாயே!– இன்றும்
அறுபது வயதுக் குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்தேடி!

வேண்டும்…..

வேண்டும்…..

கவிதை ஒன்று வேண்டும் – தமிழ்க்
கவிதை ஒன்று வேண்டும் – நான்
செவிமடுத்து மனம் சிலிர்க்கும் வண்ணமொரு
சின்ன கவிதை வேண்டும்!

சோலை ஒன்று வேண்டும் – அங்கு
தூய தென்றல் வேண்டும் – இளங்
காலை தோறும் தமிழ்ப்பண் வழங்கி

எனைக் கருணை செய்ய வேண்டும்!

குலசை சுல்தான்

நான் யார்? நான் யார்?

நான் யார்? நான் யார்?
எனக்குக் கீழே இருப்பவர்கள் மட்டுமே
என்மேல் பொறாமைப்பட முடியும்,
அல்லது என்னை வெறுக்க முடியும்.
என்னை யாரும் வெறுத்ததுமில்லை,
என்மேல் யாரும் பொறாமைப்பட்டதுமில்லை.
நான் யாருக்கும் மேலே இல்லை.

எனக்கு மேலே இருப்பவர்கள் மட்டுமே
என்னைப் புகழ முடியும்,அல்லது இகழ முடியும்.
என்னை யாரும் புகழ்ந்ததுமில்லை,
என்னை யாரும் இகழ்ந்ததுமில்லை.
நான் யாருக்கும் கீழே இல்லை.
அவன் ஒருவனைத் தவிர.அகிலத்தின்
ஏகத் தலைவன் அவனைத் தவிர!

கனவுகளும் ஆசைகளும் இல்லாத
மிகச் சிறந்த மனிதனாக
இருப்பதைக் காட்டிலும் நான்
கனவுகளும்அவற்றை அடைய
ஆசைகளும் கொண்ட மிகச்
சாதாரண மனிதனாக இருப்பேன்.
ஒவ்வொரு மனிதனும் இரண்டு மனிதர்கள்.
ஒருவன் இருளில் விழித்திருக்கிறான்.
இன்னொருவன் வெளிச்சத்தில் உறங்குகிறான்.

வீழ்வதில் வெட்கப்படாதவன் -மீண்டு
எழுவதில் வெற்றி காண்பவன்.- தன்
தனித்துவத்தை இழக்காதவன் – தனி
மனித நேயத்தை காப்பவன்.
அலைகளின் பேரோசையில்
அமைதியைத் தேடுபவன்.
அழகினிலும் அழகை ரசிப்பவன்.
நாத்திகனாய் இரு(ற)ந்தவன் – இன்று
நாயனை நம்புபவன்..
படைப்பினங்களை வணங்காமல்
படைத்தவனை தொழுபவன்.
தாயை நேசிப்பவன் -தமிழை சுவாசிப்பவன்

உயிர் உறவு தந்த பெற்றவரை மதிப்பவன்
உறவாட வந்த இவ்வுலகை மறப்பவன் -மறு
உலக வாழ்வை எதிர் பார்ப்பவன்.

கவிச் சோலையில் கானம் பாடுபவன்
காற்றினிலும் கவிதைத் தேடுபவன்.
உன்னால் முடியும் என்பதில் உயிரானவன்.

நான் கற்றவைகள் சில இதோ

உலகம் என்னை புடம் போட்டது- விலையாய்
உயிரைக் கேட்பது. விந்தை தான்.
வஞ்சனை எப்போதாவது
வெற்றி பெறுகிறது ஆனால்
எப்போதும்
தற்கொலை செய்து கொள்கிறது.

எங்கெல்லாம் நீ உன் சிந்தனைகளை
திருப்புகின்றாயோ அங்கெல்லாம் உன்
தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கு
நீ விரும்புகின்றாய்…..

குலசை சுல்தான்

ஹைக்கூ கவிதை

தக தக கடவுள்
கொழு கொழு அர்ச்சகர்
ஒட்டி உலர்ந்த ஏழை பக்தர்கள்.

விண் தொடும் கோபுரம்
விலையுயர் கடவுள்கள்
வாசலில் கும்பலாய் பிச்சைக் காரர்கள்.

 

செருப்பு மட்டுமல்ல
தைத்தவனும் வெளியே.
கருணைக் கடவுளின் ஆலயம்.

 

வெள்ளையாய் மாறியது கருப்பு
கோயில் உண்டியலில்
கொட்டிய பணம்

 

அறிவில் பிறந்தும்
அறிவைக் கெடுக்கிறது
தொலைக்காட்சி.
அறிவியல் குதிரை
மூடை மூடையாய்
மூட நம்பிக்கைகள்
பயணம்
தொலைக்காட்சி.

விழிப்புற் று
விடுவார்களோ மக்கள்?
கவலை வேண்டாம்
யாமிருக்க பயமேன்?
தொலைக்காட்சி.
நோக்கம்
காக்கைக் கூட்டங்கள்
பேரணிகள், மாநாடுகள்
எல்லாமே வயிற்றுக்காக.

கலப்பு மணம்

எல்லாச் சாமிகளும்
கைவிட்டன
அவளுக்கும் திருமணம் நடந்தது
வரதட்சணை கேட்டு
வற்புறுத்தும் மிருகத்தோடு.

அமாவாசை

நிலவைத் தொலைத்த வானத்துக்கு

இயற்கைக் காட்டும் கருப்புக் கொடி
அமாவாசை

மனதோடுதான் நான் பேசுவேன்…

  என் இதயத்திற்கோர் இரங்கல் கவிதையிது….

என் இதயமே ! நீ
ஏன் அழுகிறாய் ?
என் பலவீனங்கள் நீ
அறியாயோ ?
உன் விழிகளின் கூர்மை
காயப் படுத்தும்
என்னை ஊடுருவி !
காரணம் என் தவறுகள்
தெரியா தெனக்கு !

எதுவரை நீடிக்கும்
உன் அழுகை ?
நின் கனவுகள்,
மெய்ப்படும் வரையா?

ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம்
இதயங்கள் சொல்லும் !

மனமே என்னுடன்
ஏன் ஊடல்?
உனை அறுவை
சிகிட்சை செய்ததாலா?
நம்மை இணைக்க
இறைவன் செய்த
விளையாட்டு அது!

பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று !
ஏன் ஈர்ப்பு அவைமேல்
இன்று இனித்திடும் போது ?

நான் ஒன்று சொல்ல
வந்தேன் !
நானதைச் சொல்ல வேண்டும்
இப்போது !
மரணம் என்னைத் தடுத்தால்
நாளைக்கு
உரைக்கப்படும் அது !
ஏனெனில்
நீளும் வரலாற்றில்
வருங் காலம்
ஒருபோதும்
மறைப்பதில்லை
ரகசியத்தை !

என் மனமே உன் வண்ணக்
கனவுகள் எண்ணச்
சிதறல்களாக வாழ்வினில்
கோலம் போட்டது சூனியமாய்!

இப் பிரபஞ்ச மேடையில்
நான் வேரா?..விழுதா?
புரியாத புதிர் நான்!

மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !

அழகிய மரணமே !
வா! வந்து என்
தோள்களின் சுமையை
இறக்கி விடு!
களைத்துப் போனேன்
அவற்றின்
கனத்தைச் சுமந்து !

அழுவதற்கு கூட
கண்ணீரில்லை!
இருந்தாலும்
அதை மட்டும்
விட்டு விட்டது
என் உறவுகள்!!

சிலுவைகளை சுமக்கும்
என் தோள்களுக்கு-
சிறிது ஓய்வு வேண்டும்.
சிறகுகளைத் தா இறைவா!
சிட்டாக பறந்து
வருவேன் உன்னிடம்!

உறவுகளிடம் உள்ளங்களைத்
தேடினேன்? கானல் நீரினில்
முத்தெடுக்க முனைந்தவன் போல்!

எனது ஆசைகள்…
ஊமையின் கனவுகள்.
குருடனின் ஓவியம்..
செவிடனின் சங்கீதம்…

இக் கவிதையின் தாக்கம்
உண்டா உங்களிடம்?
விழி கடையோரம்
கண்ணீர் பூக்களா?
உறவுகளால் அர்ச்சிக்கப் –
பட்டவர் நீங்கள்!
அர்ச்சனைகள் ….
அக்னிப் பூக்களால்!!!

இனிய மரணமே ! வா
வந்து எனை
உறவுகள் இல்லா
உலகத்திற்கு
அழைத்துச் செல்!
அங்கேயாவது
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கிறேன்!

இறைவன் நாடினால்???!

குலசை சுல்தான்