கூவத்தின் கதை!

 

 ‘கூவத்தைப் பார்த்தீங்களா… எப்படி சுத்தமாகிடுச்சு. இதைச் சுத்தப்படுத்தப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கப்போறதா சொன்னாங்க. ஆனா ஒரு பைசா செலவு இல்லாம மழையே சுத்தப்படுத்திட்டுப் போயிடுச்சு’ – பாலங்களின் மேல் இருந்து கூவம் நதியைப் பார்த்து பிரமிக்கிறார்கள் சென்னைவாசிகள்.

இந்த மழை வெள்ளம், கூவம் கரையோரத்தின் பல்லாயிரம் மக்களைப் பரிதவிக்கவிட்டிருக்கிறது. பல உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது. நதியின் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊரெல்லாம் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. ஆனால், இதன் மறுபக்கமும் இருக்கிறது. கூவம் நதியில் தண்ணீர், அதன் உண்மையான நிறத்துடன் பாய்ந்துசெல்லும் அதிசயத்தை இந்தத் தலைமுறை இப்போதுதான் பார்க்கிறது. கறுப்பு நிறச் சாக்கடை இல்லை; துர்நாற்றம் நிரம்பிய கழிவுகள் இல்லை. ஒரு பாவத்தைப்போல எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு, கூவம் மறுபிறப்பு எடுத்திருக்கிறது. அதற்காக தாமிரபரணி தண்ணீர்போலத் தூய்மையாக ஓடுகிறது எனப் பொருள் இல்லை. ஆனால் கூவத்தில் இப்போதுதான் ஒரு நதியின் சாயல் பளிச்சிடுகிறது.

கூவம் மட்டுமல்ல… அடையாறும் அதன் அசல் நிறத்தை மீட்டு எடுத்திருக்கிறது. சென்னை நகருக்குள் பாய்ந்தோடும் பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகிய மற்ற நீர்வழித்தடங் களிலும் பாய்ந்து ஓடுகிறது நீர். இது எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பதுதான் இப்போது நம் முன்னே இருக்கும் கேள்வி. ‘குறைந்தபட்சம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்த நிலைமை நீடித்தாலே அதிசயம். அதற்குள் மறுபடியும் சாக்கடையையும் கழிவு நீரையும் திறந்துவிட்டு பழைய மாதிரி மாற்றிவிடுவார்கள்’ என்பதுதான் பெரும்பாலானோரின் அச்சம்.

கூவம் நதியின் பிறப்பிடம் தொடங்கி, அது கடலில் கலக்குமிடம் வரையிலும் முற்றிலுமாகத் தூய்மையாகி இருக்கிறது. எந்தெந்த ஆட்சியாளர்களோ திட்டம் போட்டும், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் செய்ய முடியாத வேலையை இயற்கை ஓரிரு நாட்களில் செய்து முடித்துவிட்டது. இதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போது நமக்கு முன் உள்ள சவால்!

Continue reading

Advertisements