நம்பிக்கை திவ்யா!

66

‘‘பிறக்கும்போதே பார்வை இல்லை

‘‘இங்கு 100% நிறையோட யாரும் பிறக்கிறதில்ல. ஆரோக்கியம், அறிவு, குணம்னு எல்லோருக்கும் ஒரு குறைபாடு இருக்கு. அந்த வகையில் எனக்குப் பார்வைக் குறைபாடு. அதை விதினு நோகாம நம்பிக்கையோட நடை போட்டேன். இன்னிக்கு வெற்றிநடை போடுறேன்!’’

– மெலிதான குரலில் தன் வலிமை சொல்கிறார், சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியை திவ்யா!

Continue reading

இப்படியும் ஒரு பெண்ணா?

64

8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் கற்பழிக்கப்படுகிறார், சுனிதா கிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 15. வாழ்க்கை போச்சே என்று இடிந்து போய் முடங்கி விடவில்லை. அன்றே முடிவெடுத்தார்,

தன்னை போல் பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், பெண்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று. களத்தில் இறங்கவும் செய்தார்.
மாலினி என்கிற 15 வயது சிறுமியை, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், விபச்சார விடுதியில் விற்றுவிடுகிறார். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50,000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல். கேட்கவே மனம் பதறுகிறது.
Continue reading

பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்

மருத்துவர் ஜெயசிறீ கஜராஜ் :

நான் சுமார் நாற்பது மணி நேரம் பிரசவ வலியால் அவஸ்தைப்பட்டேன்…’ ‘ச்சே… உனக்கு அவ்ளோதானா… நான் அம்பத்திரண்டு மணி நேரம்…’ இப்படி, தங்கள் பிரசவ அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் பெண்கள் நிறைய. பிரசவ வலி என்பது நாற்பது ஐம்பது மணி நேரமெல்லாம் வரும் விஷயமல்ல. லேசாக எடுக்கும் வலி அல்லது பிரசவ வலி போல் தோன்றக்கூடிய பொய் வலிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் மட்டும்தான், மேலே சொன்ன ஐம்பது மணி நேர அவஸ்தை எல்லாம் சாத்தியம்..

True Labour Pain – அதாவது உண்மையான பிரசவ வலியை நாங்கள் கணக்கெடுக்கும் விதம் வேறு. கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு Cervix (சர்விக்ஸ்) என்று பெயர். இந்த சர்விக்ஸ் மூன்று சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடையும்போதுதான் நாங்கள் அதை பிரசவம் தொடங்கிவிட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்வோம் (Active Labour).

பிரசவத்தை எதிர்கொள்ள அதை நாங்கள் மூன்று முக்கிய கட்டங்களாகப் பிரித்துக் கொள்வோம்.

முதல்கட்டம்: உண்மையான பிரசவ வலி தொடங்கி சர்விக்ஸ் பத்து சென்டிமீட்டர் (முழுவதுமாக விரிவடையும் கட்டம்) அளவுக்கு விரிவடையும் வரையுள்ள கட்டம்தான் முதல்.

இரண்டாம் கட்டம்: சர்விக்ஸ் முழுவதுமாக விரிவடைந்து அதன் வழியே குழந்தை முழுவதுமாக வெளிவருவது வரையிலான பகுதியை இரண்டாம் கட்டம் என்கிறோம்.

மூன்றாம் கட்டம்: குழந்தை வெளி வந்ததோடு விஷயம் முடிவடைவதில்லை. அம்மா உடலிலிருந்து நஞ்சுக் கொடி முழுவதுமாக வெளியேறுவதுதான் அதிமுக்கியம். இப்படி நஞ்சு வெளிவருவது வரையான பகுதியை மூன்றாவது கட்டமாகப் பிரித்துக் கொள்வோம்.

இந்த மூன்று கட்டங்களையும் கவனமாகக் கண்காணிக்க ‘பார்ட்டோகிராம்’ என்கிற ஒரு ரெகார்டை நாங்கள் வைத்திருப்போம். ரெக்கார்டு என்றால் பெரிதாக நினைத்துவிடாதீர்கள். அது வெறும் பேப்பர்தான். என்றாலும், இதுதான் பிரசவத்தின்போது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் தொடங்கி, அவர் எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், எப்போது வலி தொடங்கியது, அனுமதிக்கப்பட்ட போது குழந்தையின் நிலை எப்படி இருந்தது, அதன்பிறகு குழந்தை வெளிவர எந்தெந்தக் கட்டங்களை கடந்துள்ளது போன்ற எல்லா தகவல்களையும் அதில் எழுதி வைத்திருப்போம். இன்னும் சில தகவல்களை கிராப் படமாகப் போட்டும் கண்காணிப்போம்.

எதற்கு இந்த பார்ட்டோகிராம் என்றால், சிலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே பிரசவமாகலாம். இன்னும் சிலருக்கு சில மணிநேரம் கழித்தும் பிரசவமாகலாம். பேஷண்ட் ஒருவராக இருந்தாலும் அவரை வந்து பார்க்கும் மருத்துவர்கள், நர்ஸ் ஆகியோர் அவ்வப்போது டியூட்டி மாறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி மாறி மாறி வருபவர்களுக்கு, சம்பந்தப்பட்ட பெண் பற்றிய தகவல்கள் உடனே தெரியத்தான் இந்த பார்ட்டோகிராம் பயன்படுகிறது. அதுதவிர பிரசவத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் அம்மா, குழந்தை என்ற இருவரைப் பற்றிய அத்தனை தகவல்களும் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு ஒரு பார்வையிலேயே கிடைத்துவிடுவதால் இது மிகப் பயனுள்ள விஷயமாகக் கருதப்படுகிறது.

பிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது… உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை.. லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல குழந்தை ரிலீஸ் ஆகும் சந்தோஷ தருணம் அது. சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வெறுவிதமாகவும் இது அமையும்.

பிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும்.

முதல் பிரசவத்தின்போது மணிக்கு ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு சர்விக்ஸ் விரிவடையத் தொடங்கும். அதுவே இரண்டாம், மூன்றாம் பிரசவங்களின் போது மணிக்கு 1.5_2 சென்டிமீட்டர் அளவுக்கு திறக்கும். இப்படி ஆவதுதான் நார்மல். இப்படி ஆனால்தான் பிரசவம் இயல்பாக நடந்துகொண்டிருப்பதாகவும் நாங்கள் கொள்வோம்.

ஏன், முதல் பிரசவத்துக்கு ஒரு சென்டி மீட்டராகவும் இரண்டாம், மூன்றாம் பிரசவத்துக்கு சற்றே அதிகப்படியாகவும் சர்விக்ஸ் விரிவடைகிறது என்று கேட்கிறீர்களா? முதல் பிரசவத்தின்போது சர்விக்ஸ் சற்றே இறுக்கமாக இருக்கும். காரணம், அதற்கு இது புது அனுபவமில்லையா… அதனால்தான். அதன்பிறகு அது சற்றே மிருதுவாகி விடுவதால்தான் அதற்கடுத்த பிரசவங்களின்போது அதனால், சற்றே அதிகப்படியாக விரிவடைய முடிகிறது.

கர்ப்பப்பை சரியானபடி இறுக்கமடைந்தால் (Contraction) மட்டும்தான் சர்விக்ஸ் இப்படி விரிவடைய முடியும். கர்ப்பப்பை சரியாக இறுக்கமடைகிறது என்று எப்படிச் சொல்வோம் என்று கேட்டால், அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. பத்து நிமிடங்களுக்கு மூன்று முறையாவது இறுக்கமடைந்தால்தான் கர்ப்பப்பை நார்மலாகச் செயல்படுகிறது என்று நாங்கள் கணக்கில் கொள்வோம். சாதாரணமாகவே இயற்கையாக வரவேண்டிய விஷயம் இது. இது சரியானபடி நடக்கிறதா என்று, நாங்கள் உண்மையான பிரசவவலி தொடங்கியதிலிருந்து நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பைக்குள் கைவிட்டுப் பரிசோதிப்போம். சர்விக்ஸ் 5_6 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடையத் தொடங்கியதுமே, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரமாக உள்புற பரிசோதனைகள் செய்வோம்.

இப்படி கையை உள்புறமாக விட்டுப் பரிசோதிக்கும்போது, வெளிப்புறமாக செய்யப்படும் பரிசோதனையைவிட பல கூடுதல் தகவல்கள் நமக்குக் கிடைக்கும். அதன்மூலம் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது மற்றும் குழந்தையின் தலை எந்த அளவுக்கு தாயின் இடுப்பெலும்புப் பகுதியில் இறங்கியிருக்கிறது போன்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கிறது. இந்த சமயத்தில் தாயின் வயிற்றை வெளிப்புறமாகத் தொட்டுப் பார்த்தால், குழந்தையின் தலை இன்னும் தாயின் வயிற்றுக்குள் எந்தளவுக்கு உள்ளது என்கிற விஷயமும் தெரியவரும். இதையெல்லாம் தொடர்ந்து கண்காணித்து, எல்லாமே இயல்பாக நடந்தேறினால், இந்த சமயத்தில், இத்தனை மணி நேரத்துக்குள் பிரசவமாகிவிடும் என்று எங்களால் ஓரளவுக்கு முடிவு செய்ய முடியும்.

எல்லாமே இயல்பாகவே நடந்தாலும் சிலருக்கு நேரத்தோடு பனிக்குடம் உடையாமல் தாமதப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் காத்திருந்து பார்ப்போம். அது தானாகவே உடையாமல் போனால், நாங்களாகவே அதை செயற்கையாக உடையச் செய்துவிடுவோம். இதை மருத்துவரீதியாக Artificial Rupture of Membranes என்போம். இப்படி பனிக்குடம் உடைந்தால்தான் குழந்தை வேகமாகப் பிரசவமாகும்.

பனிக்குடம் உடையும்போது அதிலுள்ள நீர் வெளிவரும். அதை ‘Liquor Amni’ என்று மருத்துவரீதியாக அழைக்கிறோம். இந்த நீர் நார்மலாகத் தண்ணீர் போல எந்தவித நிறமும் இன்றி இருக்கும். இப்படித்தான் இருக்கவும் வேண்டும். ஆனால், சில சமயம் இந்த நீர் பச்சை, மஞ்சள் கலந்த ஒரு நிறமாக வெளிவரும். இது சாதாரணமான விஷயமல்ல… தாயின் வயிற்றுக்குள்ளேயே குழந்தை மலம் கழித்துவிட்டால், இப்படி பனிக்குட நீர் நிறம் மாறி வரும். தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் உடலிலிருந்து இப்படி வெளியேறும் மலத்துக்கு ‘Meconium’ என்று பெயர். குழந்தை இப்படி தாயின் உடலுக்குள்ளேயே மலம் கழிப்பதன் மூலம் ‘நான் உள்ளே சவுகரியமாக இல்லை. சீக்கிரமே வெளியேற வேண்டும்’ என்று நமக்கு உணர்த்துவதாகத்தான் இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவசரமான இந்த நிலைமையில் தாயின் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது என்று பார்ப்போம். 1_2 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடைந்த நிலையிலேயே குழந்தை கர்ப்பப்பைக்குள் மலம் கழித்திருந்தால், தாமதிக்காமல் சிசரியன் செய்யத் தயாராகிவிடுவோம். அதுவே எட்டு சென்டிமீட்டர் அளவுக்கு சர்விக்ஸ் விரிவடைந்துக் கொண்டிருக்கும் நிலையில், நார்மல் டெலிவிரிக்காக சிறிது நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரசவத்தின்போது அதிமுக்கியமான விஷயம், பாப்பாவின் தலை சரியானபடி இறங்கி வருவதுதான். இதுதான் பிரசவத்தை நார்மல் என்று கூட முடிவு செய்கிறது. பாப்பாவின் தலை உடனடியாக இல்லாமல் மெதுமெதுவாக அம்மாவின் வஜைனாவில் இறங்கி வரும். இயல்பாகவே பாப்பாவின் தலையிலுள்ள எலும்புகள் கொஞ்சம் விலகிய நிலையில்தான் இருக்கும். வஜைனாவில் இறங்கும் பாப்பாவின் தலைப்பகுதி, அங்கே சற்று இறுக்கப்படும்.

அப்போது பாப்பாவின் தலைப் பகுதியின் எலும்புகள் இறுக்கமாக ஃபிட் ஆகும். இந்த விஷயம் நார்மலாக நடந்தால்தான் பாப்பாவால் நார்மலாக வெளிவர முடியும். வெளிவந்த பிறகு பாப்பாவின் தலைப் பகுதி எலும்புகள் வழக்கம்போலவே அதே விலகிய நிலைக்கு வந்துவிடும்.

இந்த விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே CTG (Cardio Tocograph, இதற்கு Electronic Foetal Heart Monitoring என்று இன்னொரு பெயரும் உண்டு) என்கிற ஒரு கருவி வைத்து பாப்பாவின் இதயத் துடிப்பு, அம்மாவின் கர்ப்பப்பை இறுக்கமடைவது போன்ற விஷயங்களைக் கண்காணிப்போம். பெரியவர்களாகிய நம்முடைய இதயத்தின் இயக்கத்தைக் கண்காணிக்க ணி.சி.நி. கருவி பயன்படுவதுபோல, பாப்பாவின் இதயத் துடிப்பைப் பிரசவத்தின்போது கண்காணிக்க இந்தக் கருவி பயன்படுகிறது. இப்படிக் கண்காணிக்கப்படும்போது பாப்பாவின் இதயத்துடிப்பு குறைந்தால் (இது எல்லா குழந்தைகளுக்கும் நிகழ்வதில்லை. பிரச்னைக்குரிய சில பாப்பாக்களுக்கு மட்டுமே இப்படி ஆகலாம்.) அடுத்த கட்ட முடிவுகள் எடுக்க நாங்கள் தயாராகிவிடுவோம். பிரச்னைக்குரிய டெலிவிரி என்றால் அம்மாவுக்கு வலி தொடங்கியதிலிருந்தே சிஜிநி கொண்டு இருவரின் நிலையையும் தொடர்ந்து கண்காணிப்போம். பெரிய ரிஸ்கில்லாத பாப்பா என்றால், அரை மணிக்கு ஒரு தரம் சிஜிநி வைத்து கண்காணிப்போம்.

நன்றி – குமுதம்

வலியில்லாத பிரசவம்!

மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற  மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.

பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

1. குழந்தையின் எடை.
2. கருவறையில் குழந்தையின் நிலை.
3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.
4. சுருங்கும் தன்மையின் வலிமை.
5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு –

என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார் கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.

இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் ‘எபிடியூரல் டெலிவரி’ என்பது! இதில் அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் பேக்ரே ரிடம் பேசியபோது இந்த முறை பற்றி விளக்கினார்..

‘எபிடியூரல் டெலிவரி’ என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.

நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.

எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.

ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.

எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!

குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.

ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.

இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.

”இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘ என்றார் டாக்டர் பால். பக்க விளைவுகள் பற்றி கேட்டோம்.

”எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவு கள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘

தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்குமே? இதற்கான (மயக்க) மருந்துகள் சுலபமாக கிடைக்கிறதா?

”பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘

எபிடியூரல் அனெஸ்தீஸியா’ மூலம், வலி இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட மிசஸ் டோனி சொன்னார்…

”பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்!”

இந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘எபிடியூரல் அனெஸ்தீஸியா’ மட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் சிறீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது…

டாக்டர் ஸ்ரீமதி:  எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப் பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.

டாக்டர் சித்ரா:  கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.

– பவள சங்கரி
நன்றி குமுதம்