மனதோடுதான் நான் பேசுவேன்…

  என் இதயத்திற்கோர் இரங்கல் கவிதையிது….

என் இதயமே ! நீ
ஏன் அழுகிறாய் ?
என் பலவீனங்கள் நீ
அறியாயோ ?
உன் விழிகளின் கூர்மை
காயப் படுத்தும்
என்னை ஊடுருவி !
காரணம் என் தவறுகள்
தெரியா தெனக்கு !

எதுவரை நீடிக்கும்
உன் அழுகை ?
நின் கனவுகள்,
மெய்ப்படும் வரையா?

ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம்
இதயங்கள் சொல்லும் !

மனமே என்னுடன்
ஏன் ஊடல்?
உனை அறுவை
சிகிட்சை செய்ததாலா?
நம்மை இணைக்க
இறைவன் செய்த
விளையாட்டு அது!

பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று !
ஏன் ஈர்ப்பு அவைமேல்
இன்று இனித்திடும் போது ?

நான் ஒன்று சொல்ல
வந்தேன் !
நானதைச் சொல்ல வேண்டும்
இப்போது !
மரணம் என்னைத் தடுத்தால்
நாளைக்கு
உரைக்கப்படும் அது !
ஏனெனில்
நீளும் வரலாற்றில்
வருங் காலம்
ஒருபோதும்
மறைப்பதில்லை
ரகசியத்தை !

என் மனமே உன் வண்ணக்
கனவுகள் எண்ணச்
சிதறல்களாக வாழ்வினில்
கோலம் போட்டது சூனியமாய்!

இப் பிரபஞ்ச மேடையில்
நான் வேரா?..விழுதா?
புரியாத புதிர் நான்!

மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !

அழகிய மரணமே !
வா! வந்து என்
தோள்களின் சுமையை
இறக்கி விடு!
களைத்துப் போனேன்
அவற்றின்
கனத்தைச் சுமந்து !

அழுவதற்கு கூட
கண்ணீரில்லை!
இருந்தாலும்
அதை மட்டும்
விட்டு விட்டது
என் உறவுகள்!!

சிலுவைகளை சுமக்கும்
என் தோள்களுக்கு-
சிறிது ஓய்வு வேண்டும்.
சிறகுகளைத் தா இறைவா!
சிட்டாக பறந்து
வருவேன் உன்னிடம்!

உறவுகளிடம் உள்ளங்களைத்
தேடினேன்? கானல் நீரினில்
முத்தெடுக்க முனைந்தவன் போல்!

எனது ஆசைகள்…
ஊமையின் கனவுகள்.
குருடனின் ஓவியம்..
செவிடனின் சங்கீதம்…

இக் கவிதையின் தாக்கம்
உண்டா உங்களிடம்?
விழி கடையோரம்
கண்ணீர் பூக்களா?
உறவுகளால் அர்ச்சிக்கப் –
பட்டவர் நீங்கள்!
அர்ச்சனைகள் ….
அக்னிப் பூக்களால்!!!

இனிய மரணமே ! வா
வந்து எனை
உறவுகள் இல்லா
உலகத்திற்கு
அழைத்துச் செல்!
அங்கேயாவது
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கிறேன்!

இறைவன் நாடினால்???!

குலசை சுல்தான்