ஜவ்வாது மலை

 

வ்வாதுமலை. வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இந்த மலையின் மேற்கு பகுதியில் மனதுக்கு குளிச்சி தரும் ஏலகிரிமலை உள்ளது என்றால் கிழக்கு பகுதியில் மனதுக்கு குளிர்ச்சி, வரலாற்று தகவல்கள், பொது அறிவுத்தகவல்கள் புதைந்துள்ள ஒர் சுற்றுலா தலமாக ஜம்னாமத்தூர் பகுதி உள்ளது என்றால் அது மிகையில்லை. 

 

 
ஜவ்வாது மலையின் மைய பகுதியான ஜம்னாமத்தூர் திருவண்ணாமலையில் இருந்து 70கி.மீ தொலைவில் உள்ளது. போளுரில் இருந்து செல்வது ரம்மியமாக, த்ரில்லாக இருக்கும். வளைவான மலைப்பாதைகள், கொண்டை ஊசி வளைவுகள் என சூப்பராக போகலாம். சாலைகள் போடப்பட்டுள்ளதால் பேருந்து, கார், இரு சக்கர வாகனம் போன்றவற்றில் பயமில்லாமல் பயணிக்கலாம். ஜம்னாமத்தூரில் குழந்தைகளுக்கான பூங்கா உள்ளது. ஆண்டுதோறும் ஜீன் மாதத்தில் நடைபெறும் கோடைவிழாவின்போது அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதன் அருகேயுள்ள கோமுட்டேரி ஏரியில் படகு வலமும் வரலாம். 
 
பீமன் நீர்வீழ்ச்சி:
 
ஜம்னாமத்தூரிலிருந்து 3கி.மீ தொலைவு சென்றால் அழகான பீமன் நீர் வீழ்ச்சியுள்ளது. 80 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது நீர். நீர் வரும் பாதை முதல் நீர் சென்று சேரும் இடம் வரை நடந்தே செல்லலாம் எந்த தடையும் கிடையாது. ஆனந்தமாக குளிக்கலாம் எந்த அதிகாரியும் திட்டமாட்டார்கள். குடும்பத்தோடு சென்று விளையாடலாம் எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால் மழை காலம் முடிந்தபின் தான் இங்கு செல்ல வேண்டும்.  ஏன் எனில்,  அப்போது தான் அந்த அருவில் தண்ணீர் கொட்டும். அப்போது வந்தால் தான் ஆனந்தமாக ரசிக்கவோ, குளிக்கவோ முடியும். 
 

 
ஜம்னாமத்தூர் டூ பரமனந்தல் செல்லும் வழியில் மேல்பட்டு என்ற மலை கிராமம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 3050 அடி உயரம் கொண்ட பகுதியாகும். எவ்வளவு வெயில் அடித்தாலும் இங்கு மட்டும் குளிச்சியாகவே இருக்கும். கோடைகாலத்திலும் ஏசி போட்டது போலவே இருக்கும். இங்கு 1890ல் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை என்ற பெயர் கொண்ட பயணியர் விடுதியுள்ளது. இங்கு போக பாதைகள் சரியில்லாததால் இங்கு தங்க யாரும் செல்வதில்லை. தங்க விரும்புபவர்கள் திருவண்ணாமலையில் உள்ள வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று அங்கு தங்கலாம். 
 
மலையின் சில இடங்களில் நீர் மத்தி மரங்கள் உள்ளன. இந்த மரங்களை 15 பேர் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்டி பிடிக்க முடியும். அந்தளவுக்கு அதன் விட்டம் பெரியது. இந்த மரங்களில் மட்டும் தான் ஒன்றுக்கும் மேற்பட்ட அதாவது நூற்றுக்கும் அதிகமான தேன்கூடுகளை தேனிக்கள் கட்டும். 21வது கி.மீ மேல்பட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு மரம் மட்டும் சுலபமாக சென்று பார்க்கும் வகையில் உள்ளது. 
 
தமிழ்நாடு காவல்துறைக்கான கண்ட்ரோல் டவர் உள்ளது. இந்த டவர் மட்டும் பழுதானால் காவல்துறையின் ஒயர்லெஸ் செயல்பாடுகள் அத்தனையும் முடங்கிவிடும். மலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், அடி அண்ணாமலை கோயில் கட்டப்படுவதற்கு முன் கட்டப்பட்ட அண்ணாமலையார் ஆலயம் சிதலமடைந்து உள்ளது. தெற்கு பகுதியில் பர்வதமலை என்ற மலை இம்மலையை ஒட்டியுள்ளது. இங்குள்ள அம்மன கோயில் சிறப்பு வாய்ந்ததாகும். பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மலைக்கு சென்று அங்குள்ள அம்மனுக்கு அவர்களே பூஜை செய்து வணங்கிவிட்டு சூரிய உதயத்தின் போது மலையை விட்டு இறங்குகிறார்கள். 
 

 
சாமை – பேஎள்:
 
மலையில் பேஎள் என்ற எள் விளைகிறது. இதிலிருந்து கொழுப்பு சத்து இல்லாத எண்ணெய் இந்த பேஎள்ளில் இருந்து எடுக்க முடியும். இந்த எள் மழைக்காலத்திற்கு பின் விளையும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னும். அப்போது இந்த மலைப்பகுதியை வலம் வந்தால் சூரிய வெளிச்சத்தில் தங்கமாக இந்த மஞ்சள் பூக்கள் பிரகாசிக்கும். அதேபோல், மலைப்பிரதேசத்தில் மட்டுமே விளையும் சாமை என்ற தானியம் இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. இது உணவு பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. பிரபல பிஸ்கட் கம்பெனியான மேரிக்கோல்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிஸ்கட்கள் சாமையை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதேபோல் நாசிக்கில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் இந்த சாமை பயன்படுத்தப்படுகின்றன. 
 
காவனூர்:
 
ஜம்னாமத்தூரில் இருந்து 15கி.மீ தூரம் சென்றால் காவனூர் வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி மையம் இதுதான். வாரத்தில் சனிக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரை மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். உள்ளே தொலைநோக்கி கோபுரத்தில் 2 சிறிய தொலைநோக்கிகள், 4 பெரிய தொலைநோக்கிகள் உள்ளன. சிறியதில் மட்டும் பார்வையாளர்கள் பார்க்க முடியும். வானத்தில் உள்ள கோள்களை காணலாம் ஒவ்வொரு பார்வையாளருக்கும் சில நிமிட நேர அனுமதி மட்டுமே. 
 
இந்தியாவில் வானியல் படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்து வானியல் ஆய்வு செய்கின்றனர். இது இந்திய வானியல் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. 
 

 
குள்ளர் வீடுகள்:
 
ஜம்னாமத்தூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் பட்டறைக்காடு என்ற பகுதியுள்ளது. அங்கு செல்ல இரண்டு குன்றுகளை ஏறி இறங்க வேண்டும். சில நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அந்த குன்றில் நூற்றுக்கணக்கான நான்கடி உயரம், 7 அடி அகலம் கொண்ட கருங்கற்களை கொண்டு அமைக்கப்பட்ட அறைகளை காணலாம். இங்கு 3 அடி உயர குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வாலியர்கள் என்று அப்பகுதி மக்கள் பெயர் வைத்து பேசுகின்றனர். 
 
அமர்தி நீர்வீழ்ச்சி விலங்கியல் பூங்கா:
 
ஜம்னாமத்தூரில் இருந்து அமிர்திக்கு செல்லலாம். 32வது கி.மீட்டரில் உள்ளது அமிர்தி. இங்கு நீர் வீழ்ச்சியும், விலங்கியல் பூங்காவும் உள்ளது. நாம் சென்றிருந்த நேரம் வேலூர் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் ஜோடி ஜோடியாக வந்திருந்தனர். வார நாட்களில் குடும்பத்துடன் பலர் வருகின்றனர் என்றனர் அங்கிருந்த ஊழியர்கள். 
 
இப்பகுதிகளில் இடம் வாங்குவது, விற்பது மலைவாசிகளுக்குள் மட்டுமே என்பதால் வெளிநபர்கள் யாரும் அங்கு வீடு, விடுதிகள் கட்ட முடிவதில்லை. அதனால் அது ஒரு சிறு கிராமமாக தான் ஜம்னாமத்தூர் உள்ளது. ஒரே ஒரு அரசினர் விடுதி உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. இரவு தங்க வேண்டும் என்றால் முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு சென்றால் சிறப்பு. இல்லையேல் திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் தங்கிவிட்டு செல்லலாம். 
 
சாதாரண சின்ன உணவு விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கு அசைவ உணவு அற்புதம். அசல் தேன் இங்கு கிடைக்கும். 
 

 
வழித்தடம் :
 
ஜம்னாமத்தூர் செல்ல நான்கு பாதைகள் உள்ளன. திருவண்ணாமலையில் இருந்து போளுர் சென்று செல்வது ஒருவழி. செங்கம் வழியாக மேல்பட்டில் உள்ள நீர்மத்தி மரத்தை பார்த்துவிட்டு ஜம்னாமத்தூர் செல்லலாம். 
 
வேலூரிலிருந்து அமிர்தி சென்று அருவி, விலங்கியல் பூங்கா பார்த்துவிட்டு அங்கிருந்து ஜம்னாமத்தூர் செல்லலாம். வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வழியாக காவலூர் தொலைநோக்கி மையத்தை பார்த்துவிட்டு ஜம்னாமத்தூர் செல்லலாம். 
 
இந்த நான்கு பாதையிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை தான் பேருந்து வசதி. அதனால் வெளியூர் சுற்றுலா பயணிகள் காரில் செல்வது சிறந்தது. 
 
 
– ராஜ்ப்ரியன்
 

 

 

 

Leave a comment