சர்க்கரையை கரைக்கும் வெந்தயம்

சர்க்கரையை கரைக்கும் வெந்தயம்! — மருத்துவ டிப்ஸ்,

”என்ன அம்மணி, கோனாரைப் பாக்கப் போகணும்னு சொன்னா, உன் வீட்டுக்கே அழைச்சிட்டு வந்திட்டியே?”
 ”அடியே வாசம்பா… வெந்தயக்கீரை என் வீட்டுக் கொல்லப்புறத்துலேயே கிடக்குதுடி… செடியா இருக்கிறப்பவே கீரையைப் பறிச்சிடணும். ‘ஒரு காலத்துல மாட்டுத் தீவனமா இருந்த வெந்தயம், சமையலுக்குப் பயன்படுத்தப்போய், இப்ப நோய் தீர்க்கற மருந்தாவே ஆயிடுச்சு!” என்றபடியே விறுவிறுவென கோனார் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினாள் அம்மணி, கூடவே வாசம்பாவும்.
பாயோடு பாயாகக்கிடந்த கோனாரைப் பார்த்த அம்மணி, ”என்ன கோனாரே, இப்படிக் குடிச்சே குடல் வெந்துபோயிக் கெடக்குற… எத்தனை முறை சொன்னேன் கேட்டியா… வயித்து வலி வராம என்ன பண்ணும்?”
”குடியை நிறுத்திட்டேன் அம்மணி அக்கா… நீ சொன்ன பத்தியத்தைத்தான் கடைப்பிடிக்காம விட்டுட்டேன். எனக்கு ஆக்கிப் போட யார் இருக்கா?” – வயிறு ஒட்டி, நாராகக்கிடந்த கோனாரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
”இன்னிக்கு நீ அநாதையாக் கிடக்கறதுக்கும் நீயேதான் காரணம்… இருக்கிற சொத்தையாவது காப்பாத்திக்கலாம்னு உன் மகனுங்க… கைவிட்டதும் குடியினாலதானே” என்ற அம்மணி, உலையை வைத்து, சாதம் ஆக்கினாள். வெந்தயக்கீரையை ஆய்ந்து, பாசிப்பயறு சேர்த்து புளிக்குப் பதிலாக தக்காளி, வெங்காயம் சேர்த்து கூட்டு மாதிரி செய்தாள்.
”கையில சல்லிக் காசு இல்லாம, பேசக்கூட ஆளில்லாமப் போறப்பதான் உறவுங்க அருமை புரியுது… என்ன செய்ய?”
”உங்க உறவுல வேகுறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகுறது மேல்னு உன் மணவாட்டி மகனுங்ககூட போயிட்டா… கண் கெட்டப்புறம் சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோசனம்பா…” என்றபடியே சாதத்தில், வெந்தயக்கீரைக் கூட்டைப் போட்டு தந்தாள் வாசம்பா. பசியால் மயக்க நிலையில் இருந்த கோனார், சாதத்தை வாயில் அள்ளிப் போட்டார். முகத்தில் சோர்வு நீங்கி தெம்பாய் நிமிர்ந்த கோனாரின் கண்களில் ஆறாகப் பெருகியது நீர்.
”தெனமும் வெந்தயத்தை ஊறவெச்ச மோரைக் குடி… காரத்தைக் கண்ணுலகூட பார்க்காத. நீ சாதத்தை மட்டும் ஆக்கிக்கோ. ஒருவாரத்துக்குக் கீரை, கொளம்பு, பொரியலை நான் கொடுத்தனுப்பறேன்.” அம்மணி சொல்ல, வாசம்பாவும் தன் பங்குக்குப் பேசினாள்.
”வாதத்துக்குகூட மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்தே இல்ல. நல்லபடியா உடம்பு தேறினதும், உன் பிடிவாதத்தை விட்டுப்புட்டு, புள்ளைகளோட போய்ச் சேர்… அதுதான் உனக்கு நல்லது” என்ற வாசம்பா, அம்மணி பக்கம் திரும்பினாள்.
”வெந்தயக்கீரை அத்தனை குளிர்ச்சியா அம்மணி?”
”ஆமா வாசம்பா… வாரத்துக்கு மூணு நாள் வெந்தயக்கீரையைச் சமைச்சு சாப்பிட்டாப் போதும். உஷ்ணத்துனால ஏற்படுற வயிற்றுவலி சரியாயிடும். குடிப் பழக்கத்துனால பாதிக்கப்படற கல்லீரல்கூட பலப்படும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து கொஞ்சம் சோம்பும் உப்பும் சேர்த்து அரைச்சு மோர்ல கரைச்சுக் கொடுக்க வயித்துப்போக்கும் குணமாயிரும்.”
”வெந்தயத்துக்கு இத்தனை மகத்துவமா?”
”ராத்திரியில கொஞ்சம் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீர்ல ஊறவெச்சு, அந்தத் தண்ணியை காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, சர்க்கரை நோயோட வீரியம் குறையும்டி.”
”அடிக்கிற வெயிலுக்கு கண்ட இடத்துல கட்டி வந்து அவஸ்தைப்படுதுங்களே… அதுக்கு வெந்தயத்துல வைத்தியம் இருக்கா அம்மணி”
”வெந்தயத்துக்கூட சமஅளவு சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைச்சு, நீர்ல குழைச்சுத் தணல்ல களி போல கிண்டி, கட்டி மேல வெச்சுக் கட்டினா, நல்லாப் பழுத்து உடைச்சிடும்.”
”அடேடே…”
”அது மட்டுமா, வெந்தயத்தை ஊற வெச்சு அரைச்சு, பரு வந்த இடத்துல பூசினா உடனே சரியாயிரும். தலைக்குச் சீயக்காய் அரைக்கிறப்ப, வெந்தயத்தைச் சேர்த்து அரைச்சுத் தேய்ச்சுக் குளிச்சா, உடம்புக்கும் குளிர்ச்சி. முடியும் நல்லா வளரும்.”
”நம்ம பார்வதிக்குப் பொம்பளப் புள்ள பொறந்திருக்கு… ஆனா, தாய்ப்பாலே இல்லியாம்… என்னாடி பண்ணுறது?”
”தாய்பால் வராத தாய்மாருங்க, அஞ்சு கிராம் வெந்தயத்தை நல்லா வேகவெச்சி, கடைஞ்சிக்கணும். இதுகூடத் தேனைக் கலந்து சாப்பிட்டுவந்தா, தாய்பால் நல்லா சுரக்கும்.’
பேசிக்கொண்டே வந்த அம்மணி சுடலைமுத்து தோட்டத்தில் பசுங்காடாக இருந்த கறிவேப்பிலைச் செடிகளைப் பார்த்ததும் வாசனையும் யோசனையுமாக வாசம்பாவை அருகே அழைத்தாள் அம்மணி. அப்புறம் என்ன… கறிவேப்பிலை  கச்சேரிதான்!
நன்றி:பெட்டகம்

Leave a comment